பயணங்களால் நிறையும் வாழ்க்கை!

எஸ். ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ நூல் பற்றிய விமர்சனம்

● பயணங்கள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எல்லா காலங்களிலும் மனிதர்கள் பயணங்களை நடத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். பயணங்களால் மட்டும்தான் பரிணாம வளர்ச்சி முழுமையாக நடைபெற்று வருகிறது!

● நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளைத் திறந்து விடுவது பயணம்! அந்த பயணத்தை ஒரு எழுத்தாளர் மேற்கொண்டால் – அவருக்கும் பயன், அவரது அனுபவங்களால் மற்றவர்களுக்கும் பயன்!

அந்த வரிசையில் இந்த நூல், ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் பயணக் கட்டுரைகளால் நிறைந்திருக்கிறது!

● ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த இந்த கட்டுரைகளின் வழியே, இந்தியாவின் சிறப்புகளை அடையாளம் காண முடிகின்றது.

இந்தியாவை எந்த அளவிற்கு ஒருவர் பயணித்து, பார்த்து, அனுபவித்து, உணர்ந்தாரோ, அந்த அளவிற்கு இந்தியாவை வெகுவாக நேசிப்பார் என்பது, எனது அனுபவத்தால் கிடைத்த சொந்த கருத்து! இந்த 41 கட்டுரைகளும் ஆசிரியரின் பயண அனுபவங்களாலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதாகவும் உள்ளது!

● ‘சாரநாத்தில் ஒரு நாள்’ என்ற கட்டுரை, காசியிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலுள்ள புத்த விகாருக்கு நம்மை அழைத்து செல்கிறது. சாரநாத்திலுள்ள பௌத்த ஸ்தூபி, சுட்ட செங்கலால் கட்டப்பட்ட அந்த ஸ்தூபியை காண ஆசிரியர் செல்கிறார்.

● ஒரு புத்த பிக்குவுடன் உரையாடல் நடத்துகிறார்… “சாரநாத்துக்கு எதற்காக வந்தீர்கள்?” என பிக்கு கேட்க, “புத்தரை காண்பதற்காக” என பதிலளிக்கிறார்.
“புத்தரை பார்த்தாயா?”… என பிக்கு மீண்டும் கேட்க, “இல்லை.. இது ஆயிரம் வருடத்திற்கு முந்தியதில்லையா!” என ஆசிரியர் கூற,

அந்த உரையாடல்கள் தொடர்ந்து செல்ல… இன்னும் பல கேள்விகளும் பதில்களும் பறிமாறிக் கொள்ள புத்தரைத் தேடிச் சென்றவருக்கு புத்தியும் தெளிவாகி நிறைவாகி பயணம் முடிகிறது!

● ‘லோனாவாலாவில் பார்த்த மழை’ என்ற கட்டுரையில் மழையின் பல பரிமாணங்களை பட்டியிலிடுகிறார். மழையை பீம்சிங் ஜோஷியின் பாடல்களைப் போல, மெதுவாக துவங்கி ஒரு இடத்தில் மையம் கொண்டு, அங்கேயே சஞ்சாரம் செய்யத் துவங்கியது, என இசைக் கச்சேரியாக்குகிறார்!

● “மழை தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறதா? மழைக்கு எத்தனை விரல்கள் இருக்கின்றன? சில நேரம் மழை குழந்தையின் சிரிப்பை போலிருக்கிறது! சில நேரம் மிருகத்தின் மூர்க்க உறுமல் போலிருக்கிறது!”… என நயந்தும் வியந்தும் எழுதுகிறார்!

● சென்னையின் புனித தாமஸ் மலையை பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த மலைக்கு ‘பரங்கி மலை’ என்ற பெயரும் உண்டு.. இந்த மலைக்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் தொடர்பு உண்டென்பதை எத்தனை பேர் அறிவார்கள்? கண்ணில் வரைந்த கோடு – என்ற கட்டுரையில் இதற்கான விடை தரப்பட்டுள்ளது.

● உலகின் மிக உயர்ந்த சிகரம், மவுண்ட் எவரெஸ்ட் என்று கண்டுபிடிக்கப்பட்ட, இந்திய நில அளவை பணி, பரங்கிமலை மீதிருந்து, 1902 ம் ஆண்டு, கர்னல் வில்லியம் லாம்டன் தலைமையில் துவங்கப்பட்டது. ‘தி இண்டியன் ஆர்க்’ என்று அழைக்கப்படும் தியோடலைட் சர்வேக்கான ஆதாரப்புள்ளியாக இந்த மலை இருந்தது.

● இந்த பணி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற காலகட்டத்தில், லாம்டன் இறந்து போகவே, தாமஸ் எவரெஸ்ட், ‘சர்வேயராஃப் இண்டியாவாக’ பொறுப்பேற்று பணியை நிறைவு செய்தார்.

அவரது சர்வே குழுவினர் உலகின் உயரமான சிகரத்தை அளந்து, உலகிற்கு சொன்னதால் – அந்த சிகரத்திற்கு ‘மவுண்ட் எவரெஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அரிய செய்தியை சொன்ன ஆசிரியர் பாராட்டிற்குரியவர்!

● பயணம் நமக்கு நிறைய பாடங்களை தருவதுண்டு. பயணம் நமக்கு மனிதாபிமானத்தையும் சொல்லி தரும்! கஜூரகோ செல்வதற்காக டிசம்பர் மாத குளிரில், சத்னா ரயில் நிலையம் சென்றடைகிறார்.

மார்கழி மாத குளிருக்கே ‘மங்கி கேப்’ போட்டு கொண்டு குளிருது குளிருது என நடுங்கும் தமிழர்களுக்கு, வட இந்திய குளிரை தாங்குவது சிரமமாக இருக்கும். அந்த குளிரால் சுகவீனமடைகிறார்.

● யாருடைய துணையுமில்லாமல், குளிரால் நடுங்கிய ஆசிரியரை, பெரியவர் ஒருவர் மருத்துவரிடம் கூட்டி செல்கிறார்.

ஊசி போட வைத்து, தனது சிறிய வீட்டிற்கு கூட்டி சென்று, இரண்டு நாட்கள் தங்க வைத்து, அவரை குணப்படுத்தி அனுப்பி வைத்தாராம் அந்த அறிமுகமில்லாத அந்நிய இந்தியன்.

“உலகில் என்றும் தீராத அதிசயமாக இருப்பது இது போன்ற மனிதர்களும், அவர்களின் மனதும் மட்டும்தான்!” என மனதையும் கட்டுரையையும் ஒருசேர நிறைவு செய்கிறார்!

● இப்படி அவர் சென்ற பயணங்களையும், அதில் கண்ட அனுபவங்களையும் தனக்கே உரிய நயத்தோடு பதிவு செய்துள்ளார் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்!

● தேசாந்திரி: ஒரு ஊர்சுற்றி – பயணம் மூலம் தந்த வாக்குமூலம்!

தேசாந்திரி 
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் -256
விலை: ரூ.275/

பொ. நாகராஜன்.

19.02.2022  12 : 30 P.M

Comments (0)
Add Comment