தமிழுக்கு ஏன் இந்த மாற்றம்…!

தமிழுக்கு அமுதென்று பேர் – இன்று
தமிழிலே பெயர் வைப்பார்
எத்தனை பேர்?

அர்ச்சனை சீட்டுக்கள்தான்
தமிழில் உள்ளனவே தவிர
அர்ச்சனைகள் அல்ல…..

சமஸ்கிருதத்தில் பேசினால்தான்
சாமிக்கே புரியுமென்று
தேவாரம் திருவாசகத்தை
பழைய கடைக்குப் போட்டுவிட்டான்
பக்தித் தமிழன்!

தொல்காப்பியன் வரை
தோண்டியெடுத்துக் கொல்கிறது
தொலைக்காட்சி தமிழ்!

தொகுப்பாளிகள் தொண்டையில்
தமிழ் தூக்குப்போட்டுத் தொங்க
இளசுகளும் அப்படியே
அளவளாவித் தொலைக்கின்றனர்!

தனியார் எப்.எம்.களும்
தவணை முறை தண்டனைகளை
தமிழுக்குத் தர தயங்குவதில்லை!

அவர்களோடு பேசி வழியும்
அப்ராணி கூட்டமும்
அவர்கள் மாதிரியே கதைக்கின்றன!

மாசச் சம்பளத்தை உறிஞ்சும்
ஆங்கிலப் பள்ளிகளும்
அன்னைத் தமிழ் பேசினால்
அபராதம் விதிப்பதால்;….

முத்தமிழர் வாரிசுகளெல்லாம்
மூன்று வேளையும்
ஆங்கிலத்திலேதான்
முணங்கவும் செய்கின்றனர்

தமிழ்
தமிழரால் நிந்திக்கப்பட….

நடைபெற வேண்டியிருப்பது
பெயர் மாற்றம் மட்டுமல்ல
தமிழ் உணர்வு எனும்
உயிர் மாற்றம்!

‘காகித மரங்கள்’ நூலிலிருந்து…

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment