அலைவுறும் தலைமுறையின் வாழ்க்கை!

-தகப்பன் கொடி நாவல் உருவானது குறித்து அழகிய பெரியவன்

ங்கு எல்லாருக்கும் நிலமில்லை என்பது உண்மைதான். ஆனால் சிலர் எப்போதும் நிலமற்றவர்களாகவே இருந்ததுமில்லை: சிலர் எப்போதும்  நிலமுடையவர்களாகவே இருந்ததுமில்லை: நீர் சுழற்சி, காற்றுச் சுழற்சி இவற்றைப் போல நிலச்சுழற்சி.

நான் இப்போது வசிக்கும் ஊரிலிருந்து கிழக்காக பதினைந்து கிலோமீட்டர் போனால் பாலாற்றங்கரையை ஒட்டி நாவிதம்பட்டி எனும் ஓர் ஊர்வரும். அந்த ஊர் தான் தாத்தாவுக்குப் பூர்வீகம்.

அவர் விவசாயக் கூலியாகவும், படியாளாகவும் (பண்ணை அடிமையாள்) இருந்தவர். அக்காலங்களில் அடித்தட்டு மக்களில் உழைப்பவர்கள் எல்லோருமே அப்படியாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பல்வேறு காரணங்களால் பேரணாம்பட்டு சிறு நகரத்தையொட்டிய தன் மனைவியின் ஊருக்கு, அதாவது தன்னுடைய தாய்மாமன் ஊருக்கு, குடிபெயர்ந்த என்னுடைய தாத்தாவுக்கு தன் சொந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருந்த கதையையும், அதை அவர் தன் ஆண்டையிடமே பறிகொடுத்த கதையையும் என் சித்தப்பாக்கள் மூலமாக நான் அறிந்து வைத்திருந்தேன்.

‘தீட்டு’ சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருந்த நேரத்தில் தமிழினி வசந்தகுமார் அவர்களைச் சந்திப்பதற்காக ராயப்பேட்டையில் இருந்த அவருடைய பதிப்பக அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.

அது 2001ஆம் ஆண்டு. அவர், “நீங்கள் ஒரு நாவல் எழுதலாமே! அதை நான் வெளியிடுகிறேன்!” என்றார்.

அவர் சொன்னதை நினைத்துத் கொண்டே, சென்னை பாரிமுனையிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் கடைசிப்பேருந்தில் ஏறி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தப்போது, சன்னல் வழிக் காற்று முடியை அலைகழிக்க, என்ன எழுதலாம் என்று மனம் அலைந்தது.

நடுநிசியில் ஊரில் வந்து இறங்கி வீட்டுக்கு நடக்கையில், தாத்தா நிலத்தைப் பறிகொடுத்த கதையை எழுதலாமே என்று ஓர் எண்ணம் வந்தது.

இதை எழுதலாம் என்று மனம் முடிவு செய்து கொண்டாலும் உடனே உட்கார்ந்து எழுதிவிட முடியவில்லை. தாத்தா ஒரு கனவுச் சித்திரம் போலத்தான் என் மனதில் இருந்தார். அந்தக் கனவுச் சித்திரமும் சிறுவயதில் உருவானது.

தாத்தா உயரமாக இருப்பார். நிறைய பீடி புகைப்பார். தெருவோர திண்ணையில் உட்கார்ந்து மணிக் கணக்கில் கதை பேசுவார்.

பாட்டி இல்லாததால் அவரே சமைத்துக் கொள்வார். அவருக்கு இளைப்பு உண்டு என்பதால் பேரப்பிள்ளைகள் கொல்லைகளில் அலைந்து திரிந்து கண்டங் கத்தரிக் காய்களையும், தும்பைப் பூச்செடிகளையும் கொண்டு வந்து கொடுப்போம்.

இரவுகளில் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு தன்னிடமிருக்கும் கூத்து நோட்டை (அவர் கூத்து வாத்தியாராக இருந்தவர்) விரித்து வைத்து சத்தம் போட்டு பாடல்களைப் பாடுவார். அவர் போடும் விடுகதைகளும், பேசும் வசவு வார்த்தைகளும் ஊரில் சற்று பிரசித்தம். இப்படியான சித்திரங்கள்.

அப்போதெல்லாம் ஊரில் இருந்த டெண்ட்டு கொட்டகையில் போடப்படும் திரைப்படங்களை விளம்பரப்படுத்த போஸ்டர் தட்டிகள் கட்டப்பட்ட கூண்டு வண்டிகளில் பேண்டு வாத்தியங்களை அடித்தவாறு நோட்டீஸ்களை வினியோகித்துக் கொண்டு வருவார்கள்.

தாத்தா சினிமா பிரியர் என்பதால் என்னை அந்த நோட்டீஸ்களை எடுத்து வரச்செய்து படித்துக் காட்டச் சொல்வார். மிகவும் அரிதாக அவரிடம் சில கதைகளையும், சம்பவங்களையும் நான் கேட்டிருக்கிறேன்.

ஊரில் பத்து வயதுவரைக்கும் இருந்த நான், அதற்குப் பிறகு ஆம்பூரிலிருக்கும் பாட்டிவீட்டுக்குப் போய்விட்டேன். அங்கு போன பின்னர் பள்ளி விடுமுறை நாட்கள் இருந்தால் மட்டுமே ஊருக்கு வருவதுண்டு.

அக்காலங்களில் தாத்தாவுக்கும் எனக்குமான இடைவெளி விழுந்தது. பின்னர் மூன்று ஆண்டுகளிலேயே தாத்தாவும் இறந்து போனார்.

