மொழி உணர்ச்சியும், இன உணர்ச்சியும்!

அண்மையில் மறைந்த எழுத்தாளரான பா. செயப்பிரகாசம் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் தன் வாழ்நாள் இறுதி வரை அதில் தீவிரம் காட்டியவர்.

மொழிப் போராட்ட அனுபவம் பற்றி அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை இதோ.

****

1965 ஜனவரி 25 இல் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர் போராட்டம் தொடங்கியது. இன்றைய மாணவர் போராட்டம் போலவே அன்றைக்கு நாங்கள் இருபது வயதுகளில் இருந்தோம். இப்போது அறுபது வயதாகிறது.

அன்றைய அறுபதுகள் நாங்கள் விட்டப் பணியை இன்றைய இருபதுகள் செய்கிறார்கள் என்கிறபோது மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தமிழ் இன உணர்வு என்பது 55 ஆண்டு காலம் பின்தங்கிவிட்டதோ, உணர்வு மங்கிப் போயிவிட்டதோ என்று நாங்கள் நினைத்திருந்தோம் அது அப்படி அல்ல என்று இன்றைய வரலாறு காட்டியிருக்கிறது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது மூன்று விபரீதங்கள் நிகழ்ந்தன அல்லது இந்திய அரசு மூன்று நகர்வுகளைச் செய்தது.

ஒன்று, இந்தியாவில் காசியைத் தவிர எந்த மாநிலத்திலும் நுழையாத இராணுவம் முதன்முதலாக தமிழ்நாட்டுக்குள் காலடி வைத்தது.

தங்களுடைய நாட்டில், தங்களுடைய பூமியில், கிராமத்தில், வட்டாரங்களில், மக்கள் இராணுவத்தினுடைய கரகரத்த காலடி ஓசைகளைக் கேட்டு அதிர்ச்சியாய் இருந்தனர்.

ராணுவம் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுமார் அறுபது நாட்கள் நடைபெற்றன.

இதில் எங்களுடைய கணக்குப்படி 500 பேர் இறந்தார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் அரசாங்க கணக்குப்படி 65 பேர், ஊடகங்கள் கணக்குப்படி 150 பேர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது, அஞ்சல் தணிக்கை முறை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வராத போது தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது.

அஞ்சலகங்களில் காவல் துறையைச் சேர்ந்தவர்களே அந்தக் கடிதங்களைப் பிரித்துப் படிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கடிதங்களில் உணர்வுபூர்வமாகத் தனிப்பட்டச் செய்திகளை எழுதுவதற்குத் தயங்கினர்.

மூன்றாவது, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் அதற்குமுன் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், ஆனால் மாணவர்களைக் கைது செய்தது அதுதான் முதன்முறை.

விருதுநகர் தொகுதியில் காமராசரை எதிர்த்து வெற்றி பெற்ற பெ.சீனிவாசன், தியாகராயர் கல்லூரியைச் சேர்ந்த நா.வளவன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

சட்டத்தை எரித்ததற்காக கவிஞர் நா.காமராசன், காளிமுத்துவோடு என்னையும் சேர்த்து மூன்று பேரையும் கைது செய்தனர். அன்றைக்கு நடந்த போராட்டம் திட்டமிடல் இருந்தது. அதையும் மாணவர்கள்தான் செய்தார்கள்.

காளிமுத்து, காமராசன் கைதைத் தொடர்ந்து மாணவர்கள் ஒன்றிணைந்து மதுரை திலகர் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்திருந்தோம்.

ஆனால் வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் வந்தபோது அங்கிருந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைத் தாக்கினார்கள். அறிவாளால் வெட்டினார்கள்.

இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் பரவியது. சென்னை – திருவல்லிக்கேணியில் இருந்த வெங்கடேஸ்வரா மாணவர் விடுதி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் மீது தடியடி நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின் முதல் பலி மாணவன் ராசேந்திரன். தொடர்ந்து போராட்டம் வெடித்தது.

அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்தது. ஆனால் மாணவர்களுக்கு பொது மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. இன்றையச் சூழல் போலவே அன்றைக்கும் மாணவர்கள் மீதிருந்த பிம்பம் உடைபட்டது.

மொழிக்காகவும் இளத்திற்காகவும் நீதி கேட்டுப் போராடுகிறார்கள் எனும்போது பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு மதிப்பு கூடி விடுகிறது. அன்றைக்குப் போலவே இன்றும் பொதுமக்கள் மாணவர்களோடு இணைந்துப் போராடுகிறார்கள்.

அன்றைக்குப் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மாணவர்கள் யாரும் போராட வேண்டாம், போராட்டம் எங்களுடைய கைகளில் பத்திரமாக இருக்கிறது என்று கூறியது. ஆனால் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்துதான் போராட்டத்தைக் கைவிட்டார்கள்.

போராட்டத்தின் விளைவாக அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது மாணவர்களாகிய எங்களுக்கு அப்போதே தெரியும். 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு ஓர் உண்மை புரிந்தது.

அதாவது போராட்ட குணமும் அதிகாரச் சுவைப்பும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்டோம்.

மேலும் ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும். அந்த போராட்டத்தில் கைதான 10 மாணவர்களில் இருவர் இறந்து விட்டனர். ஒருவர் சுய நினைவை இழந்து விட்டார்.

ஒருவர் துறவறம் மேற்கொண்டு சாமியாராகி விட்டார். அதாவது அவர்கள் எந்த நிலையை எதிர்பார்த்துப் போராடினார்களோ அந்த நிலை வராதபோது பெரிய ஏமாற்றம் அடைந்து, விரக்தியில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் அதேப் போராட்ட உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இருவர். அதில் ஒருவன் நான், அடுத்து கவிஞர் இன்குலாப். இன்னும் பலர் இருக்கிறார்கள்..

இந்த மாணவர் போராட்டத்தை ஒரு தேசிய இனப்போராட்டமாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய தவறிவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

போராட்டம் என்பது தன்னெழுச்சியாகவோ, திட்டமிட்டோ நிகழலாம். ஆனால் அதைப்புரிந்து கொண்ட சரியான தலைமை இருந்தால் அதைத் தன்வயப்படுத்திக் கொள்ளலாம். அப்படியான தலைமை இல்லாமல் போனதால் தான் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லமுடியவில்லை.

1965 இல் மாணவர் போராட்டம் வெடித்தபோது தி.மு.க அரசு ஆட்சியில் இருந்ததனால். நாங்கள் மத்திய அரசிடம் பேசிக்கொள்கிறோம். நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று கூறியது.

சமாதானம் ஆகாத கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றினார்கள். எனவே ‘ஒருமொழித் திட்டமே’ உயர்ந்தது என்பதில் மாணவர்கள் தெளிவாக இருந்தார்கள் என்பது வரலாறு.

திராவிடர் கழகங்கள்தான் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளன என்கிற தவறான கற்பிதம் இருக்கிறது. ஆனால் அண்ணாவிற்கு முன்பு, 1956 இல் காங்கிரஸ் ஆட்சியின்போது கல்வி அமைச்சராக இருந்த சி. சுப்ரமணியம் அவர்கள் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

அப்போது தமிழனாகப் பிறந்ததன் பலனை இன்று அடைந்து விட்டேன். இதுவரை தமிழ் பிற மொழிகளுக்கு அடிபணிந்தது போதும்., இனி தமிழுக்கு பிற மொழிகள் அடிபணியும் என்று கூறி மகிழ்ந்தார்.

திராவிடர் கழகங்கள் தமிழுக்குச் செய்ததை விட ஆங்கிலத்திற்கு செய்ததுதான் அதிகம் இதுதான் உண்மை. ஈழத்திலே பொறியியல், மருத்துவக் கல்வியை இன்றும் தமிழில் கற்கிறார்கள், பிறமொழிச் சொற்களை மொழிபெயர்ப்பதும் கலைச் சொற்களை தமிழில் உருவாக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழகத்தின் ஆங்கில வழிக் கல்வியை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக என எதிலும் தமிழ் இல்லாமல் போன அவல நிலைதான் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.

1938 இல் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த இராஜாஜி பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். அப்போது மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் அதற்கு எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு பெரியார் தலைமை ஏற்றதும் போராட்டம் இன்னும் வீரியம் பெற்றது. தாளமுத்து, நடராசன் போன்றோரின் உயிர்த் தியாகம் இன்னும் போராட்டத்தை வீரியமடையச் செய்தது.

1965 இல் நடந்த போராட்டம் கூட தமிழறிஞர்களால் தான் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்டது.

வகுப்பறைகளில் மாணவர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியதால்தான் மாணவர்களுக்கு அந்தப் போராட்ட உணர்வு பெரிதாக வடிவெடுத்தது. மாணவர்கள் தனித்தமிழில் எழுதுவதிலும் பேசுவதிலும் ஆர்வம் காட்டினர்.

1965 இல் நடந்த போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக்கழகம் தலைமை ஏற்றதும் இந்த வகையில்தான். தி.முக-வினர் தனித் தமிழில் பேசவில்லை என்றாலும் மக்களுக்கு புரியும் எளிமையான தமிழில் பேசினார்கள்.

இதனால் எல்லாக் கல்லூரி விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தி.மு.க வினரையே சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். ஆக போராட்டத்திற்கான கருமருந்தை தயாரித்தது தமிழறிஞர்களும் தி.மு.க வினரும் என்றால் அதில் தீ வைத்து வெடிக்கச் செய்தவர்கள் மாணவர்கள்.

மொழி உணர்ச்சியும் இன உணர்ச்சியும் சேர்ந்து வந்துவிட்டால் தமிழகம் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு 1938 இல் தொடங்கி இன்று வெடித்திருக்கும் மாணவர் போராட்டம் வரை சான்றாகக் கூறலாம்.

ஒரு பிரச்சினையின் தீவிரத்தை தீர்த்துப்போகச் செய்வதற்கு ஆதிக்க சக்திகள் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றன. அதில் ஒன்று அந்த பிரச்சினையை விசாரிக்க ஒரு குழுவை அமர்த்தி அதன்மூலம் விசாரிப்பதாகக் கூறி அதை நீர்த்துப்போகச் செய்தல்.

அடுத்து அந்த பிரச்சினையை வழிபாட்டு நிலைக்குக் கொண்டுசெல்வது.

அடுத்து அதைப் புகழ்பாடுவது அல்லது அதன் சிறப்புகளை மட்டும் பேசுவது என இவ்வாறான முறைகளையெல்லாம் பயன்படுத்தி பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்கின்றன.

அந்த வகையில் ஒரு பெரிய வர்க்கப் போராட்டத்தை நடத்திய காரல் மார்க்ஸ் இன்று பூஜையறைப் படமாக இருப்பதைப் பார்க்கலாம்.

ஏங்கல்ஸ், லெனின் போன்றோரின் கருத்துகளை முன்னெடுக்காமல் அவர்களை மட்டுமே புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் அவல நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.

அதைப்போலவேதான் தமிழுணர்வும் வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட கட்டடங்களாகவும் வள்ளுவர், கண்ணகி சிலைகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன.

தமிழுணர்வை மேலும் வலுப்பெறச் செய்வதைத் தவிர்த்து அதை நீர்த்துப்போகச் செய்யும் வேலையைத்தான் திராவிடர் இயக்கம் செய்து வருகிறது.

இலண்டனில் இருக்கும் ஷேக்ஸ்பியரின் நினைவிடத்தில் ஒரு நூலகம் அமைத்து அதில் அவர் தொடர்புடைய ஆய்வு நூல்கம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே உலகப் பொதுமறையை உருவாக்கிய வள்ளுவரை காட்சிப் பொருளாக மாற்றி பழைய தமிழுணர்வை மழுங்கடித்து விட்டார்கள்.

பா.செயப்பிரகாசம் எழுத்தாளர், உயிருக்கு நேர் நூலில் இருந்து…

Comments (0)
Add Comment