அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு இந்த ஆண்டுக்கான ஹெரால்டு ஜான்சன் விருது கிடைத்துள்ளது.
1996 இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவில் இருந்து எவருமே பெறாத நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வு.
இந்தியா மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே இவ்விருதினைப் பெறும் முதலாமவர் டாக்டர். ராம் மகாலிங்கம்தான்.
சமத்துவம் – சமூக நீதியை மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் பேராசிரியர் டாக்டர் ராம்.மகாலிங்கம் நிறவெறி – சாதிய மேலாதிக்கம் இரண்டுக்கும் இடையிலுள்ள நுட்பமான தொடர்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டு அதனைக் களையும் பணியினை மேற்கொண்டு வருவதற்காக இந்த விருது இவரைத் தேடி வந்திருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ், தந்தை பெரியார் ஆகிய மூவரையும் சிந்தையில் கொண்ட பேராசிரியர் ராம் மகாலிங்கத்துக்கு இவ்விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சிக்குரியது.
இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மகாலிங்கம் பிள்ளை – ராஜம்மாள் தம்பதியின் குமாரர் ஆவார்.
இவருக்கு இரண்டு சகோதரர் ஒரு சகோதரி உள்ளனர். இவரது இளைய சகோதரர் பன்னீர்செல்வம் வங்கி பணி யாற்றினாலும் சமூக சிந்தனையில் ஆர்வம் உள்ளவர் ஆவார்.
பேராசிரியர் ராம் மன்னார்குடி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று மேற்படிப்பைத் தொடர அமெரிக்கா சென்றார்.
அங்கு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு புத்தகங்கள் பல எழுதியுள்ளார்.
இவர் அமெரிக்கா சென்ற பொழுது அங்கு நிறவேற்றுமையால் பல சங்கடங்களையும் கஷ்டங்களிலும் அனுபவித்து சாதாரண ஹோட்டல் தொழிலாளியாக பணியாற்றி தற்போது பேராசிரியராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டின் கடைநிலை ஊழியர்களான துப்புரவுத் தொழிலாளர் களின் மேம்பாடு தொடர்பான ஆய்விற்காக பிரான்ஸ் சென்று ஆய்வு நடத்திவருகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.
முயற்சியும் உழைப்பும் இருந்தால் விருது தானே வரும் என்பதற்கு பேராசிரியர் ராம் மகாலிங்கம் ஒரு எடுத்துக்காட்டு.
– குடந்தை சரவணன்
நன்றி: தீக்கதிர் நாளிதழ்