சிறையிலிருந்து (1947, ஏப்ரல் 25) தியாகராஜ பாகவதரும், கலைவாணரும் விடுதலையான அன்று.
1947 ஏப்ரல் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம், பாகவருக்கும் கிருஷ்ணனுக்கும் நல்ல நாளாக விடிந்தது.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அன்று வழங்கியது.
‘கோர்ட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பதற்றமும் ஆவலும் எல்லோரிடமும் காணப்பட்டது.
லண்டன் “பிரிவி கவுன்சில்” உத்தரவுப்படி அப்பீலை மறு விசாரணை செய்த நீதிபதிகள் ஹாப்பல், ஷஹாபுதீன் ஆகியோர் 11 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தார்கள்.
பின்னர் தீர்ப்பைப் படிக்கத் தொடங்கினார்கள்.
வழக்கு விவரங்களையும், சாட்சியங்கள் பற்றியும், வழக்கறிஞர்கள் வாதம் பற்றியும் குறிப்பிட்டுவிட்டு இறுதியாகத் தீர்ப்பை வாசித்தார்கள்.
“பாகவதருக்கும் கிருஷ்ணனுக்கும் எதிராக எந்த சாட்சியமும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் இருவரும் நிரபராதிகள் என்று முடிவு செய்கிறோம். இருவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதிகள் அறிவித்தார்கள்.
இதைக்கேட்டதும் கோர்ட்டில் கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வெளியே கூடியிருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தார்கள். பலர் இனிப்பு வழங்கினார்கள்.
சிறை வாசலில் கொண்டாட்டம்
பாகவதரும் கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்ட செய்தி, சென்னையில் காட்டுத்தீ போல பரவியது. அவர்களை வரவேற்க, சென்னை மத்திய சிறையில் ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.
2 வருடம் 2 மாதம் 13 நாட்கள் சிறையில் இருந்த பாகவதரும் கிருஷ்ணனும் மத்திய சிறையிலிருந்து, பிற்பகல் 115 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைவாசல் திறக்கப்பட்டு, பாகவதரும் கிருஷ்ணனும் வெளியே வந்த போது, “பாகவதர் வாழ்க! கலைவாணர் வாழ்க” என்று கோஷம் விண்ணை எட்டியது. இருவருக்கும் ஏராளமான மாலைகள் அணிவிக்கப்பட்டன.
பாகவதரும் கிருஷ்ணனும் முகத்தில் புன்னகை தவழ மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். கிருஷ்ணனை வரவேற்க டி.ஏ.மதுரம் வந்திருந்தார். “என்ன, எப்படி இருக்கே?” என்று கேட்டபடி அவர் அருகே சென்ற கிருஷ்ணன், “நாடக சபா நடிகர்கள் எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டார்.
பாகவதரை வரவேற்க அவர் தம்பி எம்.கே.கோவிந்தராஜ் பாகவதரும் உறவினர்களும் வந்திருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பாகவதரும், கிருஷ்ணனும் மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தனர்.
எல்லோருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு, என்.எஸ்.கிருஷ்ணனும் மதுரமும் அவர்களுடைய நாடக சபா விடுதிக்குக் காரில் புறப்பட்டனர். தியாகராய நகர் வீட்டில் கிருஷ்ணனை வரவேற்கப் பலர் வந்து கொண்டேயிருந்தனர்.
அண்ணா வந்தார். வ.ரா. வந்தார். பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் என்று பலர் வந்து கொண்டேயிருந்தனர்.
வீட்டின் மையக்கூடத்தில் பெரியதொரு சமுக்காளம் விரிக்கப்பட்டு அதன் நடுவில் கிருஷ்ணன் உட்கார்ந்திருந்தார்.
வந்தவர்களுக்குத் தேநீரும், வெற்றிலை பாக்கும் வழங்கப்பட்டன. வந்த அனைவரிடமும் கிருஷ்ணன் கலகலப்பாக உரையாடினார்.
விடுதலையான அன்று மாலை மெரீனா கடற்கரையில் நடந்தக் கூட்டத்தில் கலைவாணர், அண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிறை வாழ்க்கை பற்றியும் சிறையின் வார்டர்கள் மற்றும் சக கைதிகளைப் பற்றியும் நடித்துக் காட்டி கூட்டத்தினரைச் சிரிப்பில் ஆழ்த்தினார் கிருஷ்ணன்.
சிறையில் உணவு கொடுக்கும் முறையைச் சொல்லுகையில் “காலையில் எழுந்திரிச்சு கஞ்சி தண்ணி இல்லாமே கஷ்டப்படுகிறேன். கடவுளே” என்று நான் ஒரு படத்தில் பாடியிருக்கிறேன்.
ஆனால் சிறையிலோ “காலையிலே எழுந்திரிச்சு கஞ்சி தண்ணி குடிக்கச் சொல்லி கஷ்டப்படுத்துறாங்க கடவுளே” என்று பாடும்படி நேர்ந்தது என்று அவர் கூறியவுடன் மக்கள் கூட்டம் அதைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தது.
கூட்டத்தில் பேசிய அண்ணா, மதுரத்தின் திறமையைப் பற்றிக் குறிப்பிட்டார். “இந்த விழா கிருஷ்ணனைப் பாராட்டுவதற்காக அல்ல.
அவரைச் சிறையிலிருந்து நிரபராதி என்று நிரூபித்து விடுதலை செய்யப் போராடிய மதுரம் அம்மையாருக்காகத்தான் இந்த விழா நடைபெறுகிறது” என்று அண்ணாவால் மதுரம் பெரிதும் பாராட்டப்பட்டார்.
நூல்: சமூக விஞ்ஞானி கலைவாணர்
ஆசிரியர்: அன்புக்கொடி நல்லதம்பி
பக்கங்கள் : 432
விலை: ரூ. 550
வெளியீடு: பரிதி பதிப்பகம்,
ஜோலார்ப்பேட்டை – 635 851
அலைபேசி: 7200693200