பாரினில் ஏதொரு நூல் இது போலே!  

நூல் வாசிப்பு:

சமகாலத் தமிழ் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க சிலரில் முக்கியமானவர் டாக்டர் ப.சரவணன்.

கல்வித்துறையில் பணியாற்றும் அவர் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாகக் கருதப்படுகிற வள்ளலார் பற்றிய ஆய்வு நூல்களின் தமிழ் இலக்கிய வெளியில் அதிகம் அறியப்பட்டவர். கலிங்கத்துப்பரணி, அருட்பா மருட்பா என பல நூல்களின் ஆசிரியர்.

சமீபத்திய அவரது நூல் திருவாசகத்திற்கான எளிய உரை. எதையும் ஏனோதானோ என்று செய்யாமல் அதற்குரிய காலத்தைச் செலவழித்து தரமான நூல்களைத் தரும் ஆய்வறிஞராக இருக்கிறார் சரவணன்.

திருவாசக உரை நூலுக்கு எழுதிய முன்னுரை தனி நூலைப் போல சுவையாக இருக்கிறது.

தாய் இணையதள வாசகர்களுக்காக அந்த முன்னுரையில் இருந்து…

மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளச் சிவபெருமான் தம் கைப்பட எழுதி, ‘திருச்சிற்றம்பலமுடையான்’ என்று கைசாத்து இட்டு அருளிய நூல் திருவாசகம் என்பது நாம் வழிவழியாகக் கேட்டுவரும் செய்தி.

போற்றுதலுக்குரிய பல நூல்கள் உலகில் இருந்துவரும் நிலையில், ‘இறைவன் தாம் கற்று மகிழ ஒரு நூலை மனிதனிடத்து எதிர்பார்த்தான்’ என்பது விந்தையிலும் விந்தையாய் இருக்கிறது.

இறைவனுக்கு வேண்டிய நூலாகத் திருவாசகம் அமைந்ததால், இறை அனுபவத்தையே பொருளாகக் கொண்டு அந்நூல் பொலிகின்றது. இதைத்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை,

கடையூழி வரும்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்து

உடையான் உன்வாசகத் துள்ஒருபிரதி கருதியதே

என்று எழுதிச் சென்றார்.

பெருந்துறைப் புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த இத்திருவாசகம் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாவதாக இடம்பெற்றுள்ளது. சிவபுராணம் தொடங்கி அச்சோ பதிகம் ஈறாக 51 பகுதிகளாக 658 பாடல்கள்களைக் கொண்டது.

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளின் மொத்த மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று ஆதலின் திருவாசகமும் ஐம்பத்தொரு பகுதிகளாக அமைந்து நிற்கின்றது என்பர் ஒருசாரார்.

இதற்கு மறுதலையாக, ‘நமச்சிவாய வாழ்க!’ எனத் தொடங்கி ‘ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’ என்று முடியும் வரையிலான பாடலடிகளை நோக்கின் முறையே, வாழ்க என முடிவன 6; வெல்க என முடிவன 5; போற்றி என முடிவன 8; ஆக 6, 5, 8 என்ற எண்களில் அமைந்த பாடல்களைத் தன்னகத்தே கொண்டு 658 பாடல்களால் சிறக்கிறது திருவாசகம் என்பர் மற்றொரு சாரார்.

இம்மாதிரியான பல சிறப்புகள் பொருந்திய இந்நூலை வெறும் பக்திக்கண் கொண்டு மட்டும் பாராமல் வேறு சில கருத்துகளும் இதனுள் பொதிந்துள என்னும் நோக்கில் காணும்போது உண்மையில் உலகில் இதுபோன்றதொரு நூல் இல்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட நிலைக்கு வருவதற்குச் சான்றாதாரமாய் விளங்கும் முக்கியக் கருத்துக்கள் ஒருசிலவற்றை மட்டும் இங்குப் பருந்துப் பார்வையில் காண்போம்.

வானியல் கருத்து:

கோடிக்கணக்கான பால் வீதிகள் இந்தப் பேரண்டத்தில் உலா வருகின்றன. நாம் வாழும் உலகத்தைப் போலவே பல உலகங்கள் இந்தப் பேரண்டத்தில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால், உலகம் தட்டையானது என்று மேலை விஞ்ஞானிகள் கூறிவந்த வேளையில் அதற்கும் முன்பாகவே உலகம் உருண்டையானது என்பதைத் திருவாசகம் பதிவு செய்துள்ளது.

