நமது மனநிலையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது சிறப்பான திரைப்படத்திற்கான இலக்கணங்களில் ஒன்று; அதேநேரத்தில், புதிதாக ஒரு உலகைப் பார்வையாளர்கள் முன்னே வைக்க வேண்டும்.
அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை, கதைப்போக்கினை, களங்களை, காட்சிகளைக் கொண்ட படங்கள் கொண்டாடப்படுகின்றன. திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுபவையாகவும் அமைகின்றன.
ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதை வசனத்தில் ஷாகித் அராபத் இயக்கியிருக்கும் ‘தங்கம்’ திரைப்படம் அப்படியொன்றாக அமைந்திருக்கிறது.
மங்கிப்போன வாழ்வு!
தங்க நகைகளைச் செய்து, இந்தியாவெங்கும் இருக்கும் கடைகளுக்கு அனுப்பி வருகிறார் திருச்சூரைச் சேர்ந்த முத்து (பிஜு மேனன்). அந்த நகைகளை எடுத்துச் சென்று ஒப்படைப்பவராக உள்ளார் கண்ணன் (வினீத் சீனிவாசன்).
ஒருமுறை கோயம்புத்தூருக்கு நகைகளை எடுத்துச் செல்கிறார் கண்ணன். அப்போது முத்துவும் பிஜோய்யும் (வினீத் தட்டில் டேவிட்) அவருடன் செல்கின்றனர்.
லாட்ஜ் ஒன்றில் இருவரையும் தங்க வைத்துவிட்டு, முத்துப்பேட்டை செல்கிறார் கண்ணன்.
அப்போது, போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்காக, மூன்று லட்ச ரூபாயையும் ஒரு தங்க சங்கிலியையும் லஞ்சமாக கொடுக்கிறார்.
போலீசாரிடம் சிக்குவதற்கான காரணம் என்னவென்பதை கண்ணன் முத்துவிடம் கூறவில்லை. முத்துவும் அவரிடம் எதுவும் கேட்பதில்லை.
இந்த நிலையில், கண்ணன் மும்பைக்கு நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறார். அங்கு லாட்ஜில் ரத்தக்காயங்களுடன் பலியாகிக் கிடக்கிறார். அறையில் இருந்த தங்க நகைகளைக் காணவில்லை.
கண்ணன் மரணம் பற்றி விசாரணையைத் தொடங்கும் மகாராஷ்டிர போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சாகல்கர் (கிரிஷ் குல்கர்னி), அது தொடர்பாகத் தகவல்கள் பெறுவதற்காக கேரளாவுக்கும் பின்னர் தமிழ்நாட்டுக்கும் பயணம் செய்கிறார்.
முடிவில், கண்ணன் மரணத்தின் பின்னணி என்னவென்பதைக் கண்டறிகிறார். அது என்ன என்பதோடு படம் முடிவடைகிறது.
மின்னும் இயல்பு கொண்ட தங்கத்தைச் சார்ந்து வாழும் தொழிலாளர்கள் எப்போதும் மங்கிப்போன வாழ்வையே கொண்டிருக்கின்றனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது ‘தங்கம்’ திரைக்கதை.
பட்டை தீட்டும் பயணம்!
அடக்கி வாசிப்பது என்ற பதம் நடிப்புலகில் பிரபலம். ‘தங்கம்’ படம் முழுக்கவே அப்படித்தான் அனைத்து பாத்திரங்களும் நம்மைக் கடந்து போகின்றன.
அதிகம் பேசாத, அதேநேரத்தில் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் திரிகிற ஒரு மனிதராக நடித்துள்ளார் வினீத் சீனிவாசன். அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பது திரைக்கதையில் பிடிபடும்போது, அவரது நடிப்பு கைத்தட்டல்களைப் பெறுகிறது.
பிஜு மேனனுக்கு இதில் பெரிய வேடமில்லை. ஆனால், ஒரு பாத்திரமாக மட்டுமே படம் முழுக்க வந்திருப்பது பெரிய விஷயம்.
அபர்ணா பாலமுரளி வந்த காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், அந்தந்த காட்சிக்குத் தேவையான தோற்றத்தைக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரியாக வரும் கிரிஷ் குல்கர்னி, அப்பாத்திரம் நேர்மையானது என்று வடிவமைக்கப்பட்டதற்கு நியாயம் செய்திருக்கிறார்.
வினீத் தட்டில் டேவிட், இந்திரா பிரசாத், அன்ஷுமான் ஜோஷி, வினீத் சீனிவாசனின் நண்பர்கள் அருள், விக்கியாக நடித்தவர்கள், மும்பை போலீசாராக வருபவர்கள் என்று அனைவருமே மிக இறுக்கமான நடிப்பைத் தந்துள்ளனர்.
வினீத்தின் நண்பர் அப்பாஸாக வரும் கலையரசனுக்காகவே, இதில் சுமார் இருபது நிமிடக் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கவுதம் சங்கரின் ஒளிப்பதிவு மிக சீரியசான படமொன்றைப் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தொடக்கத்திலேயே ஏற்படுத்தி விடுகிறது.
அதற்கேற்ப, கிரண் தாஸின் படத்தொகுப்பு ஒவ்வொரு காட்சிக்கும் கூர்மையான தொடக்கத்தையும் முடிவையும் தந்துள்ளது.
‘தேவி நீயே’ என்ற பாடல் தங்க நகை செய்பவர்களின் வாழ்க்கையையும் செல்வத்தை வேண்டும் ஒரு சாதாரண மனிதனின் உள்ளக்கிடக்கையையும் வலியுறுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாறான ஒரு வாழ்க்கை அனுபவத்தைச் சொல்ல, அதனைப் பயன்படுத்தியிருப்பது அருமை.
திரைக்கதையோடு இயைந்த இசையைத் தருவார் என்ற எண்ணத்தை இதில் மேலும் ஒருபடி அதிகப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் பிஜிபால்.
அதேபோல, கோகுல்தாஸின் கலை வடிவமைப்பும் வெவ்வேறு களங்களைக் கண் முன்னே காட்டுவதற்கு உதவியிருக்கிறது.
இயக்குனர் ஷாகித் அராபத், நம் கண் முன்னே நகைத்தொழிலில் ஈடுபடும் மனிதர்களின் அகவுலகத்தை, வார்த்தைகளில் விவரிக்க முடியாத துயரங்களை இதில் காட்டியுள்ளார்.
அந்த உலகின் நியதிகளையும் நடைமுறைகளையும் கேள்விக்குட்படுத்தும் வகையிலான படைப்பை முன்வைத்துள்ளார்.
குழப்பும் திரைக்கதை!
நாயகன் கண்ணன் எப்படிச் சிந்திக்கிறார், செயல்படுகிறார், மற்றவர்கள் முன் தன்னை எப்படி முன்வைக்கிறார் என்பதுதான் ‘தங்கம்’ படத்தின் பிரதான அம்சம்.
கார்பரேட் நிறுவனங்கள் நகை வியாபாரத்தில் தலையெடுத்தது முதல் கணக்கில் வராத தங்கத்தை கைமாற்றுவதில் இருக்கும் சட்டச் சிக்கல்கள் வரை பல பிரச்சனைகள் நகைத் தொழில் உலகில் உள்ளன.
அதனாலேயே பல மோசடிகளும் கொள்ளைகளும் தற்கொலைகளும் கொலைகளும் தங்கத்தை மையப்படுத்தி நிகழ்கின்றன.
இப்படத்திற்கு எழுத்தாக்கம் செய்த ஷ்யாம் புஷ்கரன், அப்படிப்பட்ட விஷயங்களை புடம் போட்டு விளக்கவில்லை.
ஆனால், நகைகளை நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் நடைமுறைகள் சட்ட நடவடிக்கைகளுக்கு எளிதில் ஆட்படுவதை மையக்கதையாக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டு போலீசாரிடம் பிடிபட்ட கண்ணன் உடனடியாக லஞ்சம் கொடுக்க முன்வருவது, கணக்கில் வராத தங்கமே அத்தொழிலில் புழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
கண்ணன் போன்ற தொழிலாளர்களின் மரணத்திற்குப் பின்னுள்ள காரணங்களும் கூட அதையே மையப்படுத்துகின்றன.
படம் பார்த்து முடித்ததும், சட்டென்று படம் முடிந்தாற்போல உணர்வெழுகிறது. ஒரு சிறப்பான கிரைம் த்ரில்லரை பார்க்கிறோம் என்ற எண்ணமே நம்மை இருக்கை நுனிக்கு வரும்போது, கிளைமேக்ஸில் நகைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் அபாயகரமான வாழ்வைச் சொல்லியிருக்கிறார் ஷ்யாம் புஷ்கரன்.
நிச்சயமாக, ஒரு திரைக்கதையாசிரியராக மிக நுணுக்கமான பாத்திரப்படைப்பை, களத்தை, அதற்கு நியாயம் செய்யும் காட்சிகளை அவர் முன்வைத்திருக்கிறார்.
ஆனால், சட்டென்று அந்த இடத்திற்கு வந்து நிற்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அதுவே படம் முடிந்ததும் திருப்தியைத் தராமல் போகிறது.
தங்கத்தின் மீதான பிரமிப்பை, அதன் மீதான பெருவேட்கையை, அதனை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணத்தை உடைக்க இப்படம் மெனக்கெடவில்லை.
அந்த நோக்கிலேயே படம் உருவாக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக, திரைக்கதை அந்த இலக்கை எட்ட முயற்சிக்கவில்லை. இந்த முரண் களையப்பட்டிருந்தால், இன்னும் சிறப்பான அனுபவத்தை ‘தங்கம்’ தந்திருக்கக்கூடும்!
– உதய் பாடகலிங்கம்