இரண்டாவது படம் என்பது ஒவ்வொரு இயக்குனருக்கும் நெருப்பாற்றில் நீந்தும் அனுபவம்.
‘8 தோட்டாக்கள்’ எனும் கவனிக்கத்தக்க படைப்பைத் தந்தபின், அப்படியொரு அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளியில் அவரது இரண்டாவது படமான ‘குருதி ஆட்டம்’ வெளியாகியிருக்கிறது. இதுவும் ரசிகர்களின் அபிமானத்தை ஈட்டியிருக்கிறதா?
மீண்டும் ‘மதுரை’க் களம்!
‘மதுரைன்னாலே சந்து பொந்தெல்லாம் லந்து, வெட்டுக்கம்பு, வீச்சரிவா தானேய்ங்க’ என்று அம்மண்ணின் புகழ் (?!) பாடும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
தொண்ணூறூகளில் தொடங்கி தொடர்ந்துவரும் ’மதுரைக் கள’ பாரம்பரியத்தை மறக்காமல் பின்தொடர்கிறது ஸ்ரீகணேஷின் ‘குருதி ஆட்டம்’.
கபடி விளையாட்டில் வல்லவரான சக்திவேல் (அதர்வா), 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர். அதேநேரத்தில், அரசு மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கபடிப் போட்டிகளின்போது, முத்து (கண்ணா ரவி) மற்றும் அறிவு (பிரகாஷ் ராகவன்) அணிக்கும் சக்தியின் அணிக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. அதனைக் களத்திற்கு வெளியேயும் காண்பிக்கிறார் அறிவு.
ஒருமுறை சக்தியின் நண்பரை அறிவு அடிக்க, பதிலுக்கு அவரைத் தாக்குகிறார் சக்தி. இது, கஞ்சா கடத்தல் வழக்கில் சக்தியைச் சிக்கவைக்கும் அளவுக்குப் பெரிதாகிறது.
அதேநேரத்தில், மதுரையில் செல்வாக்குடன் திகழும் முத்துவின் தாய் காந்திமதிக்கும் (ராதிகா) அறிவு தந்தை துரைக்கும் (ராதாரவி) இடையே விரிசல் விழுகிறது. சக்தியைக் கொல்லத் துடிக்கும் அறிவு, அதற்காக சேது (ஸ்ரீவத்சன்) எனும் கூலிப்படை கொலையாளியின் உதவியை நாடுகிறார்.
அதனை அறியும் முத்து, அறிவை அடித்து அடக்குகிறார். இது அறிவுக்கும் முத்துவுக்கும் இடையிலிருக்கும் நட்பை முறித்து பிளவைப் பூதாகரமாக்குகிறது.
இதையடுத்து சக்தியை மட்டுமல்லாமல் முத்துவையும் காந்திமதியையும் சேர்த்து கொல்லத் துடிக்கிறார் அறிவு. அது நிகழ்ந்ததா இல்லையா என்று நீள்கிறது ‘குருதி ஆட்டம்’.
முழுப்படத்தையும் பார்த்தபிறகு ‘அப்போ மதுரையில இருக்கறவய்ங்க எல்லாம் கொலைக்குத்தா திரியுறவங்க மத்தியில தான் வாழுறாங்களா’ என்று நமக்குள் இருக்கும் ‘வடிவேலு’ கேள்வி எழுப்புகிறார்.
கூடவே, ‘இது ரத்த பூமி. உன்னை மாதிரி பிஞ்சு நெஞ்சுக்கெல்லாம் இங்க இடமில்ல’ என்ற எண்ணமும் மேலெழுகிறது. அதற்காக, இது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராத ‘கம்ப்ளீட் ஆக்ஷன் படம்’ என்று நினைத்துவிடக் கூடாது.
இந்த முரண் தான் ‘குருதி ஆட்டம்’ பார்த்து கொட்டாவி விடக் காரணமாயிருக்கிறது.
கும்பலாக நடிகர்கள்!
சக்தியாக வரும் நாயகன் அதர்வா அழகாகச் சிரிக்கிறார், கோபப்படுகிறார், பாசத்தில் நெகிழ்கிறார், காதலில் விழுகிறார், கூடவே ஆக்ஷனிலும் வெளுத்துக்கட்டுகிறார்.
