நிறத்தைத் தாண்டிய நேசம்!

நூல் அறிமுகம்: 

‘ஒரு மறக்க முடியாத அனுபவம்…’ என்று நூலை எழுதியுள்ள பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் பொருளடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று, இந்த அனுபவத்தை, நிறத்தைத் தாண்டிய நேசத்தை வாசிக்கும் நமக்கும் உயிருடன் ஒன்றிவிடும் அனுபவம் கிடைக்கிறது.

முதல் வரியிலிருந்து கடைசி வரியின் கடைசிச் சொல் வரை, நாயகன் பிரைத்வைட் நம்மோடு பயணிப்பது மற்றவரிடம் கடத்தத் தெரியாத அல்லது வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு.

பிரைத்வைட்டின் வாழ்க்கைப் போராட்டம் பள்ளி நிர்வாகம் சார்ந்த போராட்டம் அல்ல. அது இனம் சார்ந்தது, சமூகம், பண்பாடு, மனித மாண்பு சார்ந்த போராட்டம்.

தொடக்கம், போராட்டம், பயணம், பிரியம் என்று நிறத்தைத் தாண்டிய நேசம் நம்மை நெகிழ வைக்கும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

இனவெறியின் ஆணிவேர் இன்னும் மறையவில்லை என்கிறார் மாடசாமி. உலகெங்கும் அது தன்னை நிலைக்கச் செய்ய வேறு வேறு வடிவம் எடுத்து கொக்கரிக்கிறது.

நாகரிகம், பண்பாடு என அனைத்தும் மாறிவிட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளது இந்த உலகம். ஆனால் உண்மை அப்படியா?

ஏனென்றால் 2020 இல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பு இளைஞன் வெள்ளை போலீசார் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதை யாருமே மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவிலும் கறுப்பு நிறம் பற்றிய பார்வை எப்படி என்று நான் சொல்லி விளங்க வேண்டியதில்லை.

பிரைத்வைட் என்ற மனிதர் வாழ்வாதாரத்திற்காக, பிழைப்புக்காக ஆசிரியராகப் பொறுப்பேற்று பிறகு சமூகப் பொறுப்பை மாணவர்கள் வழியாக எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் ஆணிவேர்.

அவர்படும் அவமானங்கள், சமூகப் புறக்கணிப்பு, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கறுப்பினத்தவரின்மீது இந்த சமூகம் ஊட்டியிருக்கும் வெறுப்புணர்வினால் அவர் சந்திக்கும் சவால்கள் என ஒருபுறம்.

அவற்றைக் கடந்து தன்னை வெள்ளைநிற மாணவர்கள் பயிலும் பள்ளியில் நிலைநிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் மனதில் சம்மனம் போட்டு வெற்றிபெறும் ஆசிரியராக பிரைத்வைட் உருவாகும் தருணங்கள் கண்களோடு மனதையும் கசிய வைக்கிறது.

இங்கிலாந்து சமூகத்தில் புரையோடிப்போன ஒரு வெறுப்பணர்வுதான் நிறவெறி. நீக்ரோ (கறுப்பர்) என்பதால் பிரைத்வைட்டை எந்தப் பணிக்கும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது சமூகம்.

அந்த நேரத்தில் பூங்கா ஒன்றில் ஒரு பெரியவரை சந்திக்கிறார் பிரைத்வைட். அந்தப் பெரியவர் தான் பிரைத்வைட்டை ஆசிரியர் பணிக்குச் செல்ல வழிகாட்டுகிறார். அடிப்படையில் பிரைத்வைட் உள்ள ஒரு இன்சினியர்.

லண்டனின் கிழக்குப் பகுதியில் இருக்கும் சமாளிக்க இயலாத பள்ளிகளில் ஒன்று தான் கிரீன் ஸ்லேட் (Green Slade).

அங்குதான் 1940 இல் தனது 28 வயதில் ஆசிரியராகிறார் பிரைத். வெள்ளை மாணவர்கள் என்றாலும் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளி அது.

ஏழை என்ன, பணம் படைத்தவரென்ன… நிறப்பாகுபாடு பார்ப்பதில் எல்லோரும் சமமே.

அப்படி ஒரு பள்ளிச் சூழலில் அடியெடுத்து வைக்கும் பிரைத்வைட்டுக்கு வேறோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஆமாம் அவருக்குத் தரப்படும் வகுப்பின் மாணவர்கள் ஏற்கனவே அங்கிருந்த வகுப்பாசிரியர் ஹேக்மேனை பள்ளியைவிட்டே ஓடவிட்டவர்கள்.

இத்தகைய குணங்கள் கொண்ட மாணவர்கள் பிரைத்வைட்டை நேசிப்பது எப்படி என்பதைக் குறித்த அற்புதமான பயணம் நம்மைத் தழுதழுக்க வைக்கிறது.

பிரைத்வைட்டின் முயற்சிகளுக்கு அனுமதி அளித்து நேர்மறை ஊக்கத்தைத் தந்து ஆதரவாக இருக்கும் தலைமை ஆசிரியர் புளோரியன் இந்தப் பயணத்தில் முக்கியமானவராகத் தெரிகிறார்.

ஏனெனில் பள்ளிகளின் முகங்களை மாற்றுவதற்கு ஆசிரியர்களது செயல்பாடுகள் மட்டும் போதாது. அவர்களுடன் தலைமை ஆசிரியர்கள் கைகோர்ப்பதே சமூக மாற்றத்தை உருவாக்கத் தேவையான பாதையை உறுதிப்படுத்தும் என்பதை புளோரியன் உணர்த்துகிறார்.

ச. மாடசாமி

இந்த பிரைத்வைட்டின் பயணம் தமிழகப் பள்ளிச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டிய ஒன்று.

கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து மாணவர்கள் பள்ளிகளில் ஒழுக்கம் சார்ந்த பலவற்றுள் தவறுதலாக நடக்கின்றனர் என்று பல செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் பரவலாக வெளிவருகிறது.

ஆனால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான மாணவர்கள் கிரீன்ஸ்லேட் பள்ளியில் இருந்ததையும் ஆசிரியர் மாணவர் உறவின் ஆழம் அவர்களை எவ்வாறு சமூகத்துக்கான மாணவர்களாக மாற்றியது என்பதையும் தான் நிறத்தைத் தாண்டிய நேசம் கற்றுக் கொடுக்கிறது.

சிகரெட் பிடிக்கும் மாணவர்கள்,கெட்ட வார்த்தை பேசும் மாணவர்கள், முரட்டுத்தனமாய் நடந்து கொள்ளும் மாணவர்கள் என எல்லோரும் இருந்த பள்ளி அது. அவர்கள்தான் ஒரு ஆசிரியரை ஓடவிட்ட மாணவர்கள்.

ஆனால் இன்னொரு ஆசிரியருக்கு TO SIR WITH LOVE என்று பரிசு தந்து நேசத்தை வெளிப்படுத்தியது எப்படி என்ற சூட்சுமத்தை நிகழ்கால ஆசிரியர்களுக்கு சொல்லித் தரும் ஆவணம் இது.

பிரம்பை மையப்படுத்திய அதிகாரத்திற்கு தலைவணங்காத மாணவர் சமூகத்தை, அன்பை மையப்படுத்திய வகுப்பறை ஒழுக்கத்தை உருவாக்க பிரைத்வைட் வழிகாட்டுகிறார்.

உமாமகேஸ்வரி

முதலில் தலைமை ஆசிரியர் புளோரியன், உதவித் தலைமை ஆசிரியர் டிரூ வழியாக பிரைத்வைட் பள்ளி மாணவர்கள், செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்கிறார்.

ஆனால் இங்குள்ள பள்ளிகளில் தலைமை மற்றும் உதவித் தலைமைகள் அதிகாரத்தை மட்டுமே இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதை எண்ணாமல் இருக்கமுடியவில்லை.

நிதானமும் நேசமும் நேர்மையும் கொண்ட உரையாடல்கள்தான் இன்று வகுப்பறைகளுக்கு அவசியம் என பல இடங்களில் புரிந்துகொள்ள முடிகிறது.

நிறத்தைத் தாண்டிய நேசம் சொல்லும் அடிப்படை ஒற்றை வரி வழிகாட்டுதல் மாணவர்களுடன் உரையாடுங்கள் என்பதாகும். வாசியுங்க…

பிரைத்வைட் ஒவ்வொரு ஆசிரியர் மனதோடும் உரையாடுவார்.

****

நிறத்தைத் தாண்டிய நேசம்.

ச. மாடசாமி

பதிப்பகம்: வாசல்

பக்கங்கள்: 103

விலை : ரூ. 120/-

– சு.உமாமகேஸ்வரி

Comments (0)
Add Comment