படைப்புகள் மீது தீராக் காதல் கொண்ட தி.ஜா!

-மணா

இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ‘ஜானகிராமம்’ என்ற தலைப்பிலான கட்டுரையின் விரிவாக்கம்.
*
எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம்.

ஆனால் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் அவருடைய நூற்றாண்டு கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேசப்பட்டிருக்கிறார். எழுதப்பட்டிருக்கிறார்.

அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதின் சத்தான ஒரு அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும், எழுத்தாளருமான கல்யாணராமன் தொகுத்து ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஜானகிராமம்’ என்கிற உள்ளடக்கத்திலும், அளவிலும் கனமான தொகுப்பு நூல்.

தி.ஜா. மீது கொண்ட பிரியம் காரணமாக அவருடைய நாவல்களில் வரும் ஆண்களைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கும் கல்யாணராமனின் முன்னுரையே 45 பக்கங்கள் வரை “குன்று முட்டிய குருவி” என்ற தலைப்பில் அடர்த்தியாய் நீள்கிறது.

கதாகாலட்சேபம் செய்துவந்த தியாகராஜன் சாஸ்திரிகளின் மகனான தி.ஜா.வின் படைப்பு மனத்தைப் பற்றி விதவிதமாக தீராக் காதலோடு விவரிக்கிறார், வாசகர்களுக்கு அந்தரங்கமானவர்.

பாலியல் பிறழ்வுகளை மட்டும் சித்தரித்த படைப்பாளி அல்ல. மரபை விட உயர்வான இயல்புணர்வு கொண்டவர்.

குடும்ப நிறுவனத்தின் பொய்மைகளில் அடைபட மறுக்கும் சுதந்திரத்தின் நிறைவுடன், மனித மனத்தின் நிர்வாணத்தைக் காட்டும் செவ்வியல் கலைஞர்.

வாழ்வின் அர்த்தம் தேடுவதைப் புனைவுகளால் செய்து கொண்டிருந்த நித்தியர் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிற கல்யாணராமனின் அயராத வேட்கையின் அடையாளம் இந்தப் பெரும் தொகுப்பு (102 கட்டுரைகள்).

இதில் படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், பெண்ணியவாதிகள், தேர்ச்சியான வாசகர்கள் என்று பலரும் அடக்கம்.

தி.ஜா என்கிற நூட்பமான படைப்பாளியின் நாவல், சிறுகதை, பிரயாண நூல், நாடகம், மொழி பெயர்ப்பு என்று அவருடைய எழுத்து துலங்கிய எல்லாவற்றையுமே அவரவர் கோணத்தில் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

தொகுப்பு முழுவதும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீண்டாலும், தி.ஜா வின் படைப்பு மொழியின் வசீகரம் இவற்றிலும் இருக்கிறது. தேர்ந்த ரசனை மிளிர்கிறது.

அனைத்திலும் வெளித்தெரிவது தி.ஜா.வின் நிதானமும், மென்மையும், மொழி ஆளுமையும், பேரன்பும் கொண்ட அவருடைய முகம் தான். நூற்றாண்டைத் தொட்டாலும் அவருடைய படைப்புலகம் இளமை கசியும் இயல்போடு இருப்பது காலத்தின் விசித்திரம்.

ஆய்வின் சில துளிகள் மட்டும் இங்கே. தி.ஜா.வின் முதல் நாவலான ‘அமிர்தம்’ தேவதாசி மரபில் வளர்ந்த பெண், தான் விரும்பும் காதலனையும் மறுத்து, உயர்கல்வி கற்கச் செல்கிறார்.

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருளைக் கையாண்டிருந்தாலும், முரண்கள் அனைத்தும் வெளிப்படும்படி தி.ஜா. எழுதிப் பார்த்த முயற்சி இது” என்கிறார் பெருமாள் முருகன்.

திராவிட இயக்கவியலாளரான அ.அருள்மொழி அமிர்தம் நாவலை ‘சின்ன இதிகாசம்’ என்பதோடு, 1944ல் தேவதாசிகளுக்கு எதிரான கலகக்குரல் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில் ஜானகிராமன் 23 வயதில் ‘கிராம ஊழியன்’ இதழில் இந்த நாவலை எழுதியிருப்பதை வியப்புடன் சமூகவியல் பார்வையுடன் குறிப்பிட்டிருப்பது ஆய்வின் சிறப்பு.

