அழகாய் பிறப்பது என்பது இயற்கையின் செயல். ஆனால், நம்மை அழகாகக் காட்டிக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது. சந்தையில் அழகு சாதனப்பொருட்கள் எண்ணற்ற வகையில் கிடைக்கிறது.
ஆனால், அது எந்த அளவுக்கு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியில் அழகாக நம்மை வைத்துக் கொள்ளும் மூலப்பொருட்கள் இருக்கிறது.
கொரிய நாட்டு பெண்களின் பளபளப்பான முக அழகிற்கு இந்த அரிசிதான் முக்கிய இடம் பெறுகிறது. சரும நிறத்தை மேம்படுத்தும், தோல் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.
அரிசியைக் கொண்டு உங்கள் சருமத்தை எப்படி ஜொலிக்க வைப்பது என்பதைப் பார்க்கலாம்.
அரிசி ஃபேஸ்மாஸ்க்
அரிசி மாவு – 3 ஸ்பூன்
கற்றாழை செல் -2 ஸ்பூன்
தண்ணீர் – ஒரு டம்ளர்
இந்த மூன்றையும் கலந்து நன்றாகக் காய்ச்சி பேஸ்ட் பதம் வந்தவுடன் இறக்கவும். ஆறிய பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
இந்த ஃபேஸ்மாஸ்க் வாரம் ஒரு முறை முகம், கழுத்து பகுதியில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிர்ந்த தண்ணீரால் துடைத்து எடுக்கவும்.
இந்த பேக் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் இருப்பதால் ஊதாக் கதிர் பாதிப்பைக் குறைத்து மற்றும் முகப்பரு கருத்திட்டு மறையச் செய்து சருமத்தை பளபளக்க வைக்கிறது.
அரிசி நீர் ஸ்ப்ரே
அரிசி ஒரு கப் எடுத்துக் கொண்டு அதைனை முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். காலையில் அரிசியுடன் கலந்து விட்டு அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் முகம் கழுவியவுடன் இந்த ஸ்பிரே முகத்தில் அடித்துக் கொள்ளுங்கள்.
இந்த நீர் தோலில் யுவி பாதிப்பைக் குறைக்கிறது. மேலும், சருமத்தை மிருதுவாக மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் இளமையாக உங்கள் சருமம் இருக்கும்.
இது சருமத்தை மிருதுவாக வைத்து சுருக்கங்களைத் தடுக்கிறது.
இதனை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். முடி வேர்களில் இந்த ஸ்ப்ரே அடித்துக் கொள்ளுங்கள். 20 நிமிடம் அப்படியே காய விடுங்கள்.
பிறகு, எப்போதும் போல் குளித்து விடுங்கள். இது உங்கள் முடி வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்கிறது. முடி உதிர்வதையும் தடுக்கிறது.
அரிசி பாத் க்ரீம்
அரிசி – ஒரு கப்
தேங்காய் துருவல் – கப்
அரிசி 5 மணி நேரம் அரிசியை ஊற விடுங்கள். வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் வடிகட்டிய தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் வடித்து வைத்துள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் கட்டி வராமல் கிளறி க்ரீம் பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
இந்த க்ரீம் ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி பிரிட்ஜில் வைக்கவும்.
குளிக்கும்போது சோப்பு போட்டு முடித்தவுடன் உடல் முழுவதும் பூசி முகத்தில் நல்ல மசாஜ் கொடுத்து பிறகு குளித்து வந்தால் உடலில் ஈரத்தன்மை தக்க வைக்கப்படும்.
தோல் வறட்சி நீங்கி சருமத்தின் இறந்த செல்கள் நீங்கி விடும். மற்றும் சரும நிறத்தை கூட்டுவதால் உடலின் அழகு கூடிவிடும்.
எனவே செலவு இல்லாமல் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.
– யாழினி சோமு