மலையக மண்ணை வளமாக்கிய தமிழர்கள்!

ஜூன் 11 ஆம் தேதி, லண்டலில் வெளியிடப்பட இருக்கும் இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டங்களையும், போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களைப் பற்றி விவரிக்கும் நூலாக ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ என்கிற தலைப்பில் சி.வி.வேலுப்பிள்ளை எழுதி, மு.நித்யானந்தனும் எச்.எச். விக்கிரமசிங்கவும் தொகுத்த நூலுக்கு ‘தாய்’ பதிப்பக உரிமையாளான முனைவர் குமார் ராஜேந்திரன் எழுதியுள்ள முன்னுரை.

****

இலங்கையில் அண்மையில் மக்கள் நடத்திய போராட்டமும், அதையடுத்து அங்கு ஆட்சியில் நடந்த சில மாற்றங்களும் இப்போது சர்வதேச அளவில் கவனிக்கப் பட்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சமகாலத்தின் தேவையைப் போல வெளிவருகிறது  திரு. மு. நித்தியானந்தன் மற்றும் திரு. எச்.எச். விக்ரமசிங்க இருவரின் தொகுப்பில் உருவாகியிருக்கிற ‘மலையக அரசியல்: தலைவர்களும், தளபதிகளும்’ என்கிற இந்த நூல்.

இந்திய வம்சாவளி மலையலகத் தமிழர்கள் இலங்கையில் நடத்தப்பட்ட விதம் யாரையும் கலங்க வைக்கும். 1815 ல் இலங்கையைப் பிரிட்டிஷார் கைப்பற்றியதில் இருந்து துவங்கியது இந்தப் பிரச்சினை.

குறைந்த கூலிக்கு அவர்கள் உருவாக்க நினைத்த தேயிலை, கோப்பித் தோட்டங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள்.

அதற்காக தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக இலங்கைக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்றனர். அதற்கென கங்காணிகள் உருவானார்கள்.

இலங்கைக்கு அவர்களை அனுப்பி வைப்பதற்கு முகாம்கள் உருவாக்கப்பட்டன.

ராமேஸ்வரத்திற்கு நடந்தே அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு பாய்மரக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கண்டிக்குப் போவதற்கு முன்பு அவர்கள் பட்ட சொல்லமுடியாத சிரமங்களால் பல்லாயிரகணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அவ்வளவு துன்பங்களையும் தாண்டி அங்கு  சென்றவர்களைக் கொண்டு கோப்பி, தேயிலைத் தோட்டங்கள் உருவாயின. அந்தத் தேயிலை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பிய சந்தையில் அதற்கு இரண்டாவது இடம் கிடைத்து மில்லியன் கணக்கில் வருமானம் கிட்டியது.

இவ்வளவு வருமானம் கிடைத்தாலும், மிகக் குறைந்த கூலியே மலையகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் போதுமான வசதிகள் இல்லை. சுகாதாரமும் இல்லை. நியாயமான கூலியை அவர்கள் கேட்டார்கள். வேலை நிறுத்தம் செய்தார்கள்.

அதைக் கடுமையாக ஒடுக்கினார்கள் ஆட்சியாளர்கள். போராடிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து பலர் பலியானர்கள். இந்த அவலத்தை எதிர்த்தே மலையகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்தார்கள். போராடும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

முதலில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஒடுக்கினார்கள். அடுத்து இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒடுக்கினார்கள். பசி, பட்டினியால் அண்டை நாட்டுக்குப் பிழைக்கப் போனவர்கள், மொழி, இனப் பாகுபாட்டால் ஒடுக்கப்பட்டார்கள்.

நூற்றாண்டுக்கு மேலாக இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தது. எதிர்வினையாக எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. 1964 ஆம் ஆண்டு ஶ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்டு, இலங்கை உழைப்பால் உயர்த்திய தமிழர்களில் சுமார் 5 லட்சம் பேர் தாயகம் திரும்பினார்கள்.

சுதந்திர இலங்கையில் தங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது அதை எதிர்த்தும் மலையகத் தமிழர்கள் போராடினார்கள். சட்டரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட போதும் போராடினார்கள்.

அப்படி மலையகத் தமிழர்களுக்காகப் போராடிய தலைவர்களைப் பற்றிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிற இந்த நூல் காலத்தின் முக்கிய வரலாற்று ஆவணம்.

இதில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக உழைத்து, 1947-இல் இலங்கை நாடாளுமன்றம் சென்று குரல் கொடுத்தவரான சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய சமகாலத்திய தொழிலாளர்களுக்கான தலைவர்களைப் பற்றி 1958-59-களில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இதில் மலையகத் தலைவர்கள் 13 பேர்களைப் பற்றியும், மலையகத் தளபதிகள் 13 பேர்களைப் பற்றியும் அவருக்கே உரித்தான பாணியில் எழுதியிருக்கிறார்.

