திருக்குறள்-50: தமிழை வசப்படுத்திய சிவகுமார்!

தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது.

ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார்.

மொத்தம் 50 குறள்கள். அவற்றின் உள்ளடக்கத்திற்கு ஏற்றபடி ஒவ்வொரு அனுபவங்கள். இதில் பலருடைய அனுபவங்கள் இருக்கின்றன. அப்துல் கலாம், மகாத்மா காந்தி, ஜீவானந்தம், காமராஜர், பெரியார், ராஜாஜி, கலைவாணர், சிவாஜி, எம்.ஜி.ஆர் என்று பலருடைய வாழ்வின் செழுமையான அனுபவங்களைக் குறளோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

செங்காட்டுத் தோட்டத்து ஆத்தா முதல் துப்புரவுத் தொழிலாளியின் வாழ்வு வரை பலவற்றையும் ஐம்பது குறள்கள் வழியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பேச்சு மொழியின் எளிமை தான் இந்நூலின் தனிச்சிறப்பு. நூலை வாசிக்கும் போது பின்னணியில் சிவகுமாரின் குரல் எதிரொலிப்பதைப் போலிருக்கிறது.

திருக்குறளுக்குப் பரிமேலழகர் துவங்கி எத்தனையோ பேர் உரை எழுதி விட்டார்கள்.

ஆனால், மிக எளிமையாகத் தமிழ் படிக்கத் தெரிந்த எவரும் புரிந்து கொள்ளும் படியாகச் சொல்லப்பட்டிருப்பதனால் – தமிழைத் தயங்கிப் படிக்கிற இளைய தலைமுறையினரும் உள்ளே நுழைந்து படிக்கும் அளவுக்கு சுவாராஸயத்துடன் இருக்கிறது இந்த நூல்.

சிறப்பான வடிவமைப்புடன் நிறையப் புகைப்படங்களுடன் நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கிறது திருக்குறள் – 50 : வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்.

அறிமுக உரை

உலகப் பொதுமறை திருக்குறள் என்று ஏன் சொல்கிறோம்? அந்தக் குறளில் தமிழ்நாடு சிறந்தது என்றோ, தமிழ் மொழி சிறந்தது என்றோ, தமிழ்க் கடவுள் உயர்ந்தவர் என்றோ ஒரு வரி கூட இல்லை.

நாடு, இனம், மொழி, இறைவன் அனைத்தையும் கடந்த பொதுச் செய்திகளே அதில் உள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட குறளைப் பின்னால் வந்த இலக்கியங்களான சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், கந்த புராணம் உள்ளிட்ட இலக்கியங்களில் ஆங்காங்க மேற்கோள் காட்டப்பட்டுள்ளதே தவிர, பொதுமக்களுக்குத் திருக்குறளின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராமாயணம், மகாபாரதக் கதைகள் தெருக்கூத்து வழியாகக் காலங்காலமாகக் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அப்படித் திருக்குறளைச் சொல்ல முடியாது.

அது பழமொழி போல, நீதி நூல் போல, கதாநாயகன் – கதாநாயகி என்று யார் பெயரையும் வைத்துக் கதைகளாகச் சொல்லப்படவில்லை என்பதால் பாமர மக்களைச் சென்றடையவே இல்லை என்று சொல்லலாம்.

இந்த உலகப்பொதுமறை திருக்குறள் நமக்குத் தெரியவந்ததே கி.பி.1812 – ம் ஆண்டு தான் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா

13-ம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதினார். கி.பி. 1730-ம் ஆண்டு வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். இதுபோன்ற செய்திகள் மெத்தப் படித்தவர்களுக்கே தெரியும். சராசரி மனிதர்களுக்கு இவை சென்று சேரவேயில்லை.

என் சிற்றறிவுக்கு எட்டியவரை 209 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறள் பற்றி அக்கால மக்கள் அறிந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனி தமிழ்நாட்டின் பெரும்பகுதியில் ஆட்சியைப் பிடித்திருந்தபோது, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் பிரான்சிஸ் வொயிட் எல்லிஸ். அந்த எஃப், டபிள்யூ. எல்லிஸ்தான் சமஸ்கிருதம் கலக்காத ஒரு மொழி தென்னாட்டில் உள்ளது. அதுதான் தமிழ் உலகுக்குச் சொன்னவர்.

44 மொழிகள் அடங்கிய திராவிட மொழிக் குடும்பம் இங்கு இருந்தது. அதில் ஒன்றுதான் தமிழ் என்றார் எல்லிஸ்.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக ஹாரிங்டன் இருந்தார். அவரிடம் கந்தப்பன் என்ற பெயரில் ஒருவர் சமையல் வேலை பார்த்தார். அவர் வசித்த ஊர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம்.

சமையல்காரருக்கு அடுப்பெரிக்க ஓலைச்சுவடிகளைச் சிலர் கொண்டு கொடுத்தார்கள். சென்னையில் கலெக்டர் எல்லிஸ் ஓலைச்சுவடிகளைச் சேகரிக்கிறாரே; அவருக்கு இது பயன்படும் நினைத்தார் கந்தப்பன்.

மதுரை கலெக்டர் ஹாரிங்டனிடம் கொடுத்தார். அவர்தான் எல்லீஸிற்கு அந்த ஓலைச்சுவடிகளை அனுப்பி வைத்தார். அந்த ஓலையில் இருந்தவைதான் திருக்குறள்.

தமிழ்ப் பேராசான் அயோத்திதாசர் பாட்டனார்தான் இந்தச் சமையல்காரர் கந்தப்பன்.

சென்னை கலெக்டர் எல்லிஸ்தான் 1812-ம் ஆண்டு திருக்குறளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிட்டு வெளியிட்டார்.

கோவை மாவட்டம் சூலூரில் வசிக்கும் புலவர் செந்தலை கவுதமன் இதைத் தன்னுடைய உரையில் விரிவாக விளக்கமாகக் கூறியுள்ளார்.

குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர் என்று ஆரம்பித்து டாக்டர் மு. வரதராசனார், திருக்குறள் முனுசாமி, கி.ஆ.பெ.விஸ்வநாதம், கலைஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்பட பல நூற்றுக்கணக்கான பேர் உரை எழுதியுள்ளனர்.

1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் திருக்குறளை எழுதி மக்களுக்கு நினைவூட்டியது.

என்ன செய்தும் இந்த உலகப்பொதுமறை ஒரு வேதம் போல் புத்தகங்களில் உள்ளதே தவிர பொதுமக்களிடையே போய்ச் சேரவில்லை.

பள்ளியில் படிக்கும்போது பத்து, இருபது குறள்கள் மனப்பாடம் செய்வதோடு சரி. மற்றவர்களிடம் பேசும்போது பழமொழி போல திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசுவோரைத் தேட வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில்தான், வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை – அரசியல் உலகில் நிகழ்ந்தவற்றை – சினிமா உலகில் பார்த்தவற்றை, கேட்டவற்றை- எனது தனிமனித வாழ்க்கையில் அனுபவித்தவற்றைக் கதையாக்கி அந்தச் சம்பவங்களுக்குப் பொருந்துவது போல குறள்களைத் தேர்வு செய்து – அதுவும் கடினமான குறளாக இல்லாமல், எளிய வார்த்தைகளில் அமைந்த குறளைத் தேர்வு செய்து ‘திருக்குறள் 100’ என்ற தலைப்பில் 3 ஆண்டுகளாக எழுதி வைத்துள்ளேன்.

கொரோனா தொற்று நம்மைத் தாக்காமல் இருந்திருந்தால் சென்ற ஆண்டு, அக்டோபரில் ராமாயணம், மகாபாரதம் உரை போலவே 10 ஆயிரம் பேர் முன்னிலையில் உரை நிகழ்த்தி இருப்பேன்.

இந்த ஆண்டும் (2021) கல்லூரிகள் திறக்கிற மாதிரி தெரியவில்லை. திறந்தாலும், சமூக இடைவெளியில்லாமல், எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு இல்லை. முகக்கவசம் போடால் மாணவிகள் வந்தால்தான், நாம் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியும். ஆக, இந்த ஆண்டும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

அதனால் இந்து தமிழ் திசை வாசகர்களுடன் இணையதளத்தில் முதலில் இதைப் பகிர்ந்து கொண்டு, சூழ்நிலை சாதகமாகும்போது, மேடையில் உரை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

நான் சொல்லும் கதைகளின் உண்மைத்தன்மையும், உருக்கமும் சுவையும் வாசகர்களை நிச்சயம் கவரும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

அதேபோல் நான் எழுதியுள்ள இந்தத் திருக்குறள் கதைகள் ஒவ்வொன்றுக்கும் 5 – 6 திருக்குறள்கள் பொருந்தலாம்.

எனக்குப் பிடித்த எளிய குறளை மட்டுமே இதில் பொருத்தியுள்ளேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்த குறளைப் பொருத்தி ரசித்துக் கொள்ளுங்கள்…!!!

நூலுக்கு சிவகுமார் எழுதியிருக்கிற அணிந்துரை – நூலின் சிறப்புக்கு ஒரு சோற்றுப் பதம் மாதிரி.

Comments (0)
Add Comment