சத்தான பத்து வாசகங்கள்!

தமிழில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் ‘அந்திமழை’ மாத இதழ் பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது,

இந்நிலையில் 2022 செப்டம்பர் இதழில் அதன் ஆசிரியர் திரு. அசோகன் எழுதியிருக்கும் சிறுபதிவு:

பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. வருமானம் நான்கில் ஒரு பங்காகச் சுருங்கி இருந்தது. வேலை மிகவும் பிடித்திருந்தது.

பத்திரிகை துணையாசிரியர் வேலையில் அப்படி என்ன இருக்கிறது என்பது எதிர்ப்படும் பலர் முன்வைக்கும் கேள்வியாக இருந்தது.

அப்படி அந்த பெண்ணிடம் / பையனிடம்  என்னதான் இருக்கிறது என்று காதலிக்கும் பையனிடம் / பெண்ணிடம் கேட்பார்களே அப்படியொரு ஏளனமான கேள்வி அது.

ஏதேதோ பதில்களைக் கூறி சமாளித்திருக்கிறேன். ஓராண்டில் பத்திரிகைத் துறை விட்டுப்போக வேண்டிய நிர்பந்தம். நான் பார்த்துவந்த கால்நடை மருத்துவத் துறை சார்ந்த வேலைக்கும்  போகவேண்டிய கட்டாயம்.

ஊரார் சிரித்தார்கள். பதில் செய்கையாக இருக்கவேண்டும என முடிவு செய்தேன்.

நான்காண்டுகள் கழித்து 2004-ல் அந்திமழை, இணையத்தில் ஆரம்பனானது. பிறகு அதை அச்சுப்பதிப்பாகக் கொண்டுவர முடிவு செய்து முயற்சிகள் தொடர்ந்தன.

26 ஆகஸ்ட் 2012. அந்திமழை முதல் அச்சு இதழ் கையில் தவழ்ந்தது. என் குழந்தை பிறந்து, அதை முதன்முதலாக கையில் ஏந்தியபோது ஏற்பட்ட அதே சிலிர்ப்பு; அதே மகிழ்ச்சி. பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன அச்சில்.

டிசம்பர் 2022 வந்தால் அந்திமழை பதினெட்டு வயதை நிறைவு செய்யும். கனவை மெய்ப்பட வைத்த எண்ணற்றோரை ஆழ்ந்து கவனித்துள்ளேன். அவர்களின் சாதனைகள் பலருக்கு வழிகாட்டியாக மாறுகிறது.

சூழ்நிலைகளைக் காரணம் காட்டி கனவை மூட்டை கட்டி வைப்பவர்களுக்கு ‘உங்கள் கனவுகள் உங்கள் வருத்தங்களாக மாற விடாதீர்கள்; அவற்றைத் துரத்திச் செல்லுங்கள்’ என்கிற கேத்தரின் புல்சிபையரின் வார்த்தைகள் மறுபரீசீலனை செய்ய வைக்கும்.

அந்திமழையில் பத்தாண்டு அச்சுப்பதிப்பை பத்து வாசகங்கள் மூலம் கொண்டாடுவோம்.

1) நான் வரைவதைக் கனவு காண்கிறேன்; பிறகு என் கனவை வரைகிறேன்.
– வின்சென்ட் வான்கா

2) உங்கள் அனைத்து கனவுகளும் நனவாகும், அவற்றைப் பின் தொடரும் துணிச்சல் இருந்தால்..
– வால்ட் டிஸ்னி

3) மற்றவர்களின் கற்பனைத் திறன் குறைவால் உங்களுக்கு எல்லை வகுத்துக் கொள்ளாதீர்கள்: உங்கள் கற்பனைத் திறன் குறைவால் மற்றவர்களுக்கு எல்லை வகுக்காதீர்கள்!
– மேக் ஜெமிசன்

4) தங்கள் கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கே எதிர்காலம் உரித்தானது!
– எலினார் ரூஸ்வெல்ட்

5) கனவுகளின் இடத்தை வருத்தங்கள் பிடிக்கும் வரைக்கும் ஒரு மனிதனுக்கு வயதாவது இல்லை!
– ஜான் பேரிமோர்

6) இரவில் நான் கனவு காண்பதில்லை; நாள் முழுக்க வாழ்வதற்காக கனவு காண்கிறேன்!
– ஸ்டீவன் ஸ்பீல்பர்க்

7) நான் கனவு காண்பவன்; நட்சத்திரங்களை அடைய நான் கனவு காண வேண்டும்; நட்சத்திரங்களைப் பிடிக்க முடியாவிட்டால் கைநிறைய மேகங்களைப் பிடிப்பேன்! – மேக் ஜெமிசன்

8) கனவு காண்பதே நடைமுறை வழி!
– ஆல்டஸ் ஹக்ஸ்லி

9) விழித்திருந்து கற்பனை செய்வதை விட ஏன் கனவுகளில் கண்கள் ஒரு விஷயத்தை தெளிவாய் பார்க்கின்றன?
– லியானார்டோ டாவின்சி

10) கனவு காண்பதை நிறுத்தும்போது. வாழ்வதும் நின்று விடுகிறது!
– மால்கம் போர்ப்ஸ்

உங்கள் கனவைத் துரத்தும் பயணத்தில் அந்திமழை சக பயணியாகத் தொடர்ந்து வரும்.

என்றும் உங்கள் – அந்திமழை இளங்கோவன்,

நன்றி : அந்திமழை, செப்டம்பர் 2022 இதழ் 

Comments (0)
Add Comment