இந்த உலகை விட்டு நாம் பறந்துபோவதாக வைத்துக் கொள்வோம். எல்லை இல்லாத இந்த அண்டத்தைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். நாம் புறப்பட்டு வந்த வழியைச் சற்றுத் திரும்பிப் பார்த்தால் அற்புதமான ஒரு காட்சியைக் காண்போம்.

ஆம். சிறு தூசி போலவே கோடிக்கணக்கான பால்வீதிகளும் கண்ணுக்குப் புலப்படும். இதை இன்றைய விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். இவற்றை 6 அடிகளில் மாணிக்கவாசகர் திருவண்டப் பகுதியில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

வீட்டுக்குள் வெயில் ஒளிக்கற்றையாகப் பாய்வதைப் பார்த்திருப்போம். அதைக் கூர்ந்து கவனித்தால் நுண்ணிய தூசிகள் மிதப்பதைப் பார்க்கலாம்.

அந்தத் தூசுகள் மிதப்பதைப் போலவே இந்தப் பேரண்டத்தில் பால்வீதிகளும் கோள்களும் மிதந்து கொண்டிருக்கின்றன என்கிறார்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்… சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” என்பன அப்பாடல் அடிகள்.

பேரண்டத்தின் கணக்கிட முடியாத அந்த அளவை, அண்ட சராசரம் நடத்தும் கூத்தைச் சிவபிரானின் திருநடனமாகச் சொல்வர் ஆன்றோர்.

இன்று ‘கடவுள் துகள்’ என்று கூறுவது காதில் விழுகிறதன்றோ?

உடலியல் கருத்து:

ஆணின் உயிரணு பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்தால் கரு உருவாகும். லட்சக்கணக்கான உயிரணுக்கள் தாயின் கருப்பையை நோக்கிப் போட்டிப் போட்டுக் கொண்டு நீந்திச் செல்லும்.

முதலில் எந்த உயிரணு கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்கிறதோ அதுவே வளர்ந்து குழந்தையாக உருப்பெறும். இந்த உடலியல் நிகழ்வுகளை வெறுங்கண்களால் நம்மால் பார்க்க முடியாது.

ஏனெனில், பெண்ணின் கருமுட்டை 100 மைக்ரோ மீட்டர் அளவு சிறியது. ஆணின் உயிரணு 50 மைக்ரோ மீட்டர் அளவு நுண்ணியது. (ஒரு மீட்டர் அளவினைப் பத்து இலட்சம் கூறுகளாகத் துண்டுபடுத்தினால் அதில் ஒரு கூறுதான் ஒரு மைக்ரோ மீட்டர்.)

இந்த உடலியல் நிகழ்வுகளைப் போற்றித் திருஅகவலில் அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார் மாணிக்கவாசகர்.

தம்மை இகழ்தல்:

திருவாசகத்தில் பல இடங்களில் மாணிக்கவாசகர் தம்மை இகழ்ந்து தாழ்த்திப் பாடுகிறார். நாயினேன், பேயேன், புலையனேன், பேதையேன், அன்பிலேன், கடையன், உன்மத்தன், சழக்கன், கொடியன், பித்தன் என இப்படிப்பட்ட சொற்களால் தம்மைத் தாழ்த்திப் பாடுகிறார்.

எனினும், பல இடங்களில் நாயோடு மட்டுமே தம்மை ஒப்பிட்டு அதைவிடத் தம்மை மேலும் தாழ்த்திப் பாடுகிறார். ‘தென்னவன் பிரமராய’னாய் இலங்கிய வாதவூரர், தம்மை நாயினும் கீழாய்த் தாழ்த்திக் கொள்வதற்கான காரணத்தை இந்நூலில் சிவபுராணத்துள் காணலாம்.

ஆற்றுப்படுத்துதல்:

ஆற்றுப்படுத்துதல் என்பது தமிழில் தொன்றுதொட்டு வரும் மரபாகும். ஆற்றுப்படுத்துதல் என்பது நெறிப்படுத்துதல், வழிப்படுத்துதல் என்னும் பொருள்படும்.

இங்கு அடியாரை நெறிப்படுத்தவும் வழிப்படுத்தவும் மாணிக்கவாசகர் தம் திருப்பள்ளி எழுச்சியில் இச்சொற்களைப் பயன்படுத்துகிறார்.

“அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்” (10), “எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை / ஆண்டருள் புரியும் எம்பெருமான்” (5) என்பனவற்றில் ஆற்றுப்படுத்தல் மரபைக் காண்க.

தொன்மக் கதைகள்:

திருவாசகத்தில் தொன்மக் கதைகள் பல நேரடியாகவும் மறைமுகமாகவும் பயின்று வருகின்றன. இக்கதைகளைத் திருவிளையாடல் புராணத்திலும் காணமுடியும்.

எனினும், சில கதைகள் ‘இன்னவை’ என்பது தெரியவில்லை. “இருங்கடல் வாணற்குத் தீயில் தோன்றும் ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவறியார்” (43:8) என்னும் பகுதியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உவமைகள்:

மாணிக்கவாசகர் உவமைகள் வாயிலாகக் கருத்தைக் கூறுவதில் வல்லவர். செத்திலாப் பத்தில் இடம்பெறும் உதாரணம் ஒன்றைக் காண்போம். ‘பிராய்’ என்பது ஒருவகை மரம்.

சற்றே உலர்ந்து பசையற்று யாண்டும் என்றும் இருக்கும் என்று உரையாசிரியர்கள் கூறுவர். இந்தப் பிராய் மரத்தைப் போலும் நன்கு காய்ந்த கட்டையை ஒத்து, என் மனமும் ஈரமில்லாத வன்னெஞ்சம் ஆயிற்று என்கிறார் வாசகர்.

அதேபோல உலோகங்களில் இரும்பு வலியது. பழுக்கக் காய்ச்சினும் வளைக்கவும் நீட்டி அடிக்கவும் எளிதில் இடம் தராமல் துன்புறுத்துவது. அந்தக் கடின இரும்பைவிடக் கடினமானது தம் செவிகள் என்கிறார். இப்படிப்பட்ட உவமைகள் பலவற்றை நூலுள் பரக்கக் காணலாம்.

மரபு மாற்றம்:

“கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.” கன்றை ஈன்ற பசு, அக்கன்றின்பால் கொண்ட காதலால் கனிந்து உருகி அன்பு சுரப்பது போலத் தாம் இறைவன்பால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி உருகும் தன்மை தோன்றக் கற்றாவின் மனம்போல் என்றார்.

இறைவன் தாயாகவும் உலக உயிர்கள் குழந்தையாகவும் இருப்பதாகக் கூறும் மரபை மாற்றி இறைவனைக் கன்றாக்கிய மாணிக்கவாசகர் தம்மைத் தாய்ப் பசுவாக உருவகித்த சிறப்பு மிக உயர்ந்தது; எண்ணியெண்ணி இன்புறத்தக்கது; குழந்தை மனம் கொண்ட அடியவர்களின் பேரன்புத் திறத்தைப் புலப்படுத்துவது.

பெருந்துணையான்:

இடர் உற்றகாலையில் யாரொருவர் துணையாக இருப்பாரோ அவரே பெருந்துணையாக இருக்கமுடியும்; ஆதலின் இறைவனை ‘உறுதுணை’ என்று கூறுகிறார்.

“சடையானே தழலாடி… உடையானே உன்னை யல்லாது உறுதுணை மற்றறியேனே” (திருப்புலம்பல்) என்று வருவது காண்க. இதே போல இறைவனின் திருவடிகளைத் தமக்குப் பற்றுக்கோடு எனப் பல இடங்களில் பாடியிருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ் முதலாகிய பொருள்:

எதற்கும் ஒரு முதல் வேண்டும். முதல் இல்லையேல் ஊதியம் இல்லை என்கிறது திருக்குறள் (449). எனவே, நமது வாழ்விற்கும் ஒரு முதல் இன்றியமையாதது. அந்த முதற்பொருள் எதுவென்றால் பரம்பொருளாகிய சிவபெருமானே.

அவன்தான் உயிர்கள் அனைத்திற்கும் முதற்பொருளாக நின்று வழிநடத்துகின்றான். எனவேதான் மாணிக்கவாசகர், வாசகத்தின் பல இடங்களில் ‘என்றன் வாழ் முதலே’ என்று இறைவனை விளிக்கிறார்.