இலங்கை வாழ் மலையகத் தமிழர்களின் நலனுக்காகக் குரல் கொடுத்த கோ.நடேச ஐயர் முதல், தமிழ் தெரியாத நிலையிலும், மலையகத் தமிழர்களின் துயர் துடைக்க முனைந்தவரான அப்துல் அசீஸ் வரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக இலங்கை அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கியவரான சௌமியமூர்த்தி தொண்டமான், ஜோர்ஜ் ஆர்.மோத்தா, பெரி சுந்தரம், கே.ராஜலிங்கம், ஐ.எக்ஸ் பெரேரா, எஸ்.பி வைத்தியலிங்கம், குஞ்சுப்பொரி சண்முகம், ஏ.எஸ். ஜோன், சாரநாதன், சி.எஸ்.சிவனடியான், என்று பல தலைவர்களைப் பற்றி அரிய செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

தளபதிகள் என்ற வரிசையில் எஸ்.சோமசுந்தரம், எஸ்.எம்.சுப்பையா, எஸ்.செல்லையா, கே. குமாரவேல் துவங்கி இன்றும் வாழும் உதாரணமாக இருக்கும் முதுபெரும் அறிஞர் பி.பி. தேவராஜ் வரை பலரைப் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

மலையக மக்களின் போராட்டமும், அவர்கள் போராடியதற்கான சூழலும் இதில் பதிவாகியிருப்பது முக்கியமானது.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தங்கள் மலையக மண்ணில் நடந்த ஒடுக்குமுறையையும், மக்கள் எழுச்சியையும் ஒருசேரச் சொல்லும் இந்த நூலில் மலையகத்து மண் ஒட்டியிருக்கிறது.

இந்த நூலைப் பதிப்பித்தவர்களில் ஒருவரான மு.நித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றிய கல்விப் புலத்திலிருந்து வருபவர். சென்னையில் க்ரியா அகராதித் திட்டத்தில் செயற்பட்டவர்.

லண்டனில் பொருளாதார சாஸ்திரத்தில் ஆசிரியராகவும் ஐரோப்பிய தீபம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவங்கள் கொண்டவர்.

‘கூலித்தமிழ்’ என்ற இவரது ஆராய்ச்சி நூல் மலையகத்தின் எழுத்து இலக்கிய முயற்சிகளின் தோற்றத்தை ஆராயும் முன்னோடி நூலாகும்.

இந்நூல் தமிழக அறிஞர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. மலையக இலக்கியங்களைப் பேணுவதில் அக்கறை கொண்டவர்.

ஏற்கெனவே சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் ‘வீடற்றவன்’, ‘நாடற்றவர் கதை’ ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். அவருடைய பதிப்பில் சி.வி. அவர்களின் நூல் பதிப்புப் பெறுவது சிறப்பு மிக்கது.

இதன் தொகுப்பாசியர்களில் ஒருவரான எனது அன்புக்குரிய நண்பர் திரு. எச்.எச். விக்கிரமசிங்க அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெளிநாடு வாழ் இந்திய மக்களின் நலனில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

எச்.எச்.விக்ரமசிங்க அவர்கள் கல்விமான் இர.சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன், வீரகேசரி எஸ்.எம்.கார்மேகம், பேராசிரியர். சோ சந்திரசேகரம் அவர்களின் வழிகாட்டலில் உருவானவர். மலையகம் சார்ந்த பல நூல்களை தன் சொந்த முயற்சியில் வெளியிட்டவர்.

மிகவும் பரவலான மட்டத்தில் உயர்ந்த கல்விமான்களின், சமூக செயற்பாட்டாளர்களின் தொடர்புகள் கொண்டவர். எண்ணிய எண்ணியாங்கு எய்யும் பண்பாளர் நல்லவே நினைக்கும் உயர் பண்பு அவருடையது.

மலையக எழுத்தாளர் மன்றப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். மலையக மக்களுக்காகவே உழைத்த தொழிற்சங்கத் தலைவர்கள், மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களைப் பற்றித் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளில் வாராவாரம் எழுதி வருகின்றவர்.

இவர்கள் இருவரும் இணைந்து தான் இந்தத் தொகுப்பு நூலை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இந்த அரிய பணிக்காக திரு. மு. நித்தியானந்தன் அவர்களையும், திரு. எச்.எச்.விக்ரமசிங்க அவர்களையும் உளமாற வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில் இருந்து அடிமைகளாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களில் இன்றைய தலைமுறையினர் இந்த நூலை உருவாக்கி அதை இலண்டனில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

இந்நூலைத் தாய் வெளியீடாக வெளிக்கொண்டு வருவதற்காக அதன் பதிப்பாளர் என்ற முறையில் பெருமைப்படுகிறேன்.

முனைவர். குமார் ராஜேந்திரன், மனித உரிமை ஆர்வலர்.

பதிப்பாளர், தாய் வெளியீடு, சென்னை.

me@kumarrajendran.in

Comments (0)
Add Comment