நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார்.
சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமைப்பு நிறுவனமான ஸிங்க் சினிமா ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,” இன்றைய சூழலில் ஏராளமான பெண்களும் கால் டாக்ஸி டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள். பெண் டிரைவரின் ஒருநாள், ஒரு டிரிப்பை மையப்படுத்திய திரைக்கதை தான் ‘டிரைவர் ஜமுனா’.
வாடகை காரை இயக்கும் பெண் ஓட்டுனர்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து உடல் மொழியையும், வாடிக்கையாளர்களின் மனநிலையையும் கேட்டறிந்த பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
பொதுவாக சாலை பயணம் பற்றிய திரைப்படம் என்றால் ப்ளூமேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தை உருவாக்குவார்கள். ஆனால் இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
டூப் போடாமல், அவரே வாகனத்தை வேகமாக இயக்கிக்கொண்டே, தனக்கான கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
சாலையைக் கவனித்துக்கொண்டு, உடன் நடிக்கும் நடிகர்களின் உரையாடலுக்கும் பதிலளித்துக்கொண்டே அவர் நடித்தது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது.
இது சவாலான வேடம் என்பதை உணர்ந்து, முழுமையான ஒத்துழைப்பை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்தார்” என்றார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.