அற்புதப் பாடலும் அதிசய நிகழ்வும்:

பள்ளியகரம் நீ. கந்தசாமி பிள்ளை என்பவருக்கு ஓர் ஆசிரியர் நண்பர். இலத்தீன் மொழி கற்றவவர். கத்தோலிக்க கிறித்துவர். வழக்கறிஞர். அழுத்தமான சமயப் பற்றுடையவர். நான்காம் வகுப்பிற்குமேல் தமிழ் பயிலாதவர். இலத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழி கற்றவர்.

ஒரு சமயம் நண்பர் களைப்பாய் வீடு வருகிறார். கந்தசாமிப் பிள்ளையைப் பார்த்து, “தம்பி, என் வாழ்க்கை ஆண்டவனைத் தூற்றுவதிலேயே கழிகிறது. என்ன செய்வது? மனம் அமைதியடையவில்லை. இச்சொற்கள்தான் எனக்கு ஆறுதல்” என நாற்காலியில் அமர்கிறார்.

மேலும், விவிலியச் சொற்றொடரின் அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி இந்தச் சொற்றொடர் உள்ளத்தை எவ்வாறு அமைதிபடுத்துகிறது. இத்தகைய அரிய வசனங்கள் நம் தமிழில் இல்லையே என்றார்.

உடனே கந்தசாமிப் பிள்ளை, நண்பர் கூறிய விரிவுரைக்கு எல்லாம் பொருத்தமானதும் இனிய சொற்களால் ஆனதுமான, “ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து / வேசறுவேனை விடுதி கண்டாய்” என்னும் திருவாசகத் தொடரைக் கூறி, பின்பு திருவாசகத்தைப் பற்றியும் மாணிக்கவாசகர் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

உடனே அந்தக் கிறித்துவ நண்பர் மனம் மகிழ்ந்து, அதன் அருமையை உணர்ந்து, தான் இதுகாறும் திருவாசகம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இயலாது போயிற்றே என்று எண்ணி, இனியும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லையே என வருந்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவாசகப் பாடலை வாசித்துச் சொல்லும்படி கந்தசாமிப் பிள்ளையிடம் கூறினார்.

கந்தசாமிப் பிள்ளையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவாசகப் பாடலை நண்பருக்கு விளக்கிவந்தார். நாட்கள் பல கடந்தன. கிறித்துவ நண்பர் நோய்வாய்ப்பட்டார். ஆவி அகத்தோ புறத்தோ என்னும் நிலையில் படுத்திருந்தார்.

அப்போது அவரைக் காணவந்த கந்தசாமிப் பிள்ளையிடம் தம்பி, ‘காலத்தைப் போக்காது திருவாசகப் பாடல் ஒன்றைச் சொல்’ என்றார். கந்தசாமிப் பிள்ளை, “மாவடு வகிரன்ன கண்ணி பங்கா நின் மலரடிக்கே…” என்னும் பாடலைப் பாடினார்.

பாடலைக் கேட்ட அவர், “போதும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துப் பெரிய எழுத்துக்களில் ‘மலரடிக்கே கூவிடுவாய் அடியேன் உன் அடைக்கலமே’ என்னும் அடியை மட்டும் பெரிய எழுத்துக்களில் எழுதிக் கொடு என்றார்.

அவர் சொன்னபடி கந்தசாமிப் பிள்ளையும் பெரிய எழுத்துக்களில் அதை எழுதிக் கொடுக்க, அதை வாங்கி அருகில் வைத்துக்கொண்டு ஒருமுறை பார்த்தார்; படித்தார்.

பின்பு கந்தசாமிப் பிள்ளையிடம் நீ போகலாம், இனி வரவேண்டியதில்லை என்று கூறிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

மறுநாள் அந்தக் கிறித்துவர் இறையடி சேர்ந்தார். அந்தப் பாடல்வழி நடந்த அதிசய நிகழ்வு நம்மையெல்லாம் கண்கலங்க வைக்கிறதன்றோ?

உரிமை உசாவல்:

மாணிக்கவாசகர் பல இடங்களில் இறைவனோடு உரிமைச் சண்டை போடுகிறார். நீ வீடுபேறு வழங்கி அருளாமல் போனால் நான் யாரை நொந்துகொள்வது? என் குறையை எவரிடம் எடுத்துரைப்பது? என்கிறார்.

“ஆரோடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைக்கேன் / ஆண்ட நீ அருளிலை யானால்….” என்னும் வாழாப் பத்தில் இதைக் காணலாம். மேலும், “ஊடுவது உன்னோடு உவப்பதுவும் உன்னை” என்று இன்னும் ஒருபடி மேலேபோய் உரைக்கிறார்.

அதே சமயம் வருக என்று அழைத்து என்னைத் தன்பால் அணைத்துக்கொள்ள வில்லையானால் ‘வார்கடல் உலகில் வாழமாட்டேன் கண்டாய்’ என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

பெண் பெருமை பேசும் நூல்:

எந்நாட்டவர்க்கும் இறையாய் நின்றிலங்கும் எம்பெருமான் தென்னாடுடையான். தென்னாட்டிலும்  பாண்டி நாடதனில் உத்தரகோசமங்கையைத் தனது ஊராக்கி மகிழ்ந்தவன்.

“பத்தரெலாம் பார்மேல் சிவபுரம்போல் கொண்டாடும் உத்தரகோசமங்கை ஊர்” என மாதொரு பாகத்தன் வாழ்பதியைத் திருத்தசாங்கத்தில் திருவாதவூரர் சிறப்பிக்கின்றார்.

மங்கையூர் என்பதனால் மாதரைப் பெருமையுறச் செய்யப் பெரும்புரட்சி ஒன்றினைப் பெருந்துறைப் பெருமான் செய்தருளினான் என்பர்.

திருஉத்தரகோசமங்கையில் இசை வல்லாராகிய இயக்கநல்லார் அறுபத்து நான்கு மகளிரையும் திருவடி ஞானம் பெறச்செய்து தனக்குரிய திருவருட் குணங்கள் எட்டனையும் எய்துமாறு செய்தருளி வீடுபேறு அளித்தனன்.

பெண்பாலர்க்கு வீடுபேறு இல்லை என்னும் ஏனைய சமயத்தார் கொள்கை சிறிதும் ஒவ்வாமை இதனால் பெறப்படுகிறது.

மற்கட நியாயமும் மார்ச்சார நியாயமும்: மற்கட நியாயம் என்பது குரங்குக் குட்டி நியாயம்; மார்ச்சார நியாயம் என்பது பூனைக் குட்டி நியாயம். குரங்குக் குட்டி நியாயம் என்பது, குரங்குக் குட்டியானது தன் தாயினது வயிற்றை இறுகப் பற்றிக்கொள்ளும் இயல்புடையது.

அப்போது தாய்க்குரங்கானது மரங்களில் கிளைக்குக் கிளை தாவும்போதும் தன் குட்டியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தாவிச் செல்லும்.

ஆனால் பூனைக் குட்டி நியாயம் என்பது அப்படியன்று. எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியில் ஓடி வந்து திரிவது பூனைக் குட்டியின் இயல்பு.

அவ்வாறு திரியும் குட்டியைத் தன் வாயால் கவ்வி வந்து பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்போ தாய்ப் பூனைக்குரியது. இதைத்தான் “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்னும் பாடல் மூலம் விளக்குகிறார் மாணிக்கவாசகர்.

அதாவது, தகுதி இல்லாத உயிர்களை இறைவன் தானே புறம்புறம் திரிந்து அவர்கட்கு நானாவிதத்திலும் உதவிபுரிந்து அவ்வுயிர்களைப் பூனைக் குட்டியைக் காப்பதுபோலப் பாதுகாக்கிறான் என்பதைப் பாடலின் முற்பகுதியும்; தகுதியுள்ள உயிர்கள் இறைவனது பெருமையை உணர்ந்து அவனைத் தாமே இறுகப் பற்றிக்கொண்டு உய்தி பெறுவது போல மாணிக்கவாசகர் இறைவனைப் பற்றிக்கொள்கிறார் என்பதைப் பாடலின் பிற்பகுதியும் உணர்த்துகின்றன.

பக்குவநிலைக்கேற்ப படிநிலைகள்:

சரியை கிரியை யோகம் ஞானம் என வழிபாட்டுப் படிநிலைகளை நான்காகக் கூறுகிறது சைவசித்தாந்தம். சிவனடியார்கள் அனைவரும் ஒருதிறத்தாரே ஆயினும் பக்குவ நிலைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவர்.

இதைப் பாண்டியனின் அமைச்சராக இருந்த மணிவாசகர் நால்வகைப் படையினூடாக நன்கு விளக்குகிறார். திருப்படை எழுச்சியின் 2ஆம் பாடலில் இதனைக் காணலாம்.

தொண்டர்களை, பக்தர்களை, யோகிகளை, ஞானிகளை நால்வகைப் படையினராக வைத்து அவரவருக்குரிய ஸ்தானத்தை மணிவாசகர் வழங்கியிருக்கும் திறம் வியக்கத்தக்கது.

சித்தாந்தக் கருத்துக்கு வலுசேர்த்தல்:

மலங்கள் நீங்கி ஆன்மா இறைவனது பேரறிவு பெறுதலை, சீவன் சிவமாதல் என்பர். ஆன்மா சிவமான நிலையில் அது இறைவனுக்குச் சமமாக நின்று ஐந்தொழில் புரியும் என்பது சிலரது கருத்து.

ஆனால், சைவசித்தாந்தம் இதை ஏற்பதில்லை. ஆன்மா இறைவனுக்கு அடிமையாகவே நிற்கும் என்கிறது அது. இதனை மாணிக்கவாகரின் திருவாக்கு தெளிவுபடுத்துகிறது.

அதாவது ‘சிவமாக்கி எனையாண்ட’ என்னும் பாடலடியில் ‘சிவமாக்கி’ என்று மட்டும் கூறாது, அந்நிலையிலும் இறைவனுக்கு அடிமைப்பட்டு நிற்கும் என்பதை ‘எனையாண்ட’ என்று கூறுவதால் அறிக.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி: சூரியனைக் காண வேண்டுமானால் அவனது ஒளியைக் கொண்டுதான் அவனைக் காணமுடியும். அவனது ஒளியின்றி அவனைக் காண இயலாது.

நமது கண்ணும் காணும் ஒளியே அன்றிக் காட்டும் ஒளியன்று. காட்டும் ஒளியாகிய சூரியன் காட்டினால், காணும் ஒளியாகிய கண் அதைக் காணும். அதைப் போல் காட்டும் ஒளியாகிய சிவனருள் காட்டினால், காணும் ஒளியாகிய ஆன்மா காணும் தன்மை பெறும்.

இதைத்தான், “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” (சிவபுராணம், அடி.18) என்று மாணிக்கவாசகர் அநுபூதியுரையாகக் கூறுகின்றார்.

திருஞானசம்பந்தரும் இக்கருத்தை ஒருவகையாக நமக்கு உணர்த்துகின்றார். அதாவது, “நன்றுடையான்” (1:90:1) என்று தொடங்கும் பாடலில் ‘சென்றடையாத திருவுடையான்’ என்று சிவபெருமானின் அருள்திறத்தைப் பேசுகிறார்.

நாமே சென்று அடைய முடியாத திருவை உடையவன் பெருமான். அவனே நம்மீது கருணைகொண்டு அருளினாலன்றி நாமே அவனை அடைய முடியாது என்பதே அதன் பொருள்.

மாணிக்கவாசகரும், “நானேயோ தவம் செய்தேன்” (38:10) என்று தொடங்கும் பாடலின் மூன்றாம் அடியில், ‘தானே வந்து எனதுள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்’ என்னும் தொடரால் இக்கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ (89) என்னும் தாயுமானவர் பாடலையும் ‘காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே, காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே’ (6:98:3) என்னும் அப்பர் பாடலையும் இத்துடன் இணைத்துக் கண்டால் சிவனின் அருளின்றி யாரும் எதையும் செய்ய இயலாது என்பதை உறுதிபட உணரலாம்.

திருவாசகத்தின் பெருமைகளை இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். என்றாலும் அது ஓர் அனுபவ நூல் அன்றோ? அந்த அனுபவத்தை நாமும் பெறவேண்டுமானால் நூலுள் மூழ்க வேண்டும்.

அதற்கு வாதவூரரின் அருள் வேண்டும். அருளைப் பெற, “மாசகன்ற நீ திருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின் ஆசகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளிதியே” என்று வாதவூர் அடிகளை வடலூர் வள்ளலார் வேண்டுவது போல நாமும் வேண்டுவோம்.

வாழ்க மணிவாசகர் மலரடி! வாழ்க திருவாசகத் திருநெறி!

திருவாசகம் (எல்லோருக்குமான எளிய உரை):

பதிப்பும் உரையும் டாக்டர் ப. சரவணன்.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்,

#77, 53 வது தெரு, அசோக் நகர்,

சென்னை – 83. 

விலை ரூ. 900

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment