நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி!

படைப்பு என்பது வானத்திலிருந்து போடப்பட்டதல்ல. படைப்பாளரும் வானிலிருந்து குதித்தவருமல்ல. படைப்பென்பது சிந்தனை, அறிவு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.

சி.முத்துகந்தன் அவர்களின் ‘இயல்பால் அறிவோம்’ இந்நூலின் தலைப்பே நூலின் பயன் என்னவென்பதை நிச்சயம் உணர்த்தும்.

பெரும் ஆய்வுக்குப் பின்னோ, கற்பனையாகவோ, ஆழ்ந்த சிந்தனையாளுமல்ல. நம் இருப்பில் இருந்து மாறுபடாமல் எந்தவித குழப்பமும், சஞ்சலமும், மனப்பிறழ்வுமில்லாது இயல்பாய் உரைக்கிறது.

உட்தலைப்புகள் ஏழாய் பிரிக்கப்பட்டு ஒரு தலைப்பின் கீழ் எட்டு பகுதிகள் வீதம் 56 பகுதிகளாய் உள்ளது.

வாசிப்பின் அனுபவமானது நூலுக்குள் நம்மை நுழைத்து பல பகுதிகள் நமக்கு மிகநெருக்கமாக நம்மையே காட்சிப்படுத்துவதாக அமைகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் நம்மை நாமே கண்டுணர முடியும். இவை எழுத்துகளாலான சொல் வடிவமல்ல நம்மையே காட்டும் கண்ணாடி பிம்பம். குழந்தையின் அப்பழுக்கற்ற உள்ளம் போல் படைப்பு அமைதல் வேண்டும்.

“படைப்பு ஒருபோதும் பொய்யாகாது”.

படைப்பு வேறு நாம் வேறல்ல. படைப்பின் கருவும் மையமும் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறது.

அதுவே நம்மை படைப்புக்குள் எளிதில் புகுத்துகிறது. நாம் படைப்பையும், படைப்பாளரையும் தொடர்ந்து கொண்டாடுகிறோம்.

இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இருப்பினும் இதுவரையிலும் குறிப்பிட்ட முக்கிய ஆளுமைகளையே எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கின்றோமே ஒழிய

அந்த முக்கிய ஆளுமையின் சமகாலத்தில் வாழ்ந்த வாழ்கின்ற படைப்புகளையும் படைப்பாளர்களையும் கொண்டாடும் வாய்ப்பினை தவறவிட்டோம் அல்லது தவிர்த்து விட்டோம்.

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியுமென்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

தொடர்ந்து ஒன்றன் மீது ஈடுபாடு செலுத்துவதா பயிற்சி? தொடர் பிரம்மிப்பை, புனிதத்தை, நம்மீது திணிக்கப்பட்ட முடிச்சுகளை அவிழ்த்து எரிவதுதான் பயிற்சியின் நோக்கம்.

நூலாசிரியர் சி.முத்துகந்தன் குறிப்பிட்டிருப்பதுபோல “மகுடிக்கு மயங்காத பார்வையாளர்களைப் போலவே நாமும் தெளிவாய் இருத்தலே நமக்கு நலம் பயக்கும்”.

நம்மை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி நாமே கேள்வியாக, நாமே பதிலாக, நாமே புதிராக நமக்கு நம்மையே அறிமுகப்படுத்தும் எழுத்துகளாகவும் நம்மை மீட்டெடுத்த எழுத்துகளாகவும் ‘இயல்பால் அறிவோம்’ உள்ளது.

கூடுவிட்டுக்கூடுப் பாயும் விந்தையைப் போல வாசகருக்குள் இந்நூலும் இந்நூலுக்குள் வாசகரும் பிரிக்க முடியாத கயிற்றினால் பிணைக்கப்பட்டுள்ளனர்.

இனி எவ்வித படைப்பையும் ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டியதில்லை.

“இவ்வனுபவம் உனக்கில்லையா” என்ற கேள்வி நம்மை நாமே நறுக்கென்று தைப்பதாக உள்ளது.

யாரேனும் நம்மை தூண்டினாலும் சீண்டினாலும் பொதுவாக வரும் உணர்ச்சியை விட பன்மடங்கு இவ்வெழுத்து தூண்டுகிறது. யார் தூண்டியது என்பது தேவையன்று. தூண்டுதலே தேவை.

எழுத்தானது படைப்பு நகரும் போக்கில் நம்மையும் நகர்த்திக் கடத்திச் செல்வதே சி.முத்துகந்தன் நிகழ்த்தும் மாயாஜாலம். அதாவது தன்னை உணர்ந்தால் நம் சுற்றத்தின் அகத்திலும் நம்மால் ஊடுறுவி செல்ல முடியும் என்கிறார்.

நமக்கிடையே வேற்றுமை இல்லை, பால் பேதம் இல்லை என்பது வெறும் வாய் வார்த்தையாகத்தான் உள்ளது என்பதையும் நம் ஆழ்மனதும், புத்தியும் என்னவாக உள்ளது என்பதை இயல்பாக வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

பல வளைவு நெளிவுகள், சுழிகள், கீற்றுகள் வண்ணங்களாலான பிரம்மாண்டமாய் அமையப்பெற்ற கோலங்களைப்போல் இல்லை. அவை வெறும் புள்ளிகளில்தான் நம்மிடையே பயணப்பட்டு வந்து சேர்கிறது என்பதை மெய்ப்பிக்கிறது.

இந்நூல் பிரம்மிப்பையும், வியப்பையும், கட்டப்பட்டவற்றையும், ஆற்றாமையையும், அறியாமையையும் சுக்குநூறாக நொறுக்கி நம்மை நாமே அறிந்து கொள்ள தெளிந்து கொள்ள மீண்டும் உயிர்பெற்று உயிர்த்தெழ நமக்கோர் கையேடாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இயல்பால் அறிவோம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 130

– க . சுபாஷினி
சென்னைக் கிறித்தவக் கல்லூரி

Comments (0)
Add Comment