நாட்டு நிலை; வீட்டு நிலை; கழக நிலை!

பரண்:

*
அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தன்னுடைய வளர்ப்புமகன் இளங்கோவனுக்கு எழுதிய கடிதம், 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று வெளியான ’த சன்டே இந்தியன்’ வார இதழில் வெளியிடப்பட்டது.

அதன் மீள்பிரசுரம் இங்கே :

10.10.1968 | நியூயார்க்
அன்புள்ள இளங்கோவனுக்கு,

என் உடல்நிலை நல்லமுறையில் தேறி வருகிறது.

இன்று டாக்டர் மில்லர் அதனைத் தெரிவித்து மகிழ்ச்சியூட்டினார். என்றாலும் இந்த மாதம் முழுவதும் இங்கு இருப்பது நல்லது என்றார். இருப்பதாக ஒப்புக் கொண்டேன். அனேகமாக நவம்பர் முதல் வாரம் வரக்கூடும் என்று எண்ணுகிறேன்.

என்னைப் பற்றி எண்ணி எண்ணி பீதியும், குழப்பமும் அடையக் கூடியவராயிற்றே என்று கவலை. சரியான நேரத்தில் வந்தீர்கள், நோய் முற்றிலும் குணமாகிவிட்டது என்று இங்கு டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

அங்கு அம்மாவை மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அக்காவுக்கும், ரகுபதி அண்ணா, வீட்டார் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவிக்கவும். விஜயா நான் சென்னையை விட்டுப் புறப்பட்ட அன்று கண்கலங்கி நின்றது இப்போதும் என் மனக்கண் முன் தெரிந்தபடி இருக்கிறது.

உடல்நிலை நல்லவிதமாகிவிட்டது, கவலையும், கலக்கமும் வேண்டாமென விஜயாவிடம் தெரிவிக்கவும். பேரளத்தாருக்கும் நிலைமைகளைச் சொல்லவும்.

ஒரு மாதமாக கண்மணியைப் பார்க்காதது மனதை வாட்டுகிறது. என் அன்பு முத்தங்களைக் கண்மணிக்குத் தரவும்.

சென்னையில் உன் அண்ணி, மலர், கௌதமன் ஆகியோரின் நலன் பற்றி அடிக்கடி சென்று கவனித்துக் கொள்ளவும்.

ராணியும், ராஜாராம், செழியன் ஆகியோரும் உடன் இருப்பதால், வெளிநாட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் கூட எழவில்லை. எல்லோரும் நலமாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்.

டாக்டர்கள் இவ்வளவு கடுமையான இவ்வளவு விரைவில் குணமடைந்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

இனி போதுமான அளவு சாப்பிட்டு உடலுக்கு வலிவை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது தான் நடைபெற வேண்டும் என்று கூறினார்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பினையும், வணக்கத்தையும் தெரிவிக்கவும்.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்து கனிவும் பாசமும் நிரம்பிய கடிதங்கள் வந்தபடி உள்ளன.

அமெரிக்காவில் பல பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் அடிக்கடி வந்து பார்த்து அன்பினைத் தெரிவித்து வருகிறார்கள். ‘காஞ்சி’ இதழ் தவறாமல் வெளிவருகிறது என்று எண்ணுகிறேன்.

புத்தக வேலைகளும் ஒழுங்காக நடைபெற்றுவரக்கூடும் என்று எண்ணுகிறேன்.

தைரியமாக, கவலையற்று, காரியங்களைக் கவனித்துக் கொள்ள உனக்கு ஒரு பயிற்சியாக இந்தச் சந்தர்ப்பத்தைக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் மு.க, ஆதித்தனார், நாவலர் ஆகியோர் தொலைபேசி மூலம் செய்திகளைக் கூறுகிறார்கள்; நாட்டுநிலை, வீட்டுநிலை, கழகநிலை எல்லாவற்றையும் குறித்து பரிமளம் என்னுடன் இருந்து பணியாற்றி வருவது மனதுக்குத் தெம்பு தருகிறது.

எல்லோருடைய அன்பும், வாழ்த்துக்களும் எனக்குப் புதிய உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது.

அனைவருக்கும் நன்றி. வணக்கம்!

அன்புள்ள
அண்ணாதுரை

நன்றி: த சன்டே இந்தியன்

Comments (0)
Add Comment