ஆனால், அவரது செயல்பாடுகளில் ஒன்றுகூட நாமே அவரிடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவே இல்லை. இதற்கான காரணத்தைக் கண்டறிவது, அதர்வாவின் கேரியருக்கு மிக முக்கியம்.
எளிமையும் அழகும் என்ற வார்த்தையாடலுக்காகவே ‘டீச்சர்’ பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரியா பவானிசங்கர் அதில் பாந்தமாகப் பொருந்துகிறார்.
ஆனால், தந்தையின் ரவுடித்தனத்தை வாழ்நாள் முழுக்க வெறுத்து வருகிறார் என்பது ஒரு காட்சியோடு முடிந்துவிடும் அளவிற்கே அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.
கைதி தொடங்கி சாணிக்காயிதம் வரை மெதுவாக நம் கவனம் ஈர்த்த கண்ணா ரவி, இதில் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொள்கிறார். அவருக்கு ஈடாக, பிரகாஷ் ராகவனுக்கு காட்சிகள் அமையாதது ஒரு குறையே.
அடியாள் சேதுவாக வரும் வத்சனுக்கு முறுக்கேறிய உடலைக் காட்டும் அளவுக்கு முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு தரப்படவில்லை.
ராதிகா, ராதாரவி, வினோத் சாகர் போன்றோர் வழக்கமான தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். சிறுமி பிரியதர்ஷினியின் நடிப்பும் கூட ஈர்க்கிறது.
மற்றபடி படம் முழுக்க சடைமுடி, அரிவாள் சகிதம் திரியும் அடியாட்கள் பலர் வெறும் ‘செட் பிராப்பர்ட்டி’ போலவே வந்து போகின்றனர். இதனால், படத்தில் பெரும் கும்பல் நிறைந்திருக்கும் எண்ணம் ஏற்படுகிறது.
குமார் கங்கப்பனின் கலை வடிவமைப்பு, ஒவ்வொரு பிரேமையும் நிறைவாக உணர மெனக்கெட்டிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள், ஒரு ராவான கேங்க்ஸ்டர் படம் எனும் உணர்வைத் தர முயன்றிருக்கின்றனர்.
அனில் கிரிஷின் படத்தொகுப்பு வகை தொகையில்லாமல் எல்லா காட்சிகளும் தேவை என்ற எண்ணத்துடன் அமைந்திருக்கிறது.
இவையனைத்தையும் மீறி, மிகச்சாதாரணமான பாடல்களுடன் அபாரமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் யுவன் சங்கர்ராஜா.
அதுவும் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது. ஸ்ரீகணேஷின் திரைக்கதையாக்கம் அதற்கு உதவாதது கண்கூடாகத் தெரிகிறது.
நீர்த்துப் போன உணர்வுகள்!
’8 தோட்டாக்கள்’ படத்தின் மாபெரும் பலமே, அதில் இடம்பெற்ற ஒவ்வொரு பாத்திரத்திற்குமான உணர்வுகள். ‘எல்லாரும் மனிதர்கள்தான்’ என்கிற தொனி அதன் அடிநாதமாக இருக்கும்.
அதை வழிமொழிகிறேன் பேர்வழி என்று ‘குருதி ஆட்டம்’ படத்தில் பல பாத்திரங்களுக்கு ‘டீட்டெய்லிங்’ தர முயன்றிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். ஆனால், நீளம் கருதியோ அல்லது பட்ஜெட் கருதியோ திரைக்கதையில் சில பகுதிகள் விடுபட்டிருக்கின்றன.
இவை போதாதென்று பாத்திரங்களின் அடிப்படைத் தன்மையே சில நேரங்களில் மாறுதலுக்கு ஆளாகியிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து மொத்த திரைக்கதையையும் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.
சக்தியாக வரும் அதர்வாவை ரசிகர்கள் கொண்டாடும்விதமாக, அவர் ஒரு அஜித் ரசிகர் என்று அப்பாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால், கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும் வழக்கமான நாயகன் என்பதைத் தாண்டி அதில் வேறெந்த சிறப்பம்சமும் இல்லை.
முத்துவையும் அறிவையும் ஏன் சக்தி பாத்திரம் வெறுக்கிறது என்பதற்கான காரணம் கூட, கிளைமேக்ஸில் போகிற போக்கில் ஒரு வசனமாக மட்டுமே இடம்பெற்றிருப்பது பலவீனமாகவே தென்படுகிறது.
‘உயிரைக் கொடுக்கும் நண்பன்’ என்ற வார்த்தைக்கு முத்துவையும் சக்தியையும் தகுதியானவர்கள் ஆக்க, அறிவின் குயுக்திகளும் துரோக மனப்பான்மையும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதற்குச் சில காட்சிகள் இருந்தாலும், அவை நம் மனதைத் தைக்கவில்லை.
போலவே, ‘நீ ஒரு சப்பை’ என்று அறிவை பார்த்து மற்றவர்கள் சொல்வதற்கான காரணங்களும் தெளிவாக விளக்கப்படவில்லை. அதனால், அப்பாத்திரம் உணரும் வேதனை வெறும் வசனங்களாக மட்டுமே தெரிகின்றன.
படத்தின் தொடக்கத்தில் சிறையில் நடக்கும் ஒரு கலவரம் காட்டப்படுகிறது. அது, சேது எனும் அடியாளுக்கான அறிமுகமாக மட்டுமே இருக்கிறது.
மதுரையைக் கலக்கும் அக்கா எனும் காந்திமதியின் வழக்கமான செல்வாக்கிற்கு எந்த வகையில் இடையூறாக இருக்கிறது என்பது சொல்லப்படவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ராதிகா ஏற்ற காந்திமதி பாத்திரத்தைப் பார்த்து ரசிகர்கள் பரிதாபப்படவேண்டுமா அல்லது ஆத்திரப்பட வேண்டுமா என்ற குழப்பம் இயக்குனருக்கே இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ராதிகாவை எதிர்த்து வினோத் சாகரையும் அவரது குழந்தையாக நடித்தவரையும் அதர்வா காப்பாற்ற முயலும் காட்சிகள் தாமரையிலைத் தண்ணீராகத் திரைக்கதையில் அமைந்திருக்கின்றன.
மிஷ்கினின் சீடரான ஸ்ரீகணேஷ், தன் குருவின் பாதையில் பயணித்து சாதாரண மனிதர்களின் இன்பத் தருணங்களை திரையில் காட்ட முயற்சித்திருப்பது நல்ல விஷயம். ஆனால், குருவின் படங்களில் பாத்திரங்களின் வார்ப்பு அச்சு பிறழாமல் இருக்கும் என்பதைக் கவனிக்க மறந்திருக்கிறார்.
எந்தவொரு மனிதரின் மனமும் முழுக்க இருண்மையுடனோ அல்லது பிரகாசத்துடனோ அமிழ்ந்துவிட முடியாது. ஆனால், அதனைத் திரைக்கதையில் வெளிப்படுத்துவதில் ஒரு சமநிலையும் சீர்மையும் இருந்தாக வேண்டும்.
‘8 தோட்டாக்கள்’ படத்தில் இவ்விஷயத்தை இலகுவாகக் கையாண்ட ஸ்ரீகணேஷ் இதில் முற்றிலுமாகத் தடுமாறியிருக்கிறார். ஆதலால், அவரது ‘குருதியோட்டம்’ திரைக்கதையில் உணர்வுகளின் ஓட்டம் நீர்த்துப் போயிருக்கிறது.
இதைச் சரிப்படுத்த உலக சினிமாக்களை ‘குறிப்புதவி’க்கு பயன்படுத்தும்போது, கொஞ்சமாய் எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களில் வில்லன் பாத்திரங்கள் உடனான முரண்களைக் கவனித்தாலே போதும்.
திரைக்கு வெகு அருகாமையில் அமர்ந்து படம் பார்க்கும் சாதாரண ரசிகனின் விருப்பமும் அதுவே!
-உதய் பாடகலிங்கம்