தோழர் பழ.நெடுமாறனின் 88-வது பிறந்தநாளையொட்டி சுப.வீ எழுதிய பதிவு
1980-களின் தொடக்கத்தில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களிடம் நான் அறிமுகமானேன். அப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை.
கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அக்காலகட்டத்தில், நான், மறைந்த புவி உமாச்சந்திரன், கவிஞர் காவிரிநாடன் அவர்களின் மகன் அண்ணல் ஆகியோர் சேர்ந்து, ‘தமிழீழச் சிவப்பு மலர்’ என்று ஒரு மலரை வெளியிட்டோம்.
1983 ஜூலை கலவரத்திற்குப் பிறகு அந்த முயற்சியில் இறங்கினோம்.
அந்த மலரை நெடுமாறன் அய்யா வெளியிட, அப்போது ஜூனியர் விகடனில் ஈழம் பற்றிய ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்த வழக்கறிஞர் கரிகாலன் பெற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம். அறிமுகம் இல்லாத எங்கள் அழைப்பை அய்யா ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, 1989 முதல் அவருடன் சேர்ந்து, சமூக அரசியல் தளத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற என் கோரிக்கை மறுக்கப்பட்டு, தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று கட்சியின் செயற்குழு முடிவெடுத்தபோது, அய்யாவை விட்டும் தமிழர் தேசிய இயக்கத்தை விட்டும் விலகினேன்.
கட்சியில் இல்லை என்றாலும் அய்யாவுடன் தொடர்பில் இருந்தேன். அவ்வப்போது சந்தித்தது உண்டு. தொலைபேசியில் பேசிக் கொள்வதும் உண்டு. ஆனாலும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சந்திக்கவே இல்லை.
இப்போது நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் தோன்றியது. அய்யாவுடன் இருக்கும் தோழர் தமிழ் வேங்கையைத் தொடர்பு கொண்டு, அவர் சென்னையில் இருப்பதை அறிந்து, 24.11.2021 அன்று காலை, சென்னைப் புறநகர் வேங்கைவாசலில் இருக்கும் அவர் இல்லம் சென்று சந்தித்தோம்!
ஆம், என்னுடன், என் துணைவியார், மருத்துவர் தாயப்பன், அவரின் துணைவியார், தோழர் இக்லாஸ் ஆகியயோர் வந்திருந்தனர்.
ஆண்டுகள் பலவற்றிற்குப் பிறகு 88 ஆம் அகவையைத் தாண்டியிருக்கும் அய்யாவைப் பார்த்தபோது உடலில் தளர்வு தெரிந்தது. வயதுக்கேற்ற தளர்வு. அய்யாவின் கைகளைப் பற்றிக் கொண்டபோது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின.
அவருடன் எத்தனை கூட்டங்கள், எத்தனை மகிழுந்துப் பயணங்கள், எத்தனை அரசியல் உரையாடல்கள், ஈழம் பற்றிய எத்தனை எத்தனை செய்திகள், எத்தனை நாள் உடன் சிறைவாசம் – எல்லாம் நினைவுக்கு வந்தன.
அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டதும், பெற்றுக்கொண்டதும் ஏராளமானவை! அந்த நன்றியுணர்ச்சியே கண்களில் நீராய்க் கசிந்தது.
அவர் தலைமையில்தான் எங்கள் பிள்ளைகள் மூவரின் திருமணங்களும் நடைபெற்றன.
அவருடன் கருத்து வேறுபாடு கொண்டுதான் வெளியில் வந்தேன். ஆனால் இன்று வரையில் என்னைப் பற்றி ஒரு சொல் கூடத் தவறாக அவர் கூறியதில்லை. அவர் மீது கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் நானும் ஒரு நாளும் மாற்றிக் கொண்டதுமில்லை.
அய்யாவின் வீட்டில் அன்பு மாறாத அம்மா, அய்யாவின் மகன் அமுதன், அவரின் துணைவியார், பேத்தி முகில் எல்லோரையும் சந்தித்தோம்.
பொடாவில் சிறையில் இருந்த காலத்தில் தவறாமல் சிறையில் எங்களை வந்து சந்தித்த, இயக்கப் பணிகளில் எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்த அய்யாவின் மகள் உமா, அலுவலகம் சென்றிருந்ததால், அவரை மட்டும் சந்திக்க முடியவில்லை.
தனிப்பட்ட முறையிலான சந்திப்புதான். ஆனாலும் அரசியலைத் தாண்டிய ஓர் அன்பும், ஆரோக்கியமான ஓர் உறவும் நெஞ்சமெல்லாம் நிறைந்தன.
வாசல் வரை வந்து வழியனுப்பிய அவருடைய பண்பு நெஞ்சை நெகிழ வைத்தது. மீண்டும் நான் இயல்பு நிலைக்குத் திரும்பச் சற்று நேரமானது!
நன்றி: சுப.வீரபாண்டியன் முகநூல் பதிவு
10.03.2022 12 : 30 P.M