– தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள்; 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள்; 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் அறிவிப்பு ஜனவரி 26-ல் வெளியானது.
மொத்தம் 74 ஆயிரத்து 383 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில், 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. போட்டியிடாமல் 14,324 பேர் மனுக்களை திரும்பப் பெற்றனர்.
போட்டியின்றி 218 பேர் வெற்றி பெற்றனர். இதில் நான்கு மாநகராட்சி கவுன்சிலர்கள், 18 நகராட்சி கவுன்சிலர்கள், 196 பேரூராட்சி கவுன்சிலர்கள் அடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் எட்டாவது வார்டில் போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் இறந்துவிட்டனர். அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 12,601 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இப்பதவிகளை கைப்பற்றுவதற்கு 57, 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுதும் 30 ஆயிரத்து 735 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 1.13 லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தும் பணியில், 1.35 லட்சம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மாலை 5:00 மணிக்கு பின் வாக்களிக்கலாம்.
பதவிகளை கைப்பற்றுவதில், தி.மு.க. – அ.தி.மு.க. இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தனித்து களம் கண்டுள்ள பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் மோதுகின்றன.
சில மையங்களில் வாக்கு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. சென்னை, வேலூர், மதுரை, கும்பகோணம், ராமேஸ்வரம், குழித்துறை பகுதிகளில் சில இயந்திரங்களில் லேசான பழுது கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு துவங்கியது.
தமிழகம் முழுவதும் அமைதியான தேர்தல் நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், பிரபலங்கள் பலரும் அந்தந்தப் பகுதிகளில் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
19.02.2022 11 : 50 A.M