மார்ச் – 5 தேசிய மரம் நாள்
இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிருக்கும் தேவை காற்று. இதில் மரங்களின் பங்கு அளவிட முடியாதது. ஒவ்வொரு மரமும் மனித உயிர்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு வரம்.
இந்த மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் கடமையாகும். எனவே தான் ஆண்டு தோறும் மார்ச் 5 நாள் தேசிய மரம் நாள் கொண்டாடப்படுகிறது.
இதனால் மரங்களின் பாதுகாப்பு குறித்து மனிதர்களுக்கு மரத்தின் அவசியம் குறித்தும் இதில் பார்க்கலாம்.
மரத்தின் அவசியம் என்ன?
சராசரியாக ஒரு வளர்ந்த மனிதன் நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிப்பதாக கூறுகின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை சுவாசிப்பதாக ஆய்வு கூறுகிறது.
இதில் 20 சதவீதம் ஆக்சிஜன் என்று எடுத்துக் கொண்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறார்கள்.
சந்தையில் 2.75 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500 இதை வைத்து நாம் கணக்கிட்டு பார்த்தால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுவாசிக்கும் ஆக்ஸிஜன் மதிப்பு ரூ.13 லட்சம்.
அப்படியானால் மரங்கள் தரும் சேவைகளை நம்மால் மதிப்பிட முடியாது. இதைப்பற்றி ஆராய்ச்சிகள் கூறும் போது இரண்டு வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி என கணக்கிட்டுள்ளனர்.
ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் மட்டும் இவ்வளவு என்றால் அதிலிருந்து கிடைக்கும் மற்ற பொருட்களின் மதிப்பு..? எண்ணில் அடங்காதவை என்றே கூற வேண்டும்.
மரங்கள் காற்று மாசடைவதைத் தடுத்து தூய்மை செய்கின்றன. கற்றில் கார்பன் மோனாக்சைடு அதிகரிப்பதை குறைப்பதோடு, வாகனப் புகையில் இருந்து காற்று மாசடைவதையும் மரங்கள் தடுக்கிறது.
விலங்குகள், பறவைகளின் வாழ்விடமாகவும் அனைத்து உயிர்களையும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நிழலையும் தருகின்றன.
தற்போது நாம் உணர்கின்ற அதிகப்படியான வெப்பத்திற்கும் பூமி வெப்பமாவதற்கும் காரணம் நாம் மரங்களை அழிப்பதால் வந்த வினை.
மரங்கள் இயற்கைச் சீற்றங்களில் இருந்து மண்ணரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது.
மரத்தின் பாதுகாப்பு
மனிதன் உயிர் வாழவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் மரங்களைப் பாதுகாப்பதில் நமது பங்கு நிச்சயம் இருக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றி இடம் இருந்தால் நமக்கு தேவையான மரங்களை நட்டு வைக்கலாம். இதன் மூலம் வீட்டுக்குள் வரும் அசுத்தக் காற்று தடுக்கப்பட்டு சுத்தமான காற்று கிடைக்கும்.
வெயில் காலத்தில் நிழல், மழை, சுத்தமான காற்று, பழங்கள், கொட்டைகள், இலை, பூ, வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் என எத்தனையோ நமக்கு கிடைக்கின்றன. அதன் பயன்கள் சொல்லில் அடங்காதவை.
1970-க்குப் பிறகு இயற்கை வளங்களை மனிதர்கள் தவறான முறையில் கையாள்வது இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர்.
இதனால் 33 சதவீத இயற்கை வளங்களைப் பூமி இழந்து விட்டதாக உலக இயற்கை நிதியம் [WWF] கூறுகிறது.
இதை உணர்ந்து மனித குலம் இயற்கையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர் காலத்தில் ஒட்டுமொத்த அழிவாக இருக்கும் என்று உயிரியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே இயற்கை வளங்களையும் மரங்களையும் எப்படிப் பாதுகாப்பது என்று புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
மரங்கள் இல்லை என்றால் நமது சுவாசம் நின்று விடும் என்பது நமக்கு உணர்த்த கொரோனா போன்ற பெரும் தொற்று எச்சரித்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு இன்று முதல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மரங்களைப் பாதுகாப்போம் என்று உறுதி ஏற்போம்.
-யாழினி சோமு
05.03.2022 10 : 50 A.M