நூல் வாசிப்பு:
‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூல் குறித்து வாசிப்போம் நேசிப்போம் குழுவில் இளவரசி இளங்கோவன் எழுதிய விமர்சனம்.
அண்மையில் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ என்ற ஆப்பிரிக்க சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலை வாசிக்க நேர்ந்தது. இதைத் தமிழில் இந்திரன் அவர்கள் மிக நேர்த்தியாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
ஆப்பிரிக்கா என்பது ஒரு கோடி 17 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய கண்டம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு குழு மக்களைக் கொண்டது.
இந்த கண்டத்தில் மட்டும் சுமார் 2400க்கும் மேற்பட்ட வட்டார மொழிகள் பேசப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இது மட்டுமல்லாமல் பிரான்சிலும் அமெரிக்காவிலும் வாழ்கின்ற கருப்பு எழுத்தாளர் எழுத்துக்களோடு சேர்ந்து மொத்தமாக கருப்பின எழுத்தாளர்களின் எழுத்துக்களை ‘கருப்பு கருத்துக்கள்’ என்ற தலைப்பில் இந்திரன் அவர்கள் தன் நூலில் தொகுக்கும் பொழுது அவருக்கு மிகப்பெரிய மலைப்பு ஏற்பட்டதாக தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
இந்நூலைப் படிக்கும் பொழுது உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வலி என்பது ஒன்றாகத்தான் இருக்கின்றது என்பது திட்டவட்டமாகிறது.
அதை தான் இதில் மொழிபெயர்க்கப்பட்ட ஒவ்வொரு கவிதையும் சிறுகதைகளும் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.
இது ஆப்பிரிக்காவில் எங்கோ உள்ள ஒரு கருப்பு கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதை என்று தோன்றவில்லை. மனதிற்கு மிக அணுக்கமாக நாமும், நம் அருகே இருக்கும் நம் உறவுகளும் அனுபவிக்கும் விடயமாகவே இருக்கிறது.
இதில் உள்ள எந்த ஒரு கவிதையும் சிறுகதையும் ஒரு அந்நியத்தைக் கொண்டு வரவில்லை. மிகவும் நெருக்கத்தைத் தான் கொண்டுவந்துள்ளது.
கருப்பின மக்கள் உண்ண உணவும், உடுத்த உடையும் ஒதுங்கிக்கொள்ள ஒரு இடமும் இல்லாமல் எவ்வாறு வீதிகளில் விரட்டப்பட்டார்கள். அவர்களின் வலி என்ன என்பதை ஒவ்வொரு கவிதையும் பதிவிடுகிறது.
பிடித்த கவிதை என்று ஒரு கவிதையை மட்டும் குறிப்பிட முடியாது. அத்தனை கவிதையும் அப்படி ஒரு கனமானதாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கிறது. அனைத்தையும் இன்றைய நமது நிலைமையை எடுத்துரைப்பவையாகவே இருக்கிறது.
அதில் உள்ள அந்த ஒவ்வொரு கவிதையும் சற்று விரிவாக்கம் செய்தால் ஆகச் சிறந்த கலைப்படைப்பு ஏன் சினிமாவாக எடுத்தால் கூட ஆகச் சிறந்த படைப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இது ஆப்பிரிக்க மக்களின் கருப்பின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை மட்டும் அல்ல.
இன்று உலகெங்கிலும் முதலாளித்துவ அமைப்புகள், அதன் கீழ் இருக்கும் மக்கள், அவர்களின் சுரண்டப்படும் உழைப்பு, அபகரிக்கப்படும் வளங்கள், வாழ்வின் அவலம் என அனைத்தையும் பதிவிடுகிறது.
ஒரே மூச்சில் படித்து முடித்து வைத்து விட்டு ஆசுவாசமாக எமது மக்களையும் எமது தற்போதைய நிலைமையும் மது, சினிமா, இலவசம் போன்றவற்றுக்கு அடிமையாக்கி சிந்திக்கவே இயலாத ஒரு ஊனமான தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கும் அரசியல் கட்டமைப்பு, அப்படியே வழங்கப்பட்ட கல்வியை தன் சுயநலத்திற்காக,
தன் நன்மைக்காகவே பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சுயநல தலைமுறையையும் உருவாக்கிவிட்ட நமது முந்திய தலைமுறை பெற்றோர்களையும், தற்போது அதையே தொடர்ந்து வரும் இன்றைய பெற்றோர்களின் நிலைமையையும் எண்ணி மனம் வேதனை கொள்ள வைத்தது.
இப்படி பல்வேறு விதமான வேதனைகளையும் சிந்தனைகளையும் தூண்டிவிட்ட, சிந்தனைச் சிறகுகளை விரிக்கவைத்த ஒரு படைப்புதான் அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.
நன்றி: இளவரசி இளங்கோவன்.