அரசியல் சிந்தனையாளர் புத்தர்!

நூல் விமர்சனம்:

‘புத்தர் ஒரு மதத் தலைவர் அல்ல; ஒரு அரசியல் சிந்தனையாளர்’ உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடி!. ஜனநாயகத்தின் வழிகாட்டி!  

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக பேசியது மட்டுமின்றி, பிராமணியத்திற்கு எதிராக களமாடினார்! அதனால், இருட்டடிப்பு செய்யப்பட்டார்! பெண்கள் பற்றிய அவரது பார்வை நுட்பமானது….!

புத்தரது கருத்துகளை அக்கால சமூக, பொருளாதார பின்னணியோடு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது காஞ்ச அய்லய்யாவின் இந்த நூல்.

காஞ்ச அய்லய்யா உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் பேராசிரியராக இருந்தவர்; செயற்பாட்டாளர். அம்பேத்கரை தனது வழிகாட்டியாக கொண்டவர்.

அவருடைய ‘God as Political Philosopher: Budda’s Challenge to Brahmanism’ என்ற ஆங்கில நூல் பிரபலமானது! அது, தமிழில் ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ என்ற பெயரில், சமீபத்தில் வெளி வந்துள்ளது. தத்துவ உலகில் இந்த நூல், ஒரு அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தின் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றின.

இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன;

தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், தவறு செய்பவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்றவற்றுக்கு விதிகள் இருந்தன!

அதே சமயம் ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம்சம் உள்ளது.

ஞானம் அடைந்த பிறகு, கௌதமருக்கு கிட்டிய பெயர்தான் புத்தர். ஆனால் அதுவே இயற்பெயராகி விட்டது.

புத்தர் என்று சொல்லும்போது  எளிமை இருக்கிறது என்கிறார் காஞ்ச அய்லய்யா.

‘மறுபிறவி’ ‘ஆன்மா’ என்று சொல்லி சூத்திரர்களின் உழைப்பை பார்ப்பனர்கள் உறிஞ்சினார்கள்.

அக்காலத்தில் தல மட்ட குடியரசுகள் (கண சபை) இருந்தன; சங்க விதிகள், அக்காலத்தில் இருந்த குடியரசு விதிகளை ஒத்து இருந்தன.’புத்தர் சாக்கிய இனத்தைச் சார்ந்தவர். சாக்கிய அரசு ஒரு குடியரசு’ என்கிறார்.

நம் நாட்டில் வருணாசிரம விதிகளை உருவாக்கியவர் மனு; விவாத தன்மை கொண்ட, உள்ளூர் தலைமை கொண்ட குடியரசுகளை அழித்து, உருவாகி வரும்  முடியரசை  முன்னிறுத்தியவர் கௌடில்யர்.

ஏனெனில் முடியரசுகளில் பார்ப்பனர்கள் அதிகாரம், யாகம், தானம் என்ற பெயரில் செல்வங்களை அனுபவித்தனர். பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி, மற்ற சாதியினருக்கு வேறு ஒரு நீதி என்று அக்காலத்தில் தண்ட விதிகள் நிலவின.

புத்தர் இவைகளை எதிர்த்தார். வேளாண்மைக்கு தேவையாக இருக்கும் போது, யாகம்   என்ற பெயரில் பசுக்களை கொலை செய்வதை எதிர்த்ததால் புத்தருக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது.

அவருக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ வாதிகளான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களை விட புத்தரது சிந்தனைகள் மேலானவை;

ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரான கொள்கையை புத்தர் கடைபிடித்ததால் அவர் ஒரு அரசியல் சிந்தனையாளராக பார்க்கப்படவில்லை, புத்தர் குறித்த உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. என்கிறார் நூலாசிரியர். பார்ப்பனியத்திற்கு எதிராக எழுந்த புரட்சிதான் பௌத்தம்.

காஞ்ச அய்லய்யா தனது வாதத்திற்கு இசைவாக பல்வேறு நூட்களின் குறிப்புக்களை கொடுத்துள்ளார்.

“புத்தரை நம் காலத்துக்கு அறிமுகம் செய்யும் பணியில் அயோத்திதாசர், ராகுல் சாங்கிருத்யாயன், அம்பேத்கர் ஆகியோரின் மரபின் தொடர்ச்சியாக காஞ்ச அய்லய்யா திகழ்கிறார்” என்று புகழ் பெற்ற ஆய்வாளர் உமா சக்கரவர்த்தியின் மேற்கோளை சுட்டிக்காட்டுகிறார், தனது  அணிந்துரையில் மருதன் .

பௌத்த மத கருத்துக்கள்  உள்வாங்கிக் கொண்டதால் மா சே துங், சீனாவில் வெற்றி பெற்றார் என்கிறார் காஞ்ச அய்லய்யா.

“இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன;

தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல்,  ஒருவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவருதல்,

ஒழுங்கு முறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன.

இந்த பாராளுமன்ற விதிகளைச்  சங்கத்தின் கூட்டங்களுக்குப் புத்தர் பயன்படுத்தினார்” என்று அம்பேத்கர் அரசியல் அவையில் பேசியதை மேற்கோள் காட்டுகிறார் காஞ்ச அய்லய்யா.

