தேர்தல் நிலவரம் – 1
உத்தரப்பிரதேசம் – இந்தியாவின் பெரிய பிராந்தியம். பிரதமர் மோடியின் வாரணாசி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலம்.
இங்கு 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 403 தொகுதிகள். நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி அப்னாதள், நிஷாத் ஆகிய சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
கடந்த முறை முலாயம் சிங் தலைமையில் தேர்தலை சந்தித்த சமாஜ்வாதி, இந்த முறை அவர் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.
அகிலேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது சித்தப்பா சிவபால் சிங், பிரகதிஷீல் சமாஜ்வாதி எனும் கட்சியை நடத்தி வந்தார்.
அவருக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.
ஜாட் சமூக மக்களிடம் செல்வாக்கு உள்ள ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் அகிலேஷுடன் தொகுதி உடன்பாடு வைத்துள்ளது.
இந்தக் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங்கின் மகன். சின்ன கட்சிகளை இணைத்துக் கொண்டு களம் காண்கிறது, மாயாவதியின் பகுஜன் சமாஜ். காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுகிறது.
சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிகள் தனி அணியை ஏற்படுத்தி கொஞ்ச இடங்களில் நிற்கிறார்கள்.
ஓவைசிசின் முஸ்லிம் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தனிக்கடை விரித்துள்ளன.
நிஜமான போட்டி என்னவோ பாஜகவுக்கும், சமாஜ்வாதிக்கும் தான்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ், தனது பழைய செல்வாக்கை இழந்து விட்டது.
இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மாயாவதி அறிவித்திருப்பது கட்சித் தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்காவுக்கு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
அவரும் மாதத்தில் பாதி நாள் உ.பி.யிலேயே தங்கி இருந்து செலவிட்டார். எந்தப் பலனும் இல்லை. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் சவலைக் குழந்தையாகவே உள்ளது.
பெரிய தலைவர்களும் இல்லை. தொண்டர்களும் கிடையாது.
கடந்தத் தேர்தலில் 7 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை அந்தத் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாகப் போராடுகிறது.
தேர்தல் தேதியை அறிவித்த சமயத்தில் பாஜகவுக்கு, பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது.
ஆனால், கடந்த மாதம் அடுத்தடுத்து மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் விலகி சமாஜ்வாதியில் இணைந்து விட்டனர்.
பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கோரக்பூர் தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் முதன் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்கிறார். சமாஜ்வாதியின் கோட்டை என்று கருதப்படும் கார்ஹல் தொகுதியில் களம் காண்கிறார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அமைச்சர் சத்யபால் சிங் பாகேல் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஒரு காலத்தில் சமாஜ்வாதியில் இருந்தவர்.
தலித் வகுப்பைச் சேர்ந்த பாகேல் தற்போது ஆக்ரா தொகுதி பாஜக எம்பியாக உள்ளார்.
பர்ஹால் தொகுதியில் 2012 ஆம் ஆண்டு பாஜக வென்றுள்ளது. ’’2022 ஆம் ஆண்டிலும் பாஜக வெல்லும்” என்கிறார் பாகேல்.
கடந்த முறை 312 இடங்களில் பாஜக ஜெயித்தது. இந்த முறை அந்த அளவு இடங்கள் கிடைக்காவிட்டாலும், மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
– பி.எம்.எம்.
08.02.2022 10 : 50 A.M