பிருந்தா சாரதியின் ‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ நூல் விமர்சனம்
இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி அவர்களிடம்தான் முதன் முதலாக நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.
ஜேடி – ஜெர்ரி ஆகியோரில் ஜேடி எனப்படும் ஜோசப் டி சாமி அவர்கள் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.
கல்லூரி முடித்து எதிர்காலம் குறித்த கனவுகளில் மிதந்த நாட்களில் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன்.
ஜேடி அப்போது இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிவிட்டுத் தன் கல்லூரி நண்பரான ஜெர்ரி அவர்களோடு இணைந்து விளம்பப் படங்கள் சில எடுத்திருந்தார்.
அவர்கள் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்கள் என்பதறிந்து நானும் திரைப்படத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய ஆவலை நண்பர் கவிஞர் ரவி சுப்ரமணியன் மூலமாகத் தெரிவித்தேன்.
உடனே அவர்கள் எடுக்க இருந்த ‘ஆனந்தா பிரஷர் குக்கர்’ விளம்பர படத்தில் என்னை உதவி இயக்குனராகச் சேர்த்துக்கொண்டார்கள்.
பின் அவர்களின் ‘கனவுகளை நனவாக்கும் கம்ப்யூட்டர்’ என்ற 13 வார ‘டாக்கு- ஃபிக்ஷன்’ பொதிகைத் தொலைக்காட்சித் தொடரிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.
அதன் பிறகுதான் நாசர் அவர்களின் ‘அவதாரத்’திற்கு வந்து சேர்ந்தேன்.
ஜேடி அவர்கள் மிகச் சிறந்த கவிஞர். ‘கனவுகளைப் பேச வந்தவன்’ என்ற அவருடைய கவிதைத் தொகுதி குறிப்பிடத் தகுந்த ஒரு தொகுதி. ஞானக்கூத்தன், தேனுகா உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகள் பலரும் அதைப் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
‘ஒவ்வொரு முறையும் கனிகளுக்காகக் கல்லெறியும்போது சப்தமில்லாமல்
சில பூக்களாவது உதிர்ந்துவிடுகின்றன.’
‘ஒரேமுறைதான்
வானம் என் விரல்களுக்குத் தட்டுப்பட்டது.
அப்போது வானம் இன்னதென்று நான் அறிந்திருக்கவில்லை.’
போன்ற கவிதைகள் எல்லாம் என்றென்றும் என்னால் மறக்க இயலாதவை. நூலின் ஒவ்வொரு கவிதையுமே குறிப்பிடத்தகுந்த கவிதைதான்.
விளம்பரப் படங்கள் திரைப்படத்துறை என்று கவனம் வேறு திசை நோக்கிச் சென்று அவர் மிகவும் பரபரப்பாகிவிட்டதால் கவிதை நூல்கள் அதிகமாக வெளியிடவில்லை.
ஆனால் ‘சாரல் இலக்கிய விருது’ என்ற ஒன்றை நிறுவி ஆண்டுதோறும் இலக்கியவாதிகளுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகையோடு விருதுகள் வழங்கித் தங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு நீர் ஊற்றி வளர்த்து வந்தார்கள்.
இப்போது அதில் ஒரு இடைவெளி விழுந்துவிட்டது. அதை அவர்கள் மீண்டும் தொடர வேண்டும் என்பது என் ஆசை.
அண்மையில் தங்கள் விளம்பர பட அனுபவங்களை நூலாக வெளியிட்டுள்ளனர். விஷூவல் கம்யுனிகேஷன் மாணவர்களுக்கும், புதிதாக விளம்பர படம் எடுப்பவர்களுக்கும் அது சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
நான் ‘நடைவண்டி’ வெளியிட்ட காலத்திலிருந்து என்னை அறிந்தவர் ஜேடி.
இப்போது என்னுடைய எட்டாவது கவிதைத் தொகுதியான ‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ என்ற ஹைக்கூ நூலைப் படித்துவிட்டு ‘Books & Readers – தமிழ்’ முகநூல் குழுமத்தில் தன் குறிப்பொன்றைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்தபோது எதிர்பாராத ஆனந்தமாக இருந்தது எனக்கு.
உங்களோடு அதைப் பகிர்ந்து கொள்கிறேன். இனி இயக்குனர் ஜேடி அவர்களின் பதிவு:
*
பிருந்தா சாரதி என் ஊர்க்காரர். கும்பகோணத்தின் கோயில் வாசனையும், காவேரி நதி நீச்சலும் தெரிந்தவர்.
நடைவண்டி பழக ஆரம்பித்த காலம் முதல் தெரிந்தவர். எத்தனை நீண்ட நெடிய கலை வாழ்க்கையைத் தாண்டி இன்று அவரது வீச்சு என்னை வியக்க வைக்கிறது.
ஒருகாலத்தில் எங்களது உதவியாளர், பின் வசனகர்த்தா, இயக்குனர், கதை விவாதம் செய்பவர், நண்பர் எல்லாவற்றையும் தாண்டி அவர் ஒரு கவிஞர்… அதுதான் அடையாளம். அதுதான் அவரது சிறகு. அவருக்கான கீரிடம்.
‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ படிக்கும் போது பல பக்கங்களில் வியப்பு, சற்றே புன்முறுவல், தோளை தட்டும் உணர்வு, சபாஷ் என்று சில சமயல் துள்ளல்.
குட்டிக் குட்டி வார்த்தைகளில் என்னென்ன ஜாலம், எத்தனை அர்த்தங்கள், மிருதங்கத்தை தட்டியவுடன் ஏற்படும் அதிர்வு, கல்லை எறிந்தவுடன் குளத்தில் ஏற்படும் தொடர் வட்டம்…
சந்தோஷமாய் வாழ்த்துகிறேன். நீண்ட பயணம் காத்திருக்கிறது….
சாம்பிளுக்குச் சில..
‘உள்ளே வரத் தவிக்கிறது
வண்ணத்துப்பூச்சி
கண்ணாடிச் சுவர்.’
இவை போன்று மனதில் தோற்றுவிக்கும் பிம்பம்..
‘அழகானது தான் மறதியும்
பாட்டி அணியும் பாதணிகளில் ஒன்று
இறந்த தாத்தாவுடையது.’
மூன்று வரிகளில் ஒரு வாழ்க்கை அல்லாவா தெரிகிறது.
‘சுழல்காற்று
பறக்கும் சிறகுகள்
உயிர்த்தெழுகிறது செத்த கோழி.’
‘அலை ஒசையில் கலக்கிறது
மணியோசை
கடற்கரை ஆலயத்தில் பிராத்தனை.’
‘நீச்சல் அடிப்பவர் மீதெல்லாம் பொறாமை கொள்கிறான்
அலைக்கு அஞ்சுபவன்.’
என்னுடைய கவிதை தொகுப்பில் ஒரு கவிதை இருக்கிறது.
‘நீச்சல் தெரியாதவன்
கனவெல்லாம்
படகு பிரயாணம்
பற்றியே இருக்கிறது.’
– என்று, அதை ஞாபகப்படுத்தியது இந்தக் கவிதை.
சாரதி, உன் கவிதைகள் காட்டும் உலகம், தோற்றுவிக்கும் பிம்பம் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லோரும் படித்து அதை உணரட்டும்.
வாழ்த்துகள்.
முக்கியமானது, திண்டுகல் தமிழ் பித்தனின் ஓவியங்கள், அப்படி ஒரு புரிதல், நேர்த்தி, ஒன்றுதல்.
சிறப்பு.
*
மிக்க நன்றி சார். தற்போது இயக்குனர் பாலா அவர்கள் இயக்க சூர்யா நடிக்கும் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வந்திருக்கிறேன். விரைவில் நேரில் சந்திக்கிறேன்.
*
அன்புடன்,
பிருந்தா சாரதி
தங்கள் உதவி இயக்குநர்
நன்றி: இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி