கவிஞர் கபிலன் மகள் தூரிகைக்கு அஞ்சலி!

பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன், தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”பீயிங் வுமன் (Being Women Magazine ) என்ற இதழையும், தி லேபிள் கீரா (the label Keera) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார்.

பெண்களுக்கான ‘Being Women’ என்ற பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையைத் தொடங்கினார். இயக்குநர் சேரன், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகியோர் பங்கேற்ற பத்திரிகை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதில் இருந்து சில கருத்துகள்…

“பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக தான் பெண்களை மையமாக வைத்து இந்த பத்திரிகையைத் தொடங்கினேன்.

ஆனால், இது பெண்ணியம் பற்றி பேசுவதற்காக தொடங்கப்பட்டதல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறை பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல.

பெண்கள் குறித்த அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கினேன்.

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவருகிறார்கள். அவர்கள், எந்தெந்த துறையில் சாதனை புரிந்தார்கள். அவர்களுடைய திறமைகள் என்னென்ன. பெண்களுக்காக சிறிய அளவில் என்ன நன்மைகள் செய்கிறார்கள்.

ஒரு பெண் மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப்படும் காரணம் என்ன என்பது போன்ற முழுக்க பெண்களின் நேர்மறைகளைப் பற்றி மட்டுமே இந்த பத்திரிகையில் எழுதப்படுவதாக திட்டம் போட்டுள்ளேன். சுருக்கமாக.. பெண்களைக் கொண்டாடுவதற்குத்தான் இந்த பத்திரிகை.

அதற்காக பெண் உயர்ந்தவள், ஆண் தாழ்ந்தவன் என்று அர்த்தமில்லை. பெண் எப்போதும் ஆணை சாராமல் இருக்கமுடியாது. அதேபோல்தான் ஆணும். இதுதான் இயற்கையின் நியதியும்கூட.

ஆனால், இந்த சமுதாய அமைப்பு எல்லாவற்றையும் பெரிய சிக்கலாக்கி விட்டது.

பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை சரி என்று கூறவில்லை. அவற்றைக் கேட்பதற்கு பல அமைப்புகள் இருக்கிறது.

இதுபற்றிய விஷயங்கள் அறிந்த பெரியவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் தன் குடும்பத்திற்காக தள்ளுவண்டி கடை நடத்துவதுதான் சாதனை.

அந்த பெண்தான் மற்ற பெண்களுக்கு ஊக்கம். இந்த மாதிரி பெண்களைப் பற்றி தான் எழுதப்போகிறேன்.

அதேபோல், பெண்கள் என்று வரும் பொழுது அழகு சார்ந்த விஷயங்களும் கூடவே வரும். ஒப்பனை செய்துகொள்வது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.

ஆனால், மாடல் துறையில் இருக்கும் பெண்கள் மற்றும் சினிமா துறையில் இருக்கும் பெண்கள்தான் ஒப்பனை செய்துகொள்ளமுடியும் என்று பெண்கள் நினைப்பது முற்றிலும் தவறு.

பெரும்பாலானோர், பெண்களின் நேர்மறைகளைவிட எதிர்மறையான விஷயங்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள்.

உதாரணத்திற்கு மாணவி அனிதாவின் தற்கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்று எதிர்மறையான விஷயங்கள்.

இதை உடைப்பதற்காகவும், பெண் சமுதாயத்தை அழகாக பார்க்கவேண்டும் என்பதற்காகவும் பெண்களைப் பற்றிய நேர்மறைகளைக் கொத்து கொத்தாக கொடுக்க போகிறேன்” என்று பேசியிருந்த அழகுமகள் தூரிகை இன்றில்லை என்பது மிகப்பெரும் சோகத்தைத் தருகிறது.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment