பெரியாரின் இதழியலைப் பேசும் ஆய்வு நூல்!

பெரியாரின் இதழியலைப் பேசும் ‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? தந்தை பெரியாரின் இதழியல்’ என்ற  800 பக்கங்கள் கொண்ட சிறந்த ஓர் ஆய்வு நூலை எழுதியுள்ளார் முனைவர் இரா.சுப்பிரமணி. கோவை விடியல் பதிப்பகத்தின் வெளியீடு.

ஆய்வு நோக்கிலும் அதேசமயம் பொது வாசிப்புக்கு ஏற்ற வண்ணமும் நூலைத் தொகுத்துள்ள நூலாசிரியர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இந்தியாவில் நெருக்கடி நிலை, மெக்காலே உள்ளிட்ட ஆறு நூல்களையும் எழுதியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், அதற்கு முன்பாக ‘இனி’, ‘நந்தன்’ உள்ளிட்ட பல்வேறு அச்சு, காட்சி ஊடகங்களில் இதழாளராகவும் பணியாற்றியவர்.

திராவிட இயக்க சிந்தனைக்களத்தில் முனைந்து செயலாற்றி வருபவர்.

1925 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரையில் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் வெளிவந்த இதழியல் பேசுபொருள் சார்ந்த தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளும், தலையங்கங்களும், துணைத் தலையங்கங்களும், கட்டுரைகளும், செய்தி விளக்கங்களும் காலவரிசைப்படி நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன.

பெரியார் பார்வையில் இதழ்கள், ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள், பெரியார் போற்றிய தோழமை இதழ்கள், பெரியாரின் வழக்காடும் இதழியல்,

பெரியாரின் நூல் மதிப்புரைகள் என்னும் ஐந்து இயல்களாக 320 தலைப்புகளில் பெரியாரின் பேச்சும், எழுத்தும் ஒரே தொகுப்பாய் இடம் பெற்றுள்ளது.

பெரியாருக்கு முந்தைய சமூக, அரசியல், இதழியல் வரலாற்றை எடுத்துரைக்கும் தனிப்பகுதியும்,

பெரியாரின் இதழியல் குறித்த மதிப்பீட்டாய்வுரையும் நூலாசிரியர் பார்வையில் இரு தனி இயல்களாக எழுதப்பட்டுள்ளன.

தமிழ் இதழியலை வாழ்க்கைப் பாதையாக அமைத்துக்கொள்ள விரும்பும் புதிய தலைமுறையினரும், இதழியலில் பணியாற்றும் இளம் பத்திரிகையாளர்களும் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.

பா. மகிழ்மதி

14.02.2022  11 : 50 A.M

Comments (0)
Add Comment