லண்டனில் மலையக இலக்கிய மாநாடு!

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கோகிலம் சுப்பையா அரங்கு, இர.சிவலிங்கம் அரங்கு, சோ.சந்திரசேகரம் அரங்கு, சி.வி.வேலுப்பிள்ளை அரங்கு, தமிழோவியன் அரங்கு, சாரல்நாடன் அரங்கு, காத்தாயி அரங்கு என ஏழு அரங்குகளில் 23 மலையக நூல்கள் அறிமுகம் பெறுகின்றன.

அல்-அஸுமத், மாத்தளை சோமு ஆகியோரின் நாவல்கள், மு.சிவலிங்கம், பிரமீளா பிரதீபன், பதுளை சேனாதிராஜா, தங்கவேல் ஆகியோரின் சிறுகதைகள் என்பன புனைவு இலக்கியத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அமரர் உபாலி லீலாரட்னாவின் சிங்கள நாவலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் ‘தேத்தண்ணி’ முக்கிய மொழிபெயர்ப்பு நாவலாக ஆய்விற்கு தேர்வு பெற்றிருக்கிறது.

எஸ்தர், வண்ணச்சிறகு (அரு.சிவானந்தன்) ஆகியோரின் கவிதைத் தொகுப்புகள் இம்மாநாட்டில் கவனம் பெறுகின்றன.

சோ.சந்திரசேகரம், மு.நித்தியானந்தன், பொன். பிரபாகரன் ஆகியோரின் ஆய்வு நூல்கள் மீதான விமர்சனங்கள் இடம் பெறுகின்றன.

புரட்சிப் பாவலன் பி.ஆர்.பெரியசாமி, ச.கீதப்பொன்கலம், ந.சரவணன், மல்லியப்புசந்தி திலகர், வரதன் கிருஷ்ணா, எம்.வாமதேவன், கந்தப்பளை தாமரை யு.யோகா ஆகியோரின் சமூக, அரசியல் நூல்களும் இம்மாநாட்டில் முக்கிய கவனம் பெறுகின்றன.

மைத்ரி ஜெகதீசனின் Tea and Solidarity, யோகேஸ்வரி விஜயபாலனின் Endless Inequality ஆகிய இரு ஆங்கில ஆராய்ச்சி நூல்கள் மீதான விமர்சனங்களும் இடம்பெறவுள்ளன.

மெய்வெளி நாடக அரங்கிற்காக சாம் பிரதீபன் தயாரித்தளிக்கும் ‘காத்தாயி காதை’ என்ற நாடகம் இம்மாநாட்டில் அரங்கேறுகிறது.

லண்டன், நோர்வே, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து 25 உரைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

1958 களில் சி.வி.வேலுப்பிள்ளை தினகரன் வார மஞ்சரியில் ‘மலையக மக்கள் தலைவர்கள், மலையக மக்களின் போர்த் தளபதிகள்’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகளை

மு.நித்தியானந்தன், எச்.எச். விக்கிரமசிங்க தொகுத்து ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ என்ற தொகுப்பில், தாய் வெளியீடாக வரவுள்ள நூல் இம்மாநாட்டில் புதிதாக வெளியிடப்படவிருக்கிறது.

விம்பம் அமைப்பின் சார்பில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்குகிறார்.

தகவல்: எச்.எச். விக்கிரமசிங்க, கொழும்பு

Comments (0)
Add Comment