‘அதீத அஹிம்சை நெறியை’ வலியுறுத்தியதால் ஜைன மதம் வெற்றி பெறவில்லை. ‘மேலுலகம்’ ‘ஆன்மா’ அதற்காக நீ ‘உன் சாதிக்குரிய வேலையைச் செய்’ என்று சொன்ன பார்ப்பனியத்திற்கு மாற்றாக எளிமை, சமத்துவம், விவாதம், குறைந்த பட்ச தண்டனை என்று பேசிய புத்தரின்‘ ‘நடுநிலைக் கொள்கை’ வெற்றி பெற்றது என்கிறார் காஞ்ச அய்லய்யா.

புத்த மதம் அரசனுக்கு ஆதரவாக இருந்தது; அதனால்தான் படைவீரர்களை பிக்குகளாக புத்தர் சேர்த்துக் கொள்ளவில்லை. வைசியர்களுக்கு ஆதரவாக இருந்தது; அதனால்தான் கடன்காரர்களை சேர்த்துக் கொள்ளவில்லை.

சங்கத்தில் இணைந்தவர்களுக்கு உடலுறவுக்கு அனுமதியில்லை. எனவே காலப்போக்கில் பௌத்தம் மக்கள் ஆதரவை இழந்தது என்கிறார்.

உடலாலும் மனதாலும் ஓர் ஆணால் – பெண்களுக்குரிய அறிவியலை உணர இயலாது என புத்தர் கருதியதாக தெரிகிறது.

எனவே, பெண்கள் தங்களுக்கான – பெண்கள் பிக்குனி சங்கத்தை அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டும் என்று புத்தர் கூறியுள்ளார்.

ஆண் பௌத்த துறவிகள் – பெண்களின் பிக்குனி சங்கத்திற்கு, தாய் க்கு பிள்ளைகள் உதவுவது போல, உதவ இயலுமே தவிர, பெண்களின் உணர்வுகளை – ஓர் ஆணால் அறியக் கூட இயலாது என்று புத்தர் தெளிவாகக் கூறிவிட்டார்.

இதனால், புத்தர் பெண்கள் சங்கத்திற்கு ஆரம்ப காலத்தில் அனுமதி மறுத்தார்.

ஆழமான கருத்துக்களை, எளிய வார்த்தைகளில்  சொல்லியிருக்கிறார். இறுதியில் தன்னுடைய வாதங்களை முத்தாய்ப்பாக தருகிறார்.

இனக்குழுவின் ஆட்சியாளன் என்ற அந்தஸ்தை கௌதமனின் தந்தை பெற்றிருந்தார். இளம் வயதில் துறவு நிலைக்கு சென்றார்.

ஏழு ஆண்டுகாலம் தீவிரமாக சமுதாய அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து ஆராய்ந்தார்.

பிறகு ‘அஷ்டசீலம்’ என்ற எண்வகை மார்க்கத்தை – நற்பார்வை, நல்விழைவு, நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்மனநிலை, நற்பேரானாந்தம் அறிவித்தார்.

பிராமணியச் சடங்குகளையும், தேவையற்ற வழிகளில் செல்வத்தை வீண்டிப்பதை எதிர்த்து தொடர்ந்து மக்களிடம் நேரடியாக உறவாடினார் என்று புத்தரின் வாழ்வு குறித்து பேசும் காஞ்ச அய்லய்யா புத்தருக்கு முந்தைய காலகட்டம், அவரது காலகட்டம்,

அவருக்கு பின் நிகழ்ந்த ஆட்சிமுறை மாற்றம், நீதிமுறை, சொத்து உரிமை, பெண்களுக்கான நீதிகள், ஜனநாயக வழிமுறைகள் என எட்டு அத்தியாயங்களில் புத்தரின் பார்வை குறித்து விரிவாகப் பேசுகிறார்.

சிறப்பான மொழிபெயர்ப்பை அக்களூர் இரவி தந்துள்ளார். வாசிக்கும்போது ஒரு இடத்தில் கூட  நெருடல் ஏற்படவில்லை.

இதனை  மொழிபெயர்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவியை கேட்டபோது,

“காஞ்ச அய்லய்யாவின் ‘நான் ஏன் இந்து அல்ல’ என்ற நூலை ஏற்கனவே படித்து இருக்கிறேன். ஒரு நண்பர் ஆங்கில நூலை என்னிடம் கொடுத்தார்.

புத்தர் குறித்த புதிய பரிமாணங்களை இந்த நூல்  கொடுத்ததால், நானே காஞ்ச அய்லய்யாவிடம் அனுமதி வாங்கி மொழிபெயர்த்தேன்.

அவரது  சீடர் ஆனந்தன் பலமுறை அவரிடம் விவாதித்த பின்புதான் பெண்களை மடங்களில் சேர்க்க புத்தர் அனுமதி தந்தார் என்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றார்.

இந்தியா என்கிற கருத்தாக்கம், புதிய கனவு, புதிய இந்தியா போன்ற நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

காலத்திற்கு ஏற்ற நூலை ‘எதிர் வெளியீடு’ கொண்டு வந்துள்ளது.

அரசியல் சிந்தனையாளர் புத்தர்!

எதிர் வெளியீடு,

96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி.

விலை – ரூ.350/- 

தொடர்புக்கு – 99425 11302

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment