நூல் வாசிப்பு:
ஆசிரியை ரமாதேவி இரத்தினசாமி ஐ.நா.வுக்குச் சென்றுவந்த அனுபவங்களை தன் வாழ்க்கைக் கதையுடன் இணைத்தே கூறும் நூல்தான் அடுக்களை முதல் ஐ.நா. வரை. புதிய பதிப்பகமான ஹெர் ஸ்டோரிஸ் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.
ஆனால், “எனது ஐ.நா. அனுபவத்தை, அமெரிக்கப் பயணத்தை தம்பட்டம் அடித்துக் கொள்வதல்ல இந்நூலாக்கத்தின் நோக்கம்” என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் நூலாசிரியர் ரமாதேவி.
“ஒரு படைப்பை சமகால மொழியில், பேச்சு வழக்கில் எள்ளல் நடையுடன் எழுதும்போது பிற மொழிக் கலப்பு தவிர்க்க முடியாதது. அதுபோன்ற படைப்புகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும்கூட இலக்கிய உலகில் குறைத்தே மதிப்பிடப்படுகிறது.
இருந்தாலும் ஒரு நிகழ்வை பலரும் விரும்பக்கூடிய நடையில் பதிவு செய்த திருப்தியும் மனமகிழ்வும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த பயண நூலுக்கு எழுத்தாளர் லதா அணிந்துரை எழுதியுள்ளார். நூலைப் பற்றி புரிந்துகொள்ள அந்த அறிமுகம் வாசகர்களுக்கு மிகவும் பயன்படும்.
‘கனவுகள் மெய்ப்படட்டும்’ வெளியீட்டின்போது (சென்னை புத்தகக் கண்காட்சி 2021) தான் முதன்முதலாக ரமாதேவியை சந்தித்தேன். புத்தகம் பெற்று வந்து படித்தேன்.
நம் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த நிதர்சனங்கள் புத்தகம் முழுவதும் நிறைந்திருந்தது.
தன் “அடுக்களை டு ஐநா வரை” என்ற புத்தகத்திற்கு அணிந்துரை எழுதித்தர என்னை தொடர்பு கொண்டபோது, ”ரொம்ப சீரியசான புத்தகம் இல்ல. அப்படியே ஜாலியா போகும்” என்று சொல்லியே கொடுத்திருந்தார்.
ஆனால் புத்தகம் படிக்கத் தொடங்கியபோது அவர் தந்தை சிறுவயதில் இறந்துவிட்டது குறித்தும் கிராம வீட்டில் தன் அம்மா அவரையும் அவர் தம்பியையும் தனியாக கஷ்டப்பட்டு வளர்த்த கதையும், பெண்கள் எதற்கு படிக்கவேண்டும் என்று சுற்றியுள்ள பலர் கேள்விகளை எதிர்கொண்டாலும் தன் மகள் கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தது குறித்தும் எழுதியுள்ளார்.
சில வருடங்களுக்குப் பிறகு திருமணம் முடிந்து, தன் வேலை, கலைகள் என்று எல்லாவற்றையும் துறந்து அடுக்களையில் ஒரு “குடும்பப் பெண்ணாக” அடைந்ததையும் படிக்கும்போது, இது மீண்டும் பெண் விடுதலைதான் பேசப்போகிறதோ என்று தோன்றியது.
அதேநேரத்தில், அவர், கிடைத்த ஒவ்வொரு சிறு துரும்பையும் பிடித்துக்கொண்டு, அடுத்தடுத்த கட்டத்திற்கு எப்படி தன்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்ற விவரங்கள் அதிசயப்படவும், அவர் குறித்து பெருமைப்படவும் வைக்கிறது.
இதற்கு மேல் இந்தப் புத்தகம் ஆண்/பெண் பேதங்களை களைந்து, ஒரு சுவாரசியமான பயணக்கட்டுரையாக விரிவடைகிறது.
மிகவும் நகைச்சுவையாக கையாளப்பட்டிருக்கும் மொழி நடை, அவர் பல இடர்களை கடக்கும்போதும், அவர் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், இடது கையால் அவற்றை சமாளித்து, ஒதுக்கி, மிகவும் சுவாரசியம் ஏற்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறார்.
இவருடைய ஐநா சபை பயணத்தில் நகைச்சுவை மட்டுமே காணப்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாமே நேரே நின்று அவர் பார்க்கும் ஒவ்வொன்றையும் பார்ப்பது போல் ஒரு பிரமிப்பை அளிப்பதுடன், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதி நாடுகளின் கல்வி சார்ந்த நிலை குறித்தும், அவற்றின் பின்புலம் குறித்தும் பல செய்திகளை முன்வைக்கிறார்.
நடுவில் அரசியல், இனபேதங்கள், பெண் குழந்தை பிரச்சினைகள் என பலதரப்பட்ட உலகளவில் முக்கிய பங்கு வகிக்கும் பல விவரங்களை, மன்ஹட்டனில் தான் பார்க்கும் ஒவ்வொரு கட்டிடம், சிலை, ஐநா சபையின் கட்டிடம் உருவான கதை, எம்பயர் ஸ்டேட் பில்டிங் உருவான கதை என்று இத்தனை கருத்தான பதிவுகளை எப்படி இவரால் கொஞ்சம்கூட நகைச்சுவை இழை சிறிதும் பிசகாமல் பேசமுடிகிறது என்று ஆச்சரியத்தினூடே புத்தகத்தை முழு மூச்சாக படித்துமுடித்தேன்.
ரமாதேவி, உங்களின் இந்தக் கதை, என்னவெல்லாம் பேசுகிறது? பெண் சுதந்திரம், வைராக்கியம், ஐநா சபையிலிருந்து அழைப்பு வந்த பிறகும், அங்கு செல்வதற்கான வழிமுறைகளின் எளிமையற்ற தன்மை, அரசியல் பகடிகள், கல்வித்தரம், (கல்வியில் நம்மைவிட அதிகமாக முன்னேறியிருக்கும் நாடுகளின் கல்வித்தரம், நமக்கு கீழே இருக்கும் நாடுகளின் தரம், நடுவில் இயங்கிக்கொண்டிருக்கும் நாம், கையெழுத்து போடத்தெரிந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் அவலம்) சரித்திரம், இன்னும் என்னென்னவோ பேசுகிறது பட்டியிலடமுடியாமல்.
ஆனால் புத்தகம் முழுவதும் படித்து முடிக்கும்வரையில் என் உதட்டில் தோன்றி மறையாமல் என்னுடனே பயணித்த புன்னகைதான் ஹைலைட்” என்று லதா மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
அடுக்களை டூ ஐநா: ரமாதேவி இரத்தினசாமி
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை.
விலை ரூ. 150
தொடர்புக்கு: 75500 98666
பா. மகிழ்மதி