தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக, மாநகராட்சியில் 5,974 வாக்குச்சாவடிகளும், 15 வாக்கு எண்ணும் மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில் அமைக்கப்பட்டு வரும், வாக்கு எண்ணும் மையத்தை, மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின்பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னை மணலி குடோனில் இருந்து, தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 22 வழங்கல் இடங்களில் அந்த இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி இரண்டாம் கட்ட குலுக்கல் முறையில், வார்டு வாரியாக ஒதுக்கப்படும்.
அதன்பின், மூன்றாம் கட்டமாக, ஓட்டுவாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 27 ஆயிரம் அலுவலர்களுக்கு10-ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சின்னம் அச்சிடும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வரும் -தேதி வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில், சின்னம் பொருத்தும் பணி, வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.
வாக்குச்சாவடிகளில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்த வாடகை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும், ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில், நேரலையில் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளை நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்குக்கான படிவங்கள், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும். நிரப்பப்பட்ட வாக்குச்சாவடி படிவங்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 10-ம் தேதி முதல் அனுப்பி வைக்க வேண்டும்.
மாநிலத் தேர்தல் ஆணைய வழிக்காட்டுதல்படி, திறந்தவெளிகள், உள் அரங்குகளில் பிரச்சாரம் மேற்கொள்ள, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கட்டாயம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்காக, காவல்துறையின் தடையில்லா சான்று பெற்று, விண்ணப்பிக்க வேண்டும்.
திறந்தவெளிகளில், 1,000 பேர் அல்லது இடத்திற்கு ஏற்ப 50 சதவீதம் என எது குறைவான அளவோ அந்த அளவிற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதேபோல் உள் அரங்கில், 500 பேர் அல்லது 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
திறந்தவெளி, உள் அரங்குகளில், காலை 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை பிரசாரத்திற்கு அனுமதிக்கப்படும். சென்னையில் 168 திறந்தவெளி இடங்களில் மட்டும் பிரசாரம் நடத்த காவல்துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.
எனவே, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். காலை 6:00 முதல் இரவு 10 :௦௦ மணி வரை வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளலாம். அனுமதி பெறாமல் பிரசாரம் மேற்கொண்டாலும், கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றாவிட்டாலும், சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
இதுவரை, தேர்தல் விதி மீறல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.தேர்தல் பறக்கும் படையினர் 1,26,26,000 ரூபாய் பரிசு பொருட்கள் மற்றும் ௧௬ லட்சத்து ௧௫ ஆயிரத்து, ௫௯௮ ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
அரசு சுவர்களில் இருந்த 12,510 போஸ்டர், பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேபோல், தனியார் இடங்களில் இருந்த 15,815 போஸ்டர்களும் அகற்றப்பட்டுள்ளன. போஸ்டர் ஒட்டுதல் தொடர்பாக, அனைத்து கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் மற்றும் கொரோனா விதிமுறைகள் மீறல் தொடர்பாக, பறக்கும் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வருங்காலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்” எனக் கூறினார்.
சென்னை மாநகராட்சி தேர்தலில், 3,546 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், 243 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன; 633 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இறுதிப்பட்டியலில், 2,670 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கானத் தேர்தல், 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை நடந்தது. இதில் 3,546 பேர் மனு தாக்கல் செய்தனர். பின் 5-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது.
அப்போது, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த, 243 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே, வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 3,303 மனுக்கள் போட்டியிட தகுதி வாய்ந்தவையாக ஏற்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் உள்ளிட்டோர், தங்கள் மனுக்களை, வாபஸ் பெற 7-ம் தேதி மாலை, 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில், 633 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
அதன்பின் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும், 730 சுயேட்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று இரவு வரை நடந்தது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், கட்சி வேட்பாளர்கள் ௧,௯௪௦ பேரும், சுயேச்சைகளாக 730 பேரும் என மொத்தம், 2,670 பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.