நான் அன்புக்காக ஏங்குகிறவன்!

– செந்தூரம் ஜெகதீஷ்

சிற்றிதழ் உலகில் வெகுவாக அறியப்பட்ட படைப்பாளி செந்தூரம் ஜெகதீஸ், தன் வாழ்க்கை அனுபவங்களை சிறு பதிவாக பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றிய நட்புலகைப் பற்றிய புரிதலாக இருக்கிறது. தாய் இணைதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு…

பேஸ்புக் மூலம் அனுதாபம் தேடும் மனநிலை ஒரு போதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நான் மிகவும் பலவீனமானவனைப்போல தெரிகிறேன்.

ஆனால், அன்பு கிடைக்கும் என்ற ஆற்றாமைதான் எனது சொந்த பதிவுகள். நான் ஒரு ஜீனியஸ் என்று 22 ஆண்டுகளுக்கு முன்பு எனது கிடங்குத் தெரு நாவலில் பிரகடனம் செய்து இருந்தேன்.

எனக்கு முன்னால் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களுக்கு இத்தகைய ஞானச்செருக்கு இருந்தது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு எனது தெளிவும் அறிவும் ஞானமும் உங்களால் கற்பனைகூட செய்யமுடியாது.

நான் மிக்க தெளிவாக சிந்தனைசெய்பவன் மட்டும் அல்ல தியானத்தில் சிந்தனையற்ற உச்ச நிலையை அடைந்தவன். ஆனால் இன்னும் போதிய அளவுக்கு அன்பு கிடைக்காமல் ஏங்குபவன்.

அந்த அன்பு முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் மூலமாக பேஸ்புக்கில் கிடைக்கின்றன. இதனால் இதை ஒரு விளையாட்டுபோல ஆடுகிறேன். சில சமயங்களில் உயிரைப் பணயம் வைத்தும் ஆடுகிறேன்.

ஒவ்வொரு பதிவும் ஒரு விளையாட்டு. என் அகக்கூத்து. இந்த ஆட்டம் பல நன்மைகளைத் தருகிறது. அபிலாஷ் கூறியபடி இன்று காலையில் சர்க்கரை பரிசோதனை செய்துவந்தேன்.

என் துன்பங்கள் யாவுமே சீட்டுக்கட்டு மாடங்கள். உங்கள் அன்பான ஒற்றை விரலால் இதனைத் தகர்த்து விட முடியும்.

ஆனால், மேலும் மேலும் பலர் சீட்டுகளை அடுக்கிவிட்டுப் போகின்றனர். அன்பு கேட்கும் இடத்தை அறிவுரைகளாலும் வசைகளாலும் நிரப்பி விடுகின்றனர்.

Comments (0)
Add Comment