பெங்களூர் சிறுமியின் திருக்குறள் சேவை
பெங்களூரைச் சேர்ந்த ஸ்வாதி – பாக்யராஜ் தம்பதியின் மகள் தியாஸ்ரீ, தினமும் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு திருக்குறளும் அதற்கான விளக்கமும் சொல்லிப் பதிவிடுகிறார்.
குடும்ப அளவில் இருந்த இந்த பகிர்வு, அந்த எல்லையைத் தாண்டி உறவினர்கள், நண்பர்களிடம் பாராட்டைப் பெற்றுவருகிறது.
சிறுமி தியாவுக்கு வயது 8. இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் படிக்கும் பள்ளியில் தமிழ் கிடையாது. அம்மா ஸ்வாதிதான் வீட்டில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்.
இந்தச் சிறுமி குறளும் விளக்கமும் சொல்வதைக் கேட்பதற்காக வாட்ஸ் ஆப்பில் தினமும் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாகப் பேசிய சிறுமியின் தாய் ஸ்வாதி, “எங்களுக்குச் சொந்த ஊர் மதுரைக்கு அருகிலுள்ள திருப்புவனம். என் கணவர் சிவில் என்ஜினீயாகப் பணியாற்றுகிறார்.
இந்த ஊரடங்கு காலத்தில் நாத்தனார் வீட்டுக்குச் சென்னை வந்திருந்தோம். அவர்கள் குழந்தைகளைத் திருக்குறள் சொல்லச் சொல்லித்தான் அந்த நாளைத் தொடங்குவார்கள்.
விடுமுறை நாட்களில் சென்றிருந்தபோது, அவர்கள் சொல்வதைப் பார்த்து மகள் தியாவும் சொல்ல ஆரம்பித்தாள். பெங்களூர் வந்த பிறகு அதையே தொடர்ந்தாள். நன்றாகவே சொல்வாள்.
குறளுக்கான உரையை தியா மனப்பாடம் செய்து அப்படியே சொல்வதில்லை. நாங்கள் சொல்கிற விளக்கத்தை அவளாகப் புரிந்துகொண்டு, தன் சொந்த மொழியில் விளக்கம் சொல்வாள். இதுவரை 250 குறளும் விளக்கமும் சொல்லியிருக்கிறாள்.
உங்கள் குழந்தை எளிய மொழியில் சொன்னாலும் எங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது என்று பலரும் பாராட்டுகிறார்கள். ஒரு நாள் வாட்ஸ்ஆப்பில் போடாமல் விட்டால்கூட, ஏன் குறள் வரவில்லை என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தியா சொல்வது பிடித்திருக்கிறது.
சில நாட்கள் தியாவின் அக்காவும் குறள் சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு அவள் படிப்பின் காரணமாக விட்டுவிட்டாள். அந்த இடத்தைத்தான் இளைய மகள் தியா பிடித்திருக்கிறாள். திருக்குறள் சொல்வதில் அவளுக்கு இயல்பாகவே ஆர்வம் இருக்கிறது. நாங்கள் வற்புறுத்துவதில்லை.
என் கணவர்தான் தியாவைத் தினமும் குறள் சொல்லச் சொல்லி வாட்ஸ் ஆப்பில் பதிவிடுகிறார்.
இந்தப் பணியைத் தொடங்கி 250 நாட்கள் கடந்துவிட்டன. ஒவ்வொரு நாள் இரவும் குறளும் விளக்கும் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் தியா.
கட்டுமானத் தொழிலாளர்கள்கூட பாப்பா சொல்லும் குறளைக் கேட்கிறார்கள்” என்று செல்ல மகள் பற்றி பெருமிதம் பொங்கப் பேசுகிறார்.
சிறுமி தியாவிடம் பேசினோம்: “அம்மா தினமும் எனக்குக் குறளைப் படிச்சுட்டுச் சொல்லுவாங்க. அதற்கான விளக்கமும் சொல்லுவாங்க. நான் மனப்பாடம் செய்து சொல்வேன். எனக்கு இதில் ஆர்வம் இருக்கு” என்று மழலை மொழியில் பேசுகிறார்.
பேசி முடித்ததும் நமக்காக “இன்னா செய்தாரை ஒறுத்தல்…” என்ற குறளையும் அதற்கான விளக்கத்தையும் சிறுமி தியா சொல்லிக்காட்டினார்.
பா. மகிழ்மதி
07.03.2022 11 : 50 A.M