இந்த நினைவுகள் எல்லாமும் கூட எனக்கு உடனே வந்துவிடவில்லை. நான் என் சித்தப்பாக்களிடமும். தாத்தாவின் வயதிலிருந்த சில வயசாளிகளிடமும் மீண்டும் சென்று பேச ஆரம்பித்த பிறகுதான் வந்தன.

அவர்களைச் சந்தித்துப் பேச பேச தாத்தாவின் நினைவுகள் என்னுள் மெல்ல துலங்கத் தொடங்கின. அப்படியே நான் தாத்தாவின் பூர்வீக ஊருக்கும், அவர் சுற்றிய இடங்களுக்கும் பயணம் போனேன்.

இந்த தேடுதல்களின் போதுதான் தாத்தா, தகப்பன் கொடி நாவலின் நாயகனான அம்மாசி எனும் பாத்திரமாக மாறி என் மனதில் உருபெறத் தொடங்கினார்.

தகப்பன் கொடி நாவலை கூத்து வடிவில் எழுதிடத்தான் முதலில் தோன்றியது.

அம்மாசியின் வாழ்க்கையை எழுதலாம் என்று உட்கார்ந்ததும் அவனுடைய கூத்து நாட்டம், சினிமா நாட்டம், நிலம் பறிகொடுப்பு.

இடப்பெயர்வு என வளர்ந்த நாவல், தாமாகவே இறுதியில் பஞ்சமி நில போராட்டத்துடன் பிணைந்து கொண்டது.

எழுதிய போக்கில் தானாகவே நிகழ்ந்த மாற்றம் இது. அம்பேத்கர் உருவாக்கிய பெடரேஷனில் இருந்தவர்களையும்.

கேஜிஎஃப் சென்று அம்பேத்கரை நேரில் பார்த்தவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான உரையாடலும் இந்த நாவலுக்கு பெரிதும் உதவியது.

இளம் கவிஞர்களான ரகசியனும், துரை.ஜெய்சங்கரும் கூத்துப் பாடல்கள் அடங்கிய சில வாத்தியார்களின் நோட்டுகளை வாங்கிக்கொடுத்தார்கள்.

நாவலின் தலைப்பை நான் முன்னமே யோசித்திருக்கவில்லை. எழுதிய பின்னரே அது தோன்றியது. அந்தத் தலைப்பு கிராமப் புறங்களில் புழங்கிடும் வழக்காறு ஆகும். வயதானவர்கள் விசாரிக்கும்போது.

ஒருவரின் உறவுத்தொடரை அறிந்து கொள்ள “தயிப்பங் கொடியா, தாய்கொடியா?” என்று கேட்பார்கள். அம்மாசி சொந்த ஊரில் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு, நிறைவேறாத கனவுகளுடன் சுற்றுகிறான். ஒரு போராட்டத்தின் வழியே சிறிது பஞ்சமி நிலத்தைப் பெறுகிறான்.

நிலம் எனும் அசேதனப் பொருள் ஒரு உயிரைப்போல் அவனைத் தொடர்ந்து வருகிறது. அதனால் நிலத்துக்கும் அம்மாசிக்குமான உறவை குறித்திட ‘தகப்பன் கொடி’ என்ற தலைப்பே சரியாக இருக்குமென்று நான் நினைத்தேன். தகப்பன் கொடி நாவலை எழுதியபோது நிரந்தர வேலை இல்லை.

ஒர் ஆங்கிலப் பள்ளியில் மாதம் 600 ரூபாய்க்கு ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து வந்ததும் தினமும் மாலையில் உட்கார்ந்து எழுதுவேன்.

எட்டுக்கு எட்டு என்ற அளவில் மூன்று அறைகளைக் கொண்ட ஓட்டு வீட்டில், ஒன்றில் அப்பாவும் தம்பிகளும் பீடி கற்றிக்கொண்டிருப்பார்கள், ஒன்றில் சமையல் வேலைகள் நடக்கும், ஒன்றில் நான் எழுதிக்கொண்டிருப்பேன்.

ஒரு விடுமுறை நாளில், அம்மாசியும் அவன் நண்பன் முத்துமாரியும் அரிதாரம் பூசிக்கொண்டு கூத்து நடத்தும் காட்சியை எழுதிக் கொண்டிருந்துவிட்டு, பகலில் சிறிது கண் அயர்ந்தபோது, கூத்து கட்டிய ஓர் உருவம் என்னை அழுத்துவதாக உணர்ந்து கத்தியபடி எழுந்தேன்.

வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து என்ன என்று கேட்டபடி சூழ்ந்து நின்றனர். நான் பேந்தப்பேந்த விழித்தேன். நாவல் என்னுள்ளே ஆழ்ந்து விட்டிருந்தது.

தகப்பன் கொடி வெளியாகி இருபதாண்டுகள் ஆகிவிட்டன. அது தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதையும், பொள்ளாச்சி மா.சுப்பிரமணியம் அறக்கட்டளை மற்றும் தலித் முரசு கலை இலக்கிய விருதுகளையும் பெற்றது.

தினமணி தன்னுடைய பொன்விழா சிறப்பிதழில் வேலூர் மாவட்ட வழக்காற்றை பதிவு செய்தமைக்காக ஒரு அத்தியாயத்தை அதிலிருந்து வெளியிட்டது.

தமிழினிக்குப் பிறகு ஆழி பதிப்பகத்தாலும், அடையாளம் பதிப்பகத்தாலும் மேலும் இரண்டு பதிப்புகளைக் கண்ட தகப்பன் கொடி, தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நிலமற்ற எளிய அடித்தட்டு மனிதன் ஒருவனின் அலைவுறும் வாழ்க்கை, ஒரு தலைமுறையின் வரலாறாக அதில் இருக்கிறது.

– நன்றி: அந்திமழை ஜனவரி 2022.

Comments (0)
Add Comment