தேவதாசி முறை ஒழியப் பாடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அதே சமூகத்தினரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டு, அவருடைய தலைமுடி வெட்டப்பட்டு, பொய் வழக்குகள் போடப்பட்ட காலத்தில், பெரியார் மீதும் பொய் வழக்குகள் புனையப்பட்ட காலத்தில் தேவதாசி மரபில் வந்த அமிர்தம் மரபின் முடிச்சைத் துறந்து உயர்கல்வி கற்கச் செல்வதை விவரிக்கும் அருள்மொழி நிறைவாக இப்படிச் சொல்கிறார்.

“தி.ஜா.வின் கேள்விகள் சுய மரியாதை இயக்கத்தின் பிரச்சார மேடைகளை நினைவூட்டுகின்றன”

அதிகம் விவாதத்திற்கு ஆளான ‘மோக முள்’ நாவலை நவீன காவியம் என்கிறார் சு.வேணுகோபால்.

“இந்த நாவலில் தி.ஜா அடைந்திருக்கும் கலை உச்சத்தை நவீனனால் எட்டிக்கூட நிற்க முடியாது. வாசகனுக்கு இந்நாவல் தருவது பேருணர்ச்சி” என்கிறார்.

யமுனா, பாபு, தங்கம்மாள் இவர்களுக்கிடையிலான உறவைப் பற்றிப் பேசும் மோகமுள் ‘அறிவு தான் தைரியம்’ என்றும் சொல்கிறது.

மோகமுள்ளைத் திரைப்படமாக்கிய ஞானராஜசேகரனிடம் அருள்செல்வன் எடுத்த விரிவான நேர்காணலும் தொகுப்பில் இருக்கிறது.

“எழுத்தின் மூலம் காட்சிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறவராக தி.ஜா.வைக் குறிப்பிடும் ஞானராஜசேகரன், தி.ஜா நாவலில் ஆயிரம் விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

அவை அனைத்தையும் திரைப்படத்தில் கொண்டு வர முடியாது. அது சாத்தியமும் இல்லை” என்கிறார்.

மோகமுள்ளை மலையாளத்தில் மொழி பெயர்த்திருப்பவர் சி.ஏ.பாலன். “சங்கீதம் இந்த நாவலில் மனிதர் அல்லாத பாத்திரத்தைப் போலிருக்கிறது” என்றிருக்கிறார் மலையாளத்தில் இந்நாவலை விமர்சித்திருக்கிறவரான அனில்குமார்.

‘அன்பே ஆரமுதே’ நாவலில் கதாநாயகனாக வரும் அனந்தசாமியைப் புத்தருடன் ஒப்பிடுகிறார் கிருஷ்ணன்.

தன்னுடைய மனதைப் புரட்டிப் போட்ட அகவய ஆன்மீக அனுபவம் என்கிறார். பௌத்தத்தில் சொல்லப்படும் “இக்கணத்தில் இருக்கும் நான் வேறு; அடுத்த கணத்தில் இருக்கப் போகும் நான் வேறு” என்று நாவலை வாசித்தபிறகு தனக்குள் நிகழ்ந்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

பிரபலமான ‘அம்மா வந்தாள்’ பற்றிச் சிலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த நாவலின் மையமான அலங்காரத்தம்மாள் “தான் பார்த்த ஐந்தாறு பெண்களின் கலவை” என்றிருக்கிறார் தி.ஜா.

1966-ல் வெளிவந்த இந்த நாவலை “அடல்ட்ரீயில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் மகனது நிலையை அணுகிப் பார்க்க நமக்குத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு” என்கிறார் பாலசுப்பிரமணியன்.

‘உயிர்த்தேன்’ நாவல் பற்றி அடர்ந்த சொற்களில் விமர்சித்திருக்கும் சுகுமாரன் “தி.ஜா. நாவல்களில் வரும் பெண்கள் பொதுவாகச் சாதாரணமானவர்கள் அல்லர். பெண்ணுக்கு என்று சமூகமும், மரபும் வரையறைத்து வைத்திருக்கும் எல்லைகளை மீறுபவர்கள். உயிர்த்தேன் நாவலில் வரும் கெங்கம்மாளும் அப்படித்தான்” என்கிறார்.

