‘காதல் கசக்குதய்யா’ படத்திற்குப் பிறகு இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியிருக்கும் படம் ’பரோல்’.
இந்தப் படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டதோடு, டிரெய்லரில் வரும் கதைக்கு அவரே வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்போடு பரோல் படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
ஒரு அம்மாவுக்கும், இரண்டு மகன்களுக்கும் இருக்கும் பாசம், மோதல் தான் படத்தின் கதை. வட சென்னையில் சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி சுரேஷுக்கு லிங்கா, ஆர்.எஸ். கார்த்திக் என இரண்டு மகன்கள்.
சிறு வயதிலேயே சில கொலைகளைச் செய்ததால், இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் இருக்கிறார் மூத்த மகன் லிங்கா. இரண்டாவது மகன் கார்த்திக் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.
லிங்காவிற்காக கருணை மனு கொடுக்க ஆசைப்படும் அவரது அம்மா ஜானகி திடீரென இறந்து போக, அம்மாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார் கார்த்திக். ஆனால், அதில் பல சிக்கல்கள் எழுகின்றன.
லிங்கா பரோலில் வந்தாரா, அம்மாவுக்கு இறுதிச் சடங்கு செய்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தக் கதையை நெகிழ வைக்கும் விதத்தில் அருமையான அம்மா, மகன்கள் பாசப் பிணைப்பு கதையாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.
அடிக்கடி வரும் பிளாஷ்பேக் பாணியில் திரைக்கதை அமைத்துள்ள யுத்தி ரசிக்க வைக்கிறது.
சிறு வயதில் சீர்திருத்தப் பள்ளியில் பாலியல் ரீதியாக கடுமையாக தாக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார் லிங்கா. அந்தக் கொடுமை அவரை வெறி பிடித்தவனாக மாற்றி அங்கேயே சக மாணவர்களைக் கொல்ல வைக்கிறது.
வளர்ந்து இளைஞனானதும் கூலிக்காக பல கொலைகளை செய்கிறார். அம்மா ஜானகி எவ்வளவோ சொல்லியும் மாற மாட்டேன் என்கிறார்.
இடையில் காதலும் வருகிறது. ஆனால், காதலி அவரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.
மற்றொரு பக்கம் தம்பி கார்த்திக்குடன் சிறு வயது முதலே மோதல்.
பல எமோஷன்களைக் கொடுக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் தனி நாயகனாக தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார் லிங்கா.
சேதுபதி, கஜினிகாந்த், சிந்துபாத், பெண்குயின், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லிங்கா.
லிங்காவின் தம்பியாக ஆர்எஸ் கார்த்திக் நடித்திருக்கிறார். அண்ணன் கொலை, ரவுடிசம் எனப் போக தம்பி கார்த்திக்கோ பிளம்பிங் வேலை செய்து உழைத்து சாப்பிடுபவர். தன்னுடைய அம்மாவுக்கு தன்னை விட அண்ணன் மீதுதான் பாசம் அதிகம் என்ற பொறாமையில் இருப்பவர்.
இருந்தாலும் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அண்ணன் லிங்கா வந்துதான் சடங்குகளைச் செய்ய வேண்டும் என பரோலை வாங்க என்னவெல்லாமோ செய்கிறார்.
உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அண்ணன், தம்பிகளின் இந்தச் சண்டைகள் பல குடும்பத்தில் இருக்கும்.
இந்தப் படத்தில் அதை வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். லிங்கா, கார்த்திக் ஆகியோரின் காதலிகளாக கல்பிக்கா, மோனிஷா முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
அவர்களுக்கு அதிகக் காட்சிகள் இல்லை என்றாலும் அவர்களுக்கும் ஸ்கோப் கிடைக்கும் விதத்தில் சில எமோஷனல் காட்சிகள் உள்ளன.
மகன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவனை மாற்ற முடியும் என நம்பும் வழக்கமான சினிமா அம்மா மாதிரியான பாத்திரத்தில் வந்தாலும், நடிப்பில் தனித்துவமாக தெரிகிறார் ஜானகி சுரேஷ்.
படத்தில் வில்லன்களாக நடித்திருப்பவர்களும் கவனிக்க வைக்கிறார்கள். வழக்கறிஞராக நடித்த வினோதினி, வழக்கம் போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதைக்களம், காட்சியமைப்பு என பலவற்றில் யதார்த்ததைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளிக்கு ‘பரோல்’ வாங்குவது எவ்வளவு சிரமம் என்பதை இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல், ஒளிப்பதிவாளர் மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் முனீஸ், கலை இயக்குனர் அருண்குமார் என ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்களிப்பை சிறப்பாகத் தந்திருக்கிறார்கள்.
டிரிப்ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பரோல்’ படம் ரசிகர்களின் நல் ஆதரவைப் பெறும் என நிச்சயமாகச் சொல்லலாம்.
-யாழினி ராஜ்