புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் பெற்றோர்களுக்கு!

குழந்தைகளுடன் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் அன்பான பெற்றோர்களே…!

சென்னை புத்தகக் கண்காட்சி என்பது மிகப்பெரிய அனுபவம். உங்கள் குழந்தைகளுக்கு அந்த அனுபவத்தைத் தர இருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.

புத்தகக் கண்காட்சியில் கீழ்கண்டவற்றை பின்பற்றினால் அந்த அனுபவம் குழந்தைகளுக்கு மேலும் செம்மையாக அமையும்.

1. எட்டு பாதைகள் கொண்ட பிரம்மாண்ட அரங்கம் என்பதால் போதிய நேரத்தை முதலில் ஒதுக்கிக் கொள்ளவும். நடக்க போதுமான தெம்பினை தேக்கி வைத்துக் கொள்ளுதல் அவசியம்.

எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் மைதானத்தை அடைந்துவிடவும். விடுமுறை எடுத்து அழைத்துச் செல்லும் பெற்றோர்களும் கூடுதல் ப்ரியங்கள்.

2. குழந்தைகளுக்கான அரங்கங்களில் அதிக நேரம் செலவிடுங்கள். அங்கே அவர்களை விரட்ட வேண்டாம். அவர்களுக்கு விருப்பமானதை அங்கே பார்க்கட்டும்.

முழுதாக எல்லா அரங்கங்களையும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்றும் அவசியமில்லை.

3. கண்காட்சியில் குழந்தைகள் எவ்வளவு ரூபாய்க்கு புத்தகம் வாங்கலாம் என முன்னரே தீர்மானித்துவிட்டு அவர்களிடம் சொல்லிவிடவும். அவர்களுடைய பட்ஜெட்டில் அவர்கள் புத்தகம் தேர்வு செய்யட்டும்

4. முதல் சுற்றிலேயே புத்தகங்களை வாங்கிவிட வேண்டாம். கைவசம் குழந்தைகளிடம் ஒரு நோட்டினை கொடுத்து அரங்க எண், புத்தக பெயர், விலை ஆகியவற்றை குறித்துக் கொள்ள ஐடியா கொடுக்கவும்.

முழு சுற்று முடித்ததும் வெளியே அமர்ந்து எது அவசியம் தேவை என்பதை அவர்களே தீர்மானித்து இறுதியான ஒரு பட்டியலைக் கொடுக்கச் சொல்லுங்கள். இரண்டாம் சுற்றில் புத்தகம் மட்டும் வாங்கிவிட்டு வரவும்.

5. குழந்தைகளே தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் 80% சதவிகிதம் எனில் நீங்கள் அவர்களுக்கான புத்தகங்களை 20% சதவிகிதம் தேர்வு செய்யலாம். சில அறிமுகங்களை நாமும் தரவேண்டி உள்ளது.

6. மாலை 5-6 மணிக்குள் புத்தகம் வாங்குவதை முடித்துக் கொள்ளவும். குழந்தைகளும் சோர்வாகி விடுவார்கள், கூட்டமும் அதிகமாகிவிடும்.

7. புத்தகம் வாங்கும்போது வழக்கமான தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள், பழமொழிகளை விட புதிய கதை புத்தகங்களுக்கு முன்னுரிமை தரப்பாருங்கள்.

8. உள்சிற்றரங்கத்திலும் வெளியே இருக்கும் அரங்கத்திலும் மாலை வேளைகளில் புத்தக வெளியீடு நடைபெறும்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு எவ்வாறு இருக்கும், உரைகள் எவ்வாறு இருக்கும் என்ற சுவையை அவர்களுக்கு கொடுக்க இந்த இரு இடங்களிலும் சில மணித்துளியேனும் இருக்கச் செய்யுங்கள்.

9. குழந்தையிடம் தொலைந்து போய்விட்டால் எங்கே வரவேண்டும், பெற்றவர்களின் அலைபேசி எண்களை ஒரு தாளில் எழுதி பாக்கெட்டிலும் வைக்கலாம்.

பபாசியின் அலுவலகம் முதல் அரங்கமாக இருக்கும் அதனை காட்டி தொலைந்துவிட்டால் அங்கே வரச்சொல்லிவிடவும்.

10. பட்ஜெட்டில் உள்ள காசில் வெளியே இருக்கும் ஸ்நாக்ஸ், பழரசம், உணவுப் பொருட்களுக்காக செலவழிக்க வேண்டாம். அது பெரியவர்கள் செலவு.

11. ஒவ்வொரு கடையாக கடக்கும்போது அங்கே என்னென்ன வகையான புத்தகம் அங்கே இருக்கும், நாவல் என்றால் என்ன, கட்டுரைத்தொகுப்பு என்றால் என்ன, கவிதைகள் என்றால் என்ன என்று மெல்ல கூறலாம்.

12. பிடித்தமான புத்தகங்களின் பெயர்களையும் நோட்டில் எழுதச் சொல்லுங்கள். இந்த கண்காட்சியில் இல்லை என்றாலும் பின்னர் அது உதவும்.

13. தமிழ்ப் புத்தகங்கள் நிறைய வாங்க ஊக்குவியுங்கள்.

ஒரு சம்பவத்தை அனுபவமாக மாற்றுவது பெற்றோர் கையில் உள்ளது. பேரனுபவமாக மாற்றுவோம்.

குழந்தைகளிடம் புத்தகங்கள் மீது விருப்பத்தையும் ஆசையையும் ஏற்படுத்த இந்த கண்காட்சியை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

எவ்வளவு புத்தகங்கள் இருக்கு வாசிக்க நம் நேரத்தை வீணடிக்காமல் திட்டமிட வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடத்தே உருவாக்குவோம்.

குறிப்பு: அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும்.

குழந்தைகளுக்கான அரங்குகள் சில

F-18 Books for Children
176 – நூல்வனம்
371,372 – விஞ்ஞான் பிரசார்
175 – National Book Trust
289,290 – பூவுலகின் நண்பர்கள்
392 – தும்பி
468 – இயல்வாகை
F-46 அமர் சித்ர கதா
512 – வாசகசாலை
F52- New Century Book House
353-353 – Eureka Books
528-529 – பழனியப்பா பிரதர்ஸ்

CHENNAI BOOK FAIR 2022

Nandanam YMCA Grounds, Chennai – 600035
Feb 16th – March 06th, 2022
Time: 11:00 am to 8:00 pm

– விழியன்

Comments (0)
Add Comment