நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ‘தக்ஸ்’.
ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர் ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது.
படம் குறித்தூ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பிருந்தா, “தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத்தான் இருந்தது.
ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்குள் நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “இசை இயக்குநராக, நான் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன். அந்தப் படங்களின் கதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் படத்தின் இறுதிப் பதிப்பு பார்க்கும்போது ஏமாற்றமாகி விடுகிறது.
எந்தத் திரையுலகிலும் இது சகஜம்தான், ஆனால் தக்ஸ் திரைப்படம் இதில் தனித்துவம் வாய்ந்தது.
பிருந்தா மேடம் ஸ்கிரிப்டை விவரித்தபோதே கதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது முழுப்படமாக இன்னும் பிடித்துள்ளது.
இசை மற்றும் பாடல்களில் அவர் எந்த தலையீடும் செய்யவில்லை. அதே போல் எந்த சமரசமும் இல்லாமல், தான் சொன்னதைச் சரியாகப் படமாக்கியிருக்கிறார்” என்று பாராட்டினார்.
தயாரிப்பாளர் தேனப்பன், “மெல்லிசைப் பாடலைப் படமாக்கப் போகும்போதெல்லாம், உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் பிருந்தா மாஸ்டர்.
இன்று ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் பட இயக்குநராக அவரைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.
நடிகை ரம்யா, “இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கும், என் அம்மாவுக்கும், பிருந்தா மாஸ்டருக்கும் நன்றி.
என்னை மாடலாக காட்டிய சில விளம்பரங்களுக்கு அவர்தான் நடனம் அமைத்தார்.
என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் அட்டகாசமாக வந்துள்ளது” என்று நெகிழ்ந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.