‘மரப்பசு’ நாவலைத் தனக்கான பார்வையுடன் அணுகியிருக்கும் சமூகச் செயல்பாட்டாளரான ஓவியா, அதில் வரும் நாயகியான அம்மணியைப் பற்றி

“தாலியைச் சமுதாயத்தின் மீது ஆதிக்கப் புள்ளிகளுடனும், சமுதாய அநீதிகளுடனும் இணைப்பதை அறிந்து, அதனை மறுதலித்த அம்மணியைப் போன்றதொரு ஒரு நாயகி தமிழ் இலக்கியத்தில் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“கல்யாணம் ஒரு குற்றம்”, “விவாகம் தவறு என்றால், விவாகரத்து தானே சரியானதாக இருக்க முடியும்?” என்று வினவும் அம்மணி உண்மையில் தர்க்கக் களஞ்சியம் என்கிறார் ஓவியா.

மனுநீதிக்கு எதிரான குரலாகவும் பார்க்கப்படுகிறது மரப்பசு நாவல். ‘நளபாகம்” நாயகன் காமேச்வரனோ தன்னுடைய பூணூல் அடையாளத்தையே துறந்து, கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவித்த பாரதியை “அண்ணன்” என்கிறான்.

அந்த நாவலை ஆய்வு செய்திருக்கிற ஸ்டாலின் ராஜாங்கம், “பிராமணப் பிறப்புக் கொண்ட ஒருவன் மூலத்திற்குத் திரும்பாமல் பூணூலைக் கழற்றி எறிகிறான் என்று எழுதியிருக்கிறார் தி.ஜா” என்கிறார்.

தி.ஜா மொழி பெயர்த்த குள்ளன், அன்னை போன்ற மொழிபெயர்ப்புகளைப் பற்றித் தனித் தனிக்கட்டுரைகள்.

இத்தாலிய நாவலாக அன்னை பற்றி, “இத்தாலியச் சிந்தனையில் உதித்த வார்த்தைகளின் இடத்தில் தமிழ்ச்சொற்கள் சிம்மாசனம் இட்டு அமர்வது எத்தனை அழகு” என்கிறார் பத்மஜா நாராயணன்.

பிராமணராகப் பிறந்திருந்தாலும், வளர்ப்பால் படையாச்சிப் பெற்றோர் மூலம் வளர்க்கப்பட்ட சிவஞானம், ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறப்பின் மூலத்தைத் தெரிந்து கொண்டு, பிராமண வாழ்வு வாழ முயன்றாலும், அது முடியாத நிலையில், தான் வளர்ந்த சாதிக்கே திரும்புகிறான்.

“அவன் பிராமணன் ஆவது சாத்தியமே இல்லாதது. அதனால் தான், கடைசியில் பூணூலைக் களைந்து ஜன்னல் வழியாக எறிந்துவிட்டு, மறுபடியும் படையாச்சியாகிறான்” என்கிறார் ஆய்வு செய்திருக்கிற த.ராஜன்.

அடுத்து தி.ஜா.வை அடையாளப்படுத்தும் பல முக்கிய சிறுகதைத் தொகுப்புகள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. தனித்து ‘குழந்தைக்கா ஜூரம்?’ என்று எழுத்தாளன் படும்பாட்டை மையாகக் கொண்ட தி.ஜா.வின் ஒரு சிறுகதை கூட ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது சுந்தரபுத்தனால்.

‘பிடிகருணை’ நூலை விமர்சிக்கிற செல்வ புவியரசன் கட்டுரைக்கிடையில் வெளிப்படுத்தும் யதார்த்தம் இது.

“இக்கதைகளை மொத்தமாகப் படிக்கும்போது, ஐம்பதாண்டுக்கு முன்னால் குழந்தைகள் சுதந்திரமாகச் சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டிருந்ததையும் புரிந்து கொள்ள முடிகிறது.

‘பிடிகருணை’யில் ஒரு வாண்டு பொறந்த மேனியோடு பெட்டிக்கடைக்கு மிட்டாய் வாங்க வருகிறது. ‘பாயசத்தில்’ ஐந்தாறு வயதில் ஒரு குட்டி, காவிரியில் குளித்துவிட்டு அம்மணமாகவே திரும்பிக் கொண்டிருக்கிறாள்.

பேசக்கற்றுக் கொள்வதற்கு முன்பே எது நல்ல தொடுகை, எது தவறானது என்று கற்றுத்தர வேண்டிய ஒரு காலத்தில் வாழும் நம்மைக் குழந்தைகள் மீதான அன்றைய சமூகத்தின் பார்வை வெட்கம் கொள்ளச் செய்கிறது”

“தி.ஜா.வின் கதைகளில் பெண் தன்மை கொண்ட ஆண்களும், அசாத்தியத் திறமையும், சிறந்த அழகும் கொண்ட பெண்கள் இடம் பெறுதல் வாடிக்கை” என்கிறார் அமரந்தா.

“1937-லில் இருந்து 1982 வரை அப்பா எழுதிய காலத்தில் அவருடைய படைப்புகள் துணிச்சலும், தைரியமும் கொண்டவையாகவே இருந்தன. பல கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கும் பொருத்தமாக இருக்கின்றன” என்கிறார் தி.ஜா.வின் மகள் உமாசங்கரி.

தி.ஜா.வின் பல்வேறு படைப்பு முகத்தைச் சொல்லும் விதத்தில் அவருடைய பயணக் கட்டுரைகளை பொன்.தனசேகரன், அமுதவன் உள்ளிட்ட பலர் எழுதியிருக்கிறார்கள்.

ஜப்பான் பயண அனுபவத்திலும், அங்குள்ள குழந்தைகளிடம் பேரன்பு கொண்டவராகவே தி.ஜா இருந்திருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பொன்.தனசேகரன்.

கதைசொல்லியின் மொழியில், தம் பயணக் கட்டுரையையும் கதை போலவே கொண்டு செல்வது தி.ஜா.வுக்குக் கை வந்த கலை.

“நாற்பது வயது, ஐம்பது வயது என்று ஆனாலும், நமக்குள்ளே இருக்கிற குழந்தை குழந்தை தான். அது எப்போதும் சிரிக்கும். வியக்கும்.

வியக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே ஓடி வரும். வானைப் பார்க்கும். பெரியவனான உடம்பில், படித்த உடம்பில் நீ இருக்கிறாய்.

நீயும் பெரியவனாக இரு என்று அதைப் பார்த்துச் சொல்ல முடியாது” என்று ‘கருங்கடலும், கலைக்கடலும்’ நூலில் சொல்கிறார் தி.ஜா.

“அந்தக் குழந்தையின் உற்சாகத்தை தி.ஜானகிராமனின் பயண அனுபவங்களிலும் பார்க்க முடிகிறது” என்கிறார் பொன்.தனசேகரன்.

அதே பயண நூலைப்பற்றி எழுதுகிற ந.கவிதா “தி.ஜா. சுய சாதி குறித்து ஒருபோதும் பெருமையோ, உயர்வோ கொண்டவரல்லர் என்பதைத் தெளிவாக்குவதுடன்,

பிறப்பினால் யாரும் உயர்வானவர்களாக முடியாது, நற்பண்பினாலும், நடத்தையாலுமே மனிதன் உயர்ந்தவனாகிறான் என்பதே அவருடைய சித்தாந்தமாக இருந்ததையும் காட்டுகிறது.” என்கிறார்.

தி.ஜா, சிட்டியுடன் இணைந்த எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி’ நூலைப் பற்றி எழுதியிருக்கும் தங்க ஜெயராமன், அந்த நூலின் வர்ணனையை வியக்கிறார்.

நதி செல்கிற வழி, கேட்கும் சத்தங்கள், பூமியைத் தொட்டும் தொடாமலும் ஏற்படுத்தும் பிரமை பற்றிச் சொல்லிவிட்டு, “ஒவ்வொரு கிளை நதியோடும் போய்ப் பார்க்க வேண்டும் என்றால் நாயன்மாராக வேண்டும். குறைந்தது பண்டாரம் அல்லது ‘ஹிப்பியாக’வாவது இருக்க வேண்டும்” என்று தி.ஜா எழுதியிருப்பதைச் சிலாகிக்கிறார்.

‘தி.ஜா.வை எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று சாவி சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார் அமுதவன்.

“பெருகிப் பெருகி விரைந்து சீறும் ஓடையாகவும், அகண்ட காவேரியாகவும் வளர்ந்து வளர்ந்து தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறது.

பிறகு தன் உடலையே பல கூறும் கிளைகளுமாக்கி மாந்தர்களின் உய்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கடைசியில் அடக்கமும், பணிவும், சோர்வும், நிறைவுமாகக் கடலில் கலந்து விடுகிறது” என்று தி.ஜா.வின் விவரிப்பைக் குறிப்பிடுகிற அமுதவன், “இந்த இடங்களை தி.ஜானகிராமன் தான் எழுதியிருக்கக் கூடும்” என்கிறார்.

“மிகவும் அமைதியான, ஆழமான நகைச்சுவை ததும்பும் எழுத்துக்குச் சொந்தக்காரரான தி.ஜா தான் உண்மையான ஒரு ரெபல்” என்கிறார் தி.ஜா.வின் கட்டுரைகளை ஆய்வு செய்திருக்கும் ரெபல் ரவி.

“அம்மா கை ஜில்லென்று இருக்கிறது, வாழை இலையைக் கையில் சுற்றிக் கொள்வது போல்”, “அவர் சிரித்த முகத்துடன் கேட்டது அழகாக இருந்தது. பட்டு வேட்டி மாதிரி” என்று தி.ஜா.வின் அற்புதமான உவமைகளைப் பட்டியலிடும் மாலன்,

“தி.ஜா.வின் படைப்புகளில் உளவியல் பேசப்பட்ட அளவுக்கு, அவரது அறச்சீற்றம் கவனம் பெறவில்லை” என்று அவருடைய குறுநாவல்களைப் பற்றிச் சொல்லிச் செல்லும்போது குறிப்பிடுகிறார்.

‘பேரன்பின் உயிரோவியங்கள்’ என்று எழுத்தை உச்சி முகர்கிறார்.
தான் வாழ்ந்த காலம் முழுவதும் படைப்பூக்கத்தின் எழுச்சி குறையாதபடி, வெகுஜன ஊடகங்கள், சிறுபத்திரிகைகள், நாடகங்கள், திரைப்படம் என்று இயங்கியிருக்கும் ஜானகிராமன் என்ற படைப்பாளிக்கு அவருடைய நாற்றாண்டு நேரத்தில் செலுத்தப்பட்ட நிறைவான அஞ்சலி என்று கல்யாணராமன் தொகுத்திருக்கும் ‘ஜானகிராமம்’ தொகுப்பு நூலைச் சொல்ல முடியும்.

அவருடைய படைப்பின் நிறை, குறைகள் உட்பட அனைத்தும் பாரபட்சமற்ற பார்வையில் முன்வைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

வெகுநுட்பமான அவதானிப்பு, இயற்கை, சுற்றியுள்ள மனிதர்களின் மீதான நேசம், இசையின் மீதான மோகம், நுகரும் வாசனை, காதில் விழும் ஒலி என்று மனிதர்கள் தொடர்பான அனைத்தின் மீதும்,

மரபின் எல்லைகளை இயல்பாக மீறி, பெண்களைக் காட்சிப் படுத்தியிருப்பத்தில் பிரமிப்பு கலந்த வியப்பையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.
பரவசப்படவும் வைக்கிறார் தி.ஜானகிராமன் என்கிற எழுத்துக் கலைஞர்.

தொகுப்பைப் படிக்கும்போது தி.ஜா.வுக்குப் பிடித்தமான காவிரியின் ஈரத்தில், ஒரு ராக ஆலாபனையுடன், அந்தி சாயும் நேரத்தில் நடக்கும் உணர்வைப் பெற முடிகிறது.

தொகுதி முழுக்க தி.ஜா.வின் வெகு ரசனையான வரிகள் இழையோடுகின்றன. கால அடுக்கைத் தாண்டி தி.ஜானகிராமனின் எழுத்துக்கள் இலக்கிய வாசிப்புப் பரப்பில் இன்னும் உயிர்ப்போடு அலையடித்துக் கொண்டிருக்கின்றன.

நிறைவாக, மாலனுக்கு தி.ஜா. எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது அவருக்கே வெகு துல்லியமாகப் பொருந்தும்.

“ஞாபகத்தைத் தூங்கவிடாமல் அடிப்பது தான் நல்ல படைப்பு”
*
‘ஜானகிராமம்’
தொகுப்பாசிரியர்: கல்யாணராமன்
பக்கங்கள் 1032
விலை – ரூ.1175
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி சாலை,
நாகர்கோவில்-629001

Comments (0)
Add Comment