சார்ஜாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி!

அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ், வம்சி, சிக்ஸ்த் சென்ஸ், காலச்சுவடு உள்ளிட்ட தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியில் புதிய தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டன. 

சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வேடியப்பனுடன் சுற்றிவந்தது பற்றி எழுதியுள்ள ஆழி செந்தில்நாதன், “சார்ஜா மாதிரி சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்காக ஐடியாக்களைச் சுட்டுக்கொண்டே வலம் வந்தோம்.

கால்கடுக்க நடந்துவந்த போது இந்த அழகான சமூக ஊடக அரங்கைப் பார்த்தவுடன் உட்கார்ந்துட்டோம். படபடவென செல்பி எடுத்தோம். இந்த மாதிரி வசதியெல்லாம் நம் கண்காட்சிக்குக் கொண்டுவர, அவற்றைக் கொஞ்சம் அனுபவிக்கணும் அல்லவா?” என்று பதிவிட்டுள்ளார்.

அரபு அமீரகத்தைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் முஜீப் ஜெய்ஹூன் ஆங்கிலத்தில் எழுதிய ‘SLOGANS OF THE SAGE’ நூலின் மலையாளப் பதிப்பு ஆலிவ் புக்ஸ் சார்ஜா புத்தக காட்சியில் ஹால் 7-இல் அமைந்துள்ள எழுத்தாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நூலை தமிழில் சிக்ஸ்த்சென்ஸ் வெளியிட உரிமை பெற்றுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் தமிழிலிருந்து அரபியில் மொழியாக்கம் செய்துள்ள பாரதியார் கவிதைகள் நூல், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் ஒருங்கிணைத்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

அமீரகத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசு செயலாளர் மாண்பமை ஹெஸ்ஸா தெஹ்லக் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் ஏற்புரையில் தமிழர் அரேபியர் உறவு குறித்தும் தனது மொழியாக்க அனுபவம், பாரதியார் கவிதைகள் அரபு மொழியாக்கம் உருவான பின்னணி குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட மிக முக்கியமான தமிழ் இலக்கியங்களின் அரபு மொழியாக்க நூல்கள் அரபு நாட்டு அரசு உயரதிகாரிகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கரங்களில் இருப்பதைப் பார்க்கும்போது பாரதி கண்ட கனவு நனவாகும் இனிய பொழுதை உணரமுடிகிறது.

தொடுதிரை மூலம் நமக்குத் தேவையான புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும், விலை என்ன போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்ப வசதி சார்ஜா புத்தகக் காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதுபற்றி சிறு விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்ட பதிப்பாளர் வேடியப்பன், “சாதாரண புத்தகக் காட்சி, எப்படி உலகப் புத்தகக் காட்சியாக மாறுகிறது? இதோ…” என்று குறிப்பிட்டிருந்தார்.

Comments (0)
Add Comment