சென்னை மேயர், துணை மேயர் பதவிக்கு 4ம் தேதி தேர்தல்!

சென்னை மாநகராட்சியில், 2016-ம் ஆண்டுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்தது.

அதன்பின், தேர்தல் நடைபெறாத நிலையில், மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

அதேபோல் மண்டல அளவில் உதவி கமிஷனர்களும், வார்டு அளவில் உதவி இளநிலை பொறியாளர்களும் சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டு வந்தனர்.

ஆறு ஆண்டுகளுக்கு பின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. இத்தேர்தலில், சென்னை மாநகராட்சிக்கு முதல் முறையாக பட்டியலின பெண் மேயர் பதவியிடம் ஒதுக்கப்பட்டது.

நகராட்சியாக இருந்து புதிதாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி ஆகியவற்றுக்கும் முதல் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் தி.மு.க. அதன் கூட்டணி, 178 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள இடங்களில் அ.தி.மு.க. – பா.ஜ. – அ.ம.மு.க. மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில், தி.மு.க. கூட்டணி – 54; அ.தி.மு.க., கூட்டணி – 9; சுயேச்சைகள் – 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆவடியில், தி.மு.க., கூட்டணி – 43; அ.தி.மு.க. – 4; சுயேச்சை ஒருவர் என வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 200 உறுப்பினர்கள், வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற வளாகத்தில், நாளை காலை 10:00 மணியளவில் பதவியேற்க உள்ளனர்.

இதற்காக, மாமன்ற வளாகம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இவர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதேபோல், தாம்பரத்தில் 70 உறுப்பினர்கள்; ஆவடியில் 48 உறுப்பினர்கள் அந்தந்த மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பதவியேற்க உள்ளனர்.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளை ஆளுங்கட்சியான தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

இதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆவடி மாநகராட்சி பட்டியலின பொதுப்பிரிவில் உள்ளது.

இந்த மூன்று மாநகராட்சிகளிலும், அடுத்த மேயர், துணை மேயர் யார் என பல்வேறு பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன.

இதற்காக, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தலைமையிடம் விருப்பம் தெரிவித்து காத்திருக்கின்றனர்.

தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல், மார்ச் 4-ல் நடக்க உள்ளது.

அதற்கு முன், தி.மு.க. அணியில், மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை ஓரிரு நாளில் தி.மு.க. தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் பதவியேற்க, 200 உறுப்பினர்கள் மாமன்ற வளாகத்திற்கு வர உள்ளனர். அதேநேரம், அவர்களது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் ஆகியோரும் மாமன்ற வளாகத்தில் குவிய வாய்ப்புள்ளது.

மேலும், மாலை அணிவித்தல், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்கி மகிழ்தல் போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, இன்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

01.03.2022 12 : 30 P.M

Comments (0)
Add Comment