ஒரு பத்திரிகையாளரின் நெகிழ்ச்சியான அனுபவம்:
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமுஎச கலை மேடைகளில் கேள்விப்பட்ட பெயர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இன்று உலகறிந்த நடிகர். எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனித்துவமாக ஜொலிக்கும் நட்சத்திரம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்டு, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட புராதன நகரத்தைப்போன்று அற்புதமானவை அவரது கதைகள். விற்பனையில் சாதனை படைத்துவருகிறது அவரது பெருங்கதையான ‘குற்றப் பரம்பரை’ புதினம்.
வேல ராமமூர்த்தியுடன் எதிர்பாராத சந்திப்பு. நானும் நண்பர் ஏக்நாத்தும் வடபழனியில் அவரைச் சந்தித்தோம். மனந்திறந்து பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்.
“எனக்குப் புகழையும் பெருமையையும் தந்த சினிமாவுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்” என்றார்.
முதலில் ராணுவம், பிறகு அஞ்சல் துறை… அறுபது வயதில் பணி ஓய்வுக்குப் பிறகு இன்னொரு இன்னிங்ஸ். இன்று நிற்க நேரமில்லாமல், செலுலாய்டு வானில், ஓர் உற்சாக பறவையாக பறந்துகொண்டிருக்கிறார் வேல ராமமூர்த்தி.
இன்று அவரது படைப்புகள் திரைப்படங்களாக, வெப் தொடர்களாக உருவாகி வருகின்றன.
உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தன்னை மக்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்.
எழுத்து, சினிமா என இருவேறு படகுகளில் அழகிய பயணம்.
கம்பீரத்தை துளிகூட விட்டுக் கொடுக்காமல் நடித்த ஐந்து நடிகர்களில் ஒருவராக வேல ராமமூர்த்தியைப் பாராட்டியுள்ளது ஒரு செய்தி இணையதளம். உண்மைதான். நடிப்பின் இயல்பை சரியாகப் புரிந்துகொண்டு, அதை மிக நேர்த்தியாகச் செய்கிறார்.
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. வெளியில் மார்கழிப் பனி பேரன்புடன் பொழிந்து கொண்டிருந்து.
நன்றி: சுந்தரபுத்தன்