இசக்கி அம்மன் அருளால் கிடைத்த ‘வில்லிசை’!

சுப்பு ஆறுமுகம் என்றதும் நினைவுக்கு வருவது வில்லிசை தான். தென் தமிழகத்தில் வில்லிசைக்குப் பெயர் போன கலைஞர்கள் பலர் இருந்தும், சுப்பு ஆறுமுகத்தின் சிறப்பு கலைவாணரின் தொடர்பில் உருவான உற்சாகத்தோடு பரவலாகக் கொண்டு சென்றவர்.

தொலைக்காட்சிகளிலும், மாநிலம் தாண்டியும் கொண்டு சென்றவர்.
சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் பலமுறை சந்தித்தபோது மிகவும் கவர்ந்த அம்சம் அவருடைய குரல்.

அவ்வளவு வேகம் இருக்கும் அவருடைய பேச்சில். கடகடவென்று தட்டச்சு செய்கிற மாதிரியான வேகத்துடன் பேசும்போது எதிரே இருப்பவர்களின் கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்பிவிடுவார்.

வில்லிசை கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறிய கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய குலசாமியைப் பற்றித் தனியார் தொலைக்காட்சிக்காகச் சென்றபோது அவர் பேசியவை மீண்டும் உங்கள் பார்வைக்கு :

***

“என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ‘சத்திரப் புதுக்குளம்’ கிராமம். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிற அருமையான ஊர். அந்த கிராமத்தில் தான் எங்கள் குலதெய்வமான இசக்கியம்மன் கோயில் இருக்கிறது.

இசக்கியம்மன் என்ற பெயரின் அர்த்தம் ‘இசைக்கு ஆடுவாள்’ என்பது தான். எங்களுக்கு அவள் அம்மையைப் போல. அவளிடம் ஏதாவது கேட்க விரும்பினால் பொங்கல் வைத்துக் கேட்டால் எதுவும் நடக்காது. உண்டியலில் பணம் போட்டால் நடக்காது. வாசலில் பெரிய கோலம் போட்டால் நடக்காது.

ஆனால் அவளிடம் போய் இசையுடன் பாடிக் கேட்டால் உடனே கேட்ட வரம் கொடுப்பாள். அப்படி இசைக்கு இசைந்த அம்மன் தான் இந்த ‘இசக்கியம்மன்’.
அந்த அம்மனால் தான் எனக்கு வில்லிசைக் கலை கிடைத்தது. வில்லிசைக் கலை தோன்றியது அவளுடைய மண்ணில்தான்.

அம்மனால் எப்படி வில்லிசைத் தோன்றியது என்று கேட்கலாம். அதற்கு ஒரு கதை இருக்கிறது.

அந்தக் காலத்தில் பாஞ்சாலங்குறிச்சி மன்னர் தன் பரிவாரங்களோடு காட்டில் வேட்டைக்குப் போயிருக்கிறார்.

பல மிருகங்களை வேட்டையாடி விட்டு அங்கிருந்த இசக்கியம்மன் கோயில் வாசலில் ஓய்வெடுத்த சமயம். அவருக்குள் ஒரு யோசனை.

“இத்தனை மிருகங்களை வேட்டையாடிக் கொன்று குவிக்கிறோமே… இது பாவம் தானே… இதைப் போக்க ஏதாவது வழி இருக்கா?” என்று கூட வந்த மந்திரியிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மந்திரி, “மன்னா.. இசக்கியம்மன் முன்னால இசையோடு பாடுங்க… அப்படிப் பாடினால் பண்ணின பாவம் எல்லாம் பறந்து போயிடும்” என்று சொல்லியிருக்கிறார்.

“காட்டுக்குள்ளே கச்சேரியா? அது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டார் மன்னர். “இசைக்கு முக்கியம் ஞானம் தான். அந்த ஞானம் இருப்பவர் எங்கு வேண்டுமானாலும் பாடலாம். அது மேடையாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன?” என்று பதில் சொன்னார் மந்திரி.

“நான் இருப்பதோ காடு. இங்கு வாத்தியங்கள் இல்லாமல் எப்படிப் பாட முடியும்?” என்று மன்னர் கேட்டதும் யோசித்தார் மந்திரி. நாட்டுக்குப் போய் இசைக் கருவிகளை எடுத்துக்கொண்டு வருவதற்குள் மன்னரின் மனசு மாறி விடாதா?
சட்டென்று ஒரு யோசனை.

“மன்னா.. உங்க கையில் இருக்கிற வில்லை ஒரு குழந்தையைப் போல காலில் போட்டுக் கிடுங்க. அம்பைக் கையில் வைச்சு வில்லில் தட்டிப் பாடுங்க… உங்க மூலமா புதுக்கலைப் பிறக்கட்டும்” என்றார்.

“சரி.. எதைப் பற்றிப் பாடுவது?” – அடுத்து இன்னொரு சந்தேகத்தைக் கேட்டார் மன்னர்.

“மன்னா நீங்க தாள ஞானம் உடையவர். உலகத்தை ஆள்ற இசக்கியம்மன் உங்க முன்னாடி இருக்கா… அவளைப் பற்றிப் பாடுங்க.. அந்த அம்மன் உங்க பாவத்தை எல்லாம் மன்னிச்சிடுவா… பாடுங்க..” – தூண்டிவிட்டார் மந்திரி.
இருந்தும் சந்தேகம் நிற்கவில்லை மன்னருக்கு.

“தமிழில் எத்தனையோ வார்த்தைகள் இருக்கு… இதில் எந்த வார்த்தையை முதலில் போட்டுப் பாடட்டும்.. சொல்லுங்க!”

“மன்னா… ‘தந்தனத்தோம்’ என்று சொல்லி, பாட்டைத் துவக்குங்க.. தந்தனத்தோம்னா, ‘தன்னைத் தந்தோம்’ என்று பொருள். அதாவது கலைக்கு தன்னைத் தந்தோம்னு பாடனும்… துவக்குங்க…”
சொன்ன பிறகு கையில் வில்லை இசைத்தபடி மன்னர் பாடினார்.

“தந்தனத்தோம்” பாடின வேலை, அம்மனின் முகம் பிரகாசிக்க ஆரம்பித்தது. விளக்குகள் ஜொலித்தன. அம்மனிடமிருந்து சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரி ஒரு உணர்வு.

பாடிக் கொண்டிருக்கும் போதும் மன்னருக்குச் சந்தேகம் விடவில்லை. “நான் பாட்றப்போ அம்மனே ரசிக்கிறா… அப்படி.. இருக்கிறப்போ கூட வந்த நீங்க சும்மா இருக்கிறது என்ன நியாயம்..?”

“உயர்ந்த பதவியில் நீங்க இருக்கும்போது கீழ இருக்கிற நாங்க ‘ஆமாம்’ போடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் நாங்க ‘ஆமாம்’ போட்டுட்றோம்.” என்றார்கள்.

இப்படித்தான் வில்லிசை பாடும்போது ‘ஆமாம்’ போடுவது ஆரம்பித்து, இன்றைக்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

அப்படி இசக்கி அம்மனின் காலடியில் பிறந்த இசை, வில்லிசை.
இதை மகாபெரியவர் ‘வில்லிசை வேள்வி’ என்று சொல்லியிருக்கிறார்.

குல தெய்வத்திடம் எதையும் நாம் உரிமையுடன் கேட்கலாம். ‘எனக்கு இவ்வளவு குறைகள் இருக்கு.. அதை ஏன் இன்னும் தீர்த்து வைத்துக்கலை?’ என்று கோபித்துக் கொள்ளலாம்.

நான் வில்லுப் பாட்டு பாடும் போதெல்லாம் என்னைப் பெற்ற தாயான சுப்பம்மாளையும், குலதெய்வமான இசக்கி அம்மனையும் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

“தாயே என்னைத் தமிழகத்தில் பிறக்க வைத்தாய். அதிலும் உன்னைப் பாடும் பாக்கியத்தை அளித்திருக்கிறாய். இதைவிட வேறு என்ன உன்னிடம் கேட்கப் போகிறேன்.

தாயே.. நிம்மதிக்கான வடிவம் நீ… கவலைக்கான வடிவம் நான்.. என்னுடைய கவலையைக் கொண்டு வந்து உன் காலடியில் வைப்பேன்..

உன்னுடைய சக்தி வாய்ந்த கட்டை விரலால் ‘கவலை’யில் உள்ள ‘வ’ வை அழித்து கலையை வாழ வை தாயே” என்று வேண்டிக் கொள்வேன்.

அப்படி குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளும் போது நான் மட்டுமல்ல – என்னைச் சுற்றியிருக்கிற உயிர்களும், உலகமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். அப்போது என்னுடைய மனமும் புத்துயிர் பெறுகிறது. என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் அம்மனின் ஆசி கிடைக்கிறது.

வில்லிசையின் சிறப்புகளில் ஒன்று – நடக்கும் விஷயத்தை நாம் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளூர்ச் செய்தி முதல் உலகச் செய்தி வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் மக்களிடம் கொண்டு போகலாம்.

ஒருமுறை என்னுடைய ஊரில் குலதெய்வத்தின் கோவிலுக்கு முன்னால் வில்லிசைக் கச்சேரி. நான் பாடிக் கொண்டிருக்கிறேன். நன்கு ரசித்துக் கொண்டிருக்கிறது கூட்டம்.

எதிரே இருக்கிற அம்மனுக்குப் பக்கத்தில் இருக்கிற விளக்கில் எண்ணெய் குறைந்து அம்மன் முகத்தில் வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது.

யாரும் அதை கவனிக்கவில்லை. அதைக் கவனித்து விட்டு வில்லிசையில் மென்மையாக விஷயத்தைச் சொன்னேன்.

“வில்லடிச்சான் கோயிலிலே… கோயிலிலே.. அங்கே
விளக்கேற்ற யாருமில்லே… யாருமில்லே…
குடமடிச்சான் கோயிலிலே… கோயிலிலே… அந்தக்
குத்துவிளக்கேத்த நாதியில்லே.. நாதியில்லே..”
என்று பாடினேன். விளக்கும் உடனடியாக ஏற்றப்பட்டது.
அப்படி எந்த ஒரு விஷயத்தையும் மக்களிடம் எளிமையாக கொண்டு போகிற கலையை இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறேன்.
கலை என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தை மட்டுமல்ல – அனைவரையும் வாழ வைக்கும். இசக்கியம்மனோட அருள் நிறைஞ்ச மண் இது.”

Comments (0)
Add Comment