நடிகர் ஜீவா நடித்த படங்களில் அவருக்கே பிடித்த படம் எது? இந்த கேள்விக்கு அவரது கோணத்தில் இருந்து யோசித்துப் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.
அப்படிப் பார்த்தால் ராம், கற்றது தமிழ், ஈ போன்ற படங்களைத் தவிர்க்க வேண்டும்; அப்போது நம் மனக்கண்ணில் தோன்றும் முதல் பெயர் ‘சிவா மனசுல சக்தி’யாகத்தான் இருக்கும்.
அதேபோன்று, அவர் நடித்து நாம் மறக்க நினைக்கும் படமாக ‘சிங்கம்புலி’ இருக்கும். இந்த எஸ்எம்எஸ்ஸையும் எஸ்பியையும் (அதாங்க சிங்கம்புலி) சேர்த்துக் குழப்பியடித்தால் கிடைப்பது ‘வரலாறு முக்கியம்’.
மேலே சொன்னதில் ‘குழப்பியடித்தால்’ என்பதை மட்டும் ‘அண்டர்லைன்’ செய்ய வேண்டும். அதுதான் கீழே விமர்சனமாகத் தரப்பட்டுள்ளது.
‘பாரம்பரியமான’ கதை!
வேலைக்குச் செல்லாமல் ‘சும்மா’ ஊரைச் சுற்றும் நாயகன். அவனைக் கொஞ்சமும் கண்டிக்காத பெற்றோர். கல்லூரிக்குச் செல்லும் வயதில் சகோதரி. தோள் கொடுக்கும் சகவயது தோழர்களைவிட, பருவ வயது குழப்பங்களைத் தெளிவுபடுத்தும் தந்தை வயதுள்ள ஒரு தோழமை.
இதெல்லாமே இருந்தால், நிச்சயம் அக்கதையில் ‘வயது வந்தோருக்கான நகைச்சுவை’ இருக்கும்.
நாயகன் நாயகியை ‘ரூட்’ விடுவது அந்த உடன்பிறந்தவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால், மையக் கதாபாத்திரங்களைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாருமே ‘ஒழுக்கசீலத்தோடு’ தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்கள்.
அதையும் மீறி நாயகன் நாயகியின் ‘காதல் கசமுசா’ விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வரும்போது, அந்த ஜோடி பிரிந்தார்களா சேர்ந்தார்களா என்பதே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் கதை.
நாயகன் வேலைவெட்டிக்குச் செல்லாதவன் என்ற ஐடியா தோன்றிய காலத்திலிருந்து ‘பாரம்பரியமாக’ வரும் கதையாயிற்றே என்று நினைப்பீர்களானால், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ‘விஷயங்களும்’ இந்த படத்திலும் உண்டு. இல்லை, ‘கொஞ்சம் ப்ரெஷ்ஷா இருக்கும்னு நினைச்சேன்’ என்பவர்கள் இதன் போஸ்டர் பக்கம் கூட திரும்பக் கூடாது.
நல்லா பண்ணியிருக்கலாம்!
கதை அரதப்பழசாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நடிப்புக் கலைஞர்களுக்காகவது பெயர் கிடைத்திருக்கும்.
குறைந்தபட்சமாக காட்சிகளின் நகர்வையும் வசனங்களையும் கூட கூர்மையாகச் செதுக்கியிருக்கலாம். எதையுமே செய்யாததால், பிரேக் பிடிக்காத வண்டி போல திரைக்கதை தாறுமாறாக செல்கிறது.
நாயகி காஷ்மீரா பர்தேஷி அழகாக திரையில் வந்து போகிறார். ஆனால், அவர் தன் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு காட்சியைக் கூட காணோம்.
சரி, அவரது தங்கையாக நடித்த பிரக்யா நாக்ராவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ‘ஓவர் கவர்ச்சியாகிவிடும்’ என்ற பயத்தில் அவர் வரும் காட்சிகளில் ‘குளோஸ் அப்’ திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருக்கிறது.
நாயகியின் பெற்றோராக சித்திக் – விஜி ரதீஷ் இருவரும் வருகின்றனர். இவர்கள் இருவரையும் பாக்யராஜ் படங்களில் வரும் மலையாளிகள் போலவே சித்தரித்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன்.
நாயகன் ஜீவா நன்றாக நடிப்பார் என்பது நமக்குத் தெரியும். இதில், மீண்டும் ‘எஸ்எம்எஸ்’ காலத்திற்கு ‘டைம் டிராவல்’ செய்ய முயற்சித்திருக்கிறார். அது தனியாக விவாதிக்க வேண்டிய கதை.
ஜீவாவின் பெற்றோராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் – சரண்யா ஜோடியின் குணாதிசயங்கள் என்னவென்பதே திரையில் தெரியவில்லை. பெயருக்கு அப்பா அம்மா என்று வந்து போயிருக்கின்றனர்.
தங்கையாக வரும் ஆதிரை, ‘அலா வைகுண்டபுரம்லோ’ பாணியில் ‘காலேஜ்ல பசங்க என்னை கிண்டலடிக்கிறாங்க’ என்று சொல்லி ஒரு சண்டைக்காட்சிக்கு காரணமாகியிருக்கிறார். அவ்வளவுதான்.
ஆர்ஜே ஷா ரா, ‘கலக்கப்போவது யாரு’ டிஎஸ்கே, லொள்ளு சபா சுவாமிநாதன், இ.ராம்தாஸ் என்று சிலர் திரையில் அவ்வப்போது வந்து போகின்றனர்.
இவர்களைத் தாண்டி தன் ‘கண்ணாடிக் குரலால்’ கவனம் ஈர்க்கிறார் விடிவி கணேஷ். இன்னமும் ‘தம்பி இங்க என்ன சொல்லுது’ என்று ‘விடிவி’ பாணியிலேயே இதிலும் வசனம் பேசியிருக்கிறார்.
இரட்டை அர்த்த நகைச்சுவை என்று சொல்ல முடியாதபடி நேரடியாகவே விடிவி கணேஷும் ஜீவாவும் பேசும் வசனங்கள் அமைந்தாலும், அவை சிரிப்பை வரவழைக்கவில்லை என்பதுதான் கொடுமை.
கி.பி.2050இல் விடிவி கணேஷும் மொட்ட ராஜேந்திரனும் சந்தித்து உரையாடி கதை பேசுவதாகத்தான் ‘வரலாறு முக்கியம்’ திரைக்கதை ஆரம்பிக்கிறது.
அதையே சாக்காக வைத்து, பல திசைகளில் நடக்கும் காட்சிகளை ஒன்றாக இணைத்திருக்கலாம்.
அதையெல்லாம் விட்டு காதலா, நகைச்சுவையா, இரட்டை அர்த்தக் காட்சிகளா என்ற குழப்பத்தில் ஏனோதானோவென்று நகர்கிறது திரைக்கதை.
ஒரு கமர்ஷியல் படமென்று சொல்லும் வகையில் திரை வண்ணமயமாக இருக்க உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்.
முடிந்தவரை அனைத்து காட்சிகளையும் ஒன்றாக கோர்க்க முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.
படம் பார்த்து முடியும்போது மொட்ட ராஜேந்திரன் – விடிவி கணேஷ் காட்சிகளை கடைசி நேரத்தில் எடுத்து சேர்த்துவிட்டார்களோ என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.
மலையாளத் திரையுலகில் அற்புதமான மெலடிகள் கொடுத்து அசத்தும் இசையமைப்பாளர் ஷான் ரகுமானுக்கு தமிழில் இதுவே முதல் படம்.
‘மல்லு கேர்ள்’, ‘எனக்கொரு வேலை கிடைச்சிடுச்சு’, ‘சுத்துற பூமி’ பாடல்கள் துள்ளலை விதைக்க, ’பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகலா’ பாடல் ரஜினி முருகனில் வரும் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’வை நினைவூட்டுகிறது.
‘லவ் டுடே’ மாதிரி பின்னணி இசைக்கு முக்கியத்துவமுள்ள வாய்ப்புகளை பெறுவது மட்டுமே ஷான் ரகுமான் தமிழிலும் கவனம் ஈட்ட வழி வகை செய்யும்.
கொஞ்சமாய் பாத்திரங்களை வார்ப்பதில் இயக்குனர் சந்தோஷ் ராஜன் கவனம் செலுத்தியிருந்தால், தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காவது சில காட்சிகள் கிடைத்திருக்கும்.
அவ்வாறில்லாததால், மிகச்சில இடங்களில் வசனங்களுக்காக மட்டுமே சிரிக்க வேண்டியதாகிப் போகிறது.
ப்ளீஸ் ஜீவா, போதும்!
‘வரலாறு முக்கியம்’ படத்தைப் பார்க்க முழுமுதற் காரணம் ஜீவா மட்டுமே. அதுவுமில்லாமல், இப்படம் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ தயாரிப்பு வேறு. நம்பிச் சென்றால், நங்கென்று மூஞ்சியிலேயே ‘முத்திரை’ குத்தி அனுப்பியிருக்கின்றனர்.
ஜீவாவை நல்ல நடிகர் என்று நாம் நம்ப முக்கியக் காரணமே ‘கற்றது தமிழ்’ போன்ற படங்கள்தான்.
ஆனாலும், ‘சிவா மனசுல சக்தி’யே அவரைக் கொண்டாட வைத்தது. இவ்விரண்டு வகை படங்களையும் மாறி மாறி நடிப்பது மட்டுமே ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
அதைப் புரிந்துகொள்ளாமல், அவர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியின் ‘ஜாலி கேலி’ படங்களைப் பிரதியெடுக்க முயன்றிருப்பதை என்னவென்று சொல்வது?
இனிமேலாவது ஒரு நடிகர் தனக்கு மிகவும் பிடிப்பதுதான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புவதில் தவறில்லை. அந்த கணக்கு தொடர்ந்து தவறாகும்போது, அதனை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதில் தவறில்லை.
சமீபத்தில் கூட ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் அவர் ஒரு காட்சிக்கு வந்துபோனது அவ்வளவு ‘லைவ்’வாக இருந்தது.
அதனை முன்மாதிரியாக வைத்தாவது இனி கொஞ்சம் ‘சீரியஸ்’ கதைகளில் ஆர்வம் காட்டலாமே ஜீவா.. போதும், ப்ளீஸ்!
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு பேசும் ‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே’ என்ற சொல்லாடல் ரொம்பவும் பிரபலம்.
அந்த வார்த்தைகளை அப்படியே ஒரு திரைப்படத்தின் பெயராக மாற்றினால், அதில் அரசியல் நையாண்டி நிரம்பியிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்படும். ஆனால், ‘வரலாறு முக்கியம்’ படத்தில் அரசியலும் இல்லை, நையாண்டியும் இல்லை!
- உதய்.பா