கலைஞரின் பன்முகத்தைக் காட்டும் நூல்!

‘கலைஞர் என்னும் மனிதர்’ – நூல் விமர்சனம்

★ கலைஞர்.
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை! பெரியாரின் தொண்டர்! அண்ணாவின் தம்பி! உடன்பிறப்புகளின் தலைவர்!
தனது திறமையால் பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா, இலக்கியம், அரசியல், ஆட்சிப்பணி இவை அத்தனையிலும் வெற்றியின் உச்சத்தை தொட்டவர்!

★ அறுபது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தோரும், ஆட்சியை இழந்தோரும் – இவரை தினந்தோறும் வாழ்த்தியும் வசைபாடியும் தங்கள் இருப்பை உணர்த்தி வந்தார்கள்! முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தை காட்டுகிற நூல் இது!

★ மணா.
எழுத்தாளராக ஊடகத்துறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குபவர். மதுரையை சேர்ந்தவர். எனது அன்பிற்குரிய நண்பர். கலைஞரை பலமுறை பேட்டி கண்டு எழுதியவர். கலைஞரைப் பற்றி இரண்டு ஆவணப் படங்களை எடுத்தவர்.

கலைஞரையும் அவரது குடும்பத்தாரையும் நன்கு அறிந்தவர் என்பதால், இவரது பேட்டிகளில் கலைஞர் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும். இந்த நூலை இவ்வளவு சிறப்பாக தொகுப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் – மணா!

★ இந்த நூல் – மணா கலைஞரை பல சமயங்களில் எடுத்த பேட்டிகளாலும், மற்றும் பலரின் பேட்டிகளாலும், பலரின் கட்டுரைகளாலும், கலