அடுத்த 10 நாட்களும் நமக்குப் போர்க்களம்!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

****

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் காணும் பா.ஜ.க.வைப் பற்றி மீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

நைனார் நாகேந்திரனின் சர்ச்சைப் பேச்சுக்குத் தாமதமாகப் பதில் அளிக்கும் விதமாக, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியிருப்பது பெரும் பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிக்கிறார். ”அடுத்த 10 நாட்கள் நமக்குப் போர்க்களம்’’ என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை செல்போனிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரத்தை முன்னெடுக்க வலியுறுத்தியவர்,

“தி.மு.க ஒரு போலியான அரசியலைச் செய்து வருகிறது. அந்தப் போலி பிம்ப அரசியல் கூடாது. உண்மையான அரசியல் நாம் முன்னெடுக்கும் அரசியல் தான்’’ என்று தி.மு.க.வை மையப்படுத்திய பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிற அண்ணாமலை தங்களைக் கூட்டணியிலிருந்து நாசூக்காக வெளியேற்றிய அதி.மு.க.வைப் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்திருக்கிறார்.

இந்தத் தேர்தல் அண்ணாமலையின் பதவிக்கு முன்னால் இருக்கிற சவால். இதில் கணிசமான வாக்குகளை வாங்கி பா.ஜ.க தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டால், தமிழக பா.ஜ.க தலைவர் பதவி நீடிப்பது குறித்த சர்ச்சைகள் துவங்கி விடும்.

அதை அர்த்தப் படுத்தும் விதத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலைப் போர்க்களம் என்றிருக்கிறார் அண்ணாமலை.

Comments (0)
Add Comment