டாடா – எமோஷனல் ‘ஸ்லோ’ டிராமா!

‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ ஆக்‌ஷன், த்ரில்லர் முதல் ரொமான்ஸ் கதைகள் வரை திருப்பங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களே அதிகம்.

அது பொய் என்று சொல்ல வேண்டுமானால், முழுக்க கண்ணீர் மழையில் நனைய வைக்கும் ‘எமோஷனல் மெலோ ட்ராமா’க்கள் திரையில் ஓட வேண்டும்.

அவை ‘ஸ்லோமோஷனில்’ நகர்வதாக குற்றச்சாட்டும் எழலாம். அதையெல்லாம் மீறி, படம் பார்க்கப் பெருமளவில் ரசிகர்கள் திரள வேண்டும். அப்படியொரு முயற்சிதான் ‘டாடா’.

உண்மையிலேயே ‘டாடா’ ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதா?

காதல் டூ கல்யாணம்!

ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கத் தொடங்கி கல்யாணத்தில் முடிவதையோ அல்லது கல்யாணத்திற்குப் பிறகு காதல் மலர்வதையோ சொல்வதுதான் நம்மூர் திரைப்படங்களின் வழக்கம்.

இதற்கு நடுவே, ‘லிவிங் டுகெதர்’ பற்றிக் கூட சில படங்கள் வந்துவிட்டன. இந்த நிலையில்தான், ‘இளம் வயது பெற்றோர்’ பற்றிப் பேசியிருக்கிறது ‘டாடா’.

மணிகண்டன் (கவின்), ஸ்வேதா (அபர்ணா தாஸ்) இருவரும் பொறியியல் கல்லூரியொன்றில் படித்து வருகின்றனர்.

ஒருவரையொருவர் காதலிக்கின்றனர்; ஒன்றாகத் தங்குகின்றனர்.

நான்காம் ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் முன்னரே ஸ்வேதா கர்ப்பமாகிறார். கருவைக் கலைத்துவிடலாம் என்று மணிகண்டன் சொல்வதை ஏற்க மறுக்கிறார்.

விஷயம் தெரியவந்து இரு வீட்டாரும் புறக்கணிக்க, இருவரும் தனியாக வாழத் தொடங்குகின்றனர்.

தேர்வுக் கட்டணம், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை போன்ற பொருளாதாரத் தேவைகளுக்காக ஒரு வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார் மணிகண்டன்.

தினசரிச் செலவுகள் இருவரையும் புரிதல் அற்றவர்களாக மாற்றுகின்றன. ஒருநாள் மோதல் உச்சத்தை அடைய, ஸ்வேதாவின் அழைப்பை ஏற்காமல் மொபைலை ‘ஆஃப்’ செய்கிறார் மணிகண்டன். அன்றுதான் ஸ்வேதாவுக்குப் பிரசவ வலி ஏற்படுகிறது.

விஷயம் தெரிந்து மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே அவர்களது பச்சிளம் குழந்தை மட்டும் இருக்கிறது. ஸ்வேதாவை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுவிட்ட விவரம் மணிகண்டனுக்குத் தெரிகிறது. எங்கு தேடியும் அவரைப் பற்றிய தகவல் இல்லை.

தனியாளாகக் குழந்தையை வளர்க்க கஷ்டப்படும் மணிகண்டன், அதனை விட்டு விலக முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் அதுவே தனக்கான வாழ்க்கை என்று உணர்கிறார்.

நான்கைந்து ஆண்டுகளில் மணிகண்டன் வாழ்க்கையே தலைகீழாகிறது.

மகனுக்காகவே வாழும் அவருக்கு, நண்பர் மூலமாக ஒரு நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கிறது. அந்த வேலைக்குச் சென்றால், மேலதிகாரியாக ஸ்வேதாவே வந்து நிற்கிறார்.

மீண்டுமொருமுறை ஸ்வேதாவை நேரில் பார்த்தால் ஆத்திரத்தைக் கொட்ட வேண்டுமென்று துடித்த மணிகண்டனால், அவரை ஒரு நொடி கூட எதிர்கொள்ள இயலவில்லை. அதன்பிறகு, ஸ்வேதா – மணிகண்டன் வாழ்க்கை என்னவானது என்பதைச் சொல்கிறது ‘டாடா’.

சோகமும் சுகமே!

வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ‘தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல, இதிலும் ஐந்தாறு வயதான மகன் மீது அன்பு பாராட்டும் தந்தையாகத் தோன்றியிருக்கிறார் கவின்.

கொஞ்சம் சோகம், கொஞ்சம் மகிழ்ச்சி, மீண்டும் சோகம் என்ற பாணியில் இதிலும் காட்சிகள் சுழல்கின்றன.

ஆரம்பக் காட்சியிலேயே படத்தின் கதையைச் சொல்லிவிட வேண்டுமென்று ஒரு திரைக்கதை கோட்பாடு உண்டு. தூங்கிக் கொண்டிருக்கும் நாயகனைக் காதலுடன் பார்க்கும் நாயகி.

பின்னணியில் பக்கத்து வீட்டில் ஒலிக்கும் கணவன் மனைவி மோதல் சத்தம். அதன் வழியே மொத்தப்படத்தின் சாராம்சமும் இதுதான் என்பதை உணர்த்தியிருப்பது அருமை.

எழில் அரசுவின் ஒளிப்பதிவு நீளமான ஷாட்களை ஆங்காங்கே தந்திருக்கிறது. அவை ஒரு ‘சீரியஸ் படத்தை’ பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

உணர்வுகளை மையப்படுத்திய கதை என்பதால், அதிகமாக க்ளோஸ் அப், எக்ஸ்ட்ரீம் குளோஸ் அப், மிட் ஷாட்களை பயன்படுத்தியிருப்பது திரையுடன் நம்மை ஒன்ற வைத்திருக்கிறது.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் வசீகரிக்கின்றன. இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் நகைச்சுவையூட்டப் பெருமளவில் அவரது பிண்ணனி இசை உதவியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன், கலை இயக்குனர் சண்முகராஜா உட்படத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தும் கதை மீது நம்பிக்கை கொண்டு செயலாற்றியிருக்கிறது.

இயக்குனர் கணேஷ் பாபு, அளவெடுத்து தைத்த சட்டையைப் போல திரைக்கதையில் காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார். காட்சியின் கனத்தை நடிப்புக்கலைஞர்களின் தோளில் ஏற்றியிருக்கிறார். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

தாயின் புகைப்படத்தை குழந்தை ஒருமுறை கூட பார்க்கவில்லையா, நாயகி முன்மொழிந்த பெயரை குழந்தைக்கு வைக்காமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்பது உட்படப் பல கேள்விகள் கிளைமேக்ஸில் தோன்றக்கூடும்.

இது போன்ற லாஜிக் மீறல்களே சென்டிமெண்ட் காட்சிகளுக்கு அழுத்தம் தருகின்றன என்பதால் அவற்றைத் தவிர்த்துவிடலாம்.

‘ஏற்கனவே இருக்குற கில்ட்டி பத்தாதுன்னு இந்த வீட்டுல வாடகை கொடுக்காம நான் தங்கணுமா’, ‘உங்களுக்கெல்லாம் உங்களால நாங்க நல்லா இருக்கனும், ஆனா உங்களை விட நல்லா இருந்திரக் கூடாது’ என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே யோசிக்க வைக்கின்றன.

விடிவி கணேஷும் கவினும் காவல்நிலையத்தில் இருக்கும் காட்சி நெகிழ வைத்திருக்கிறது.

நல்ல ஜோடி!

பொதுவாகவே காதல் கதைகளுக்கு நல்ல ஜோடி கிடைக்க வேண்டும். இதில் கவின் – அபர்ணா தாஸ் இருவரும் அதைப் பூர்த்தி செய்திருக்கின்றனர்.

இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சியே படத்தின் தொடக்கம் என்பதால், இருவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’ பற்றி நம் மனதில் கேள்வியே எழுவதில்லை.

விஜய், சிவகார்த்திகேயன் சீரியஸ் கதைகளில் தோன்றினால் எப்படியிருக்கும் என்பது போல திரையில் வந்து போயிருக்கிறார் கவின்.

சுருள் தலைமுடியோடு ‘ஜஸ்ட் லைக் தட்’ மனநிலையை வெளிப்படுத்தும் உடல்மொழியிலிருந்து மாற்றம் கண்டு, வெகு இயல்பாகத் திரையில் சோகத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் கவின். பாராட்டுகள்!

கல்லூரியில் படிக்கும் பெரிய பெண் தோற்றம் அபர்ணா தாஸுக்கு பொருந்தியிருக்கிறது.

அதுவே, பின்பாதியில் குழந்தை பெற்ற ஒரு தாய் என்று சொல்வதை ஏற்க வைக்கிறது. கிளைமேக்ஸில் வரும் காட்சி தவிர்த்து, மற்ற இடங்களில் அவரது நடிப்பு பாந்தமாகப் பொருந்தியிருக்கிறது.

கவின் பெற்றோராக வரும் பாக்யராஜ் – ஐஸ்வர்யா இரண்டொரு காட்சிகள் தான் வருகின்றனர். அபர்ணாவின் பெற்றோராக நடித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ் முன்பாதியில் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்கிறார். இதேபோன்ற வாய்ப்புகள் கிடைத்தால், அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் அமையலாம்.

பின்பாதியில் வரும் பிரதீப் ஆண்டனி, பௌஸி போன்றோர் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து ஒரு டஜன் பேரும் பின்னணியில் சில நூறு பேரும் திரையில் நடமாடியிருக்கின்றனர். தேவையான இடங்களில் மட்டும் அவர்களது இருப்பு உள்ளது.

‘டாடா’ கதையை ‘லவ் டுடே’ போன்று முழுக்க சிரிப்புமயமாகவும் தந்திருக்க முடியும்.

அதைத் தவிர்த்து, இளம் வயது பெற்றோராக இருப்பது ரொம்பவே கடினம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதோடு, அது ஒரு சுமையல்ல என்றும் சொல்லும் வகையிலான ட்ரீட்மெண்டை கொண்டிருக்கிறது திரைக்கதை.

அதுவே, நன்கு பழக்கமான கதை என்றபோதும் ‘டாடா’வை பார்த்து ரசித்து நெகிழ துணை நிற்கிறது. அதனை நேர்த்தியாக நிகழ்த்தியிருப்பதற்கு கணேஷ் பாபு அண்ட் குழுவினருக்கு பாராட்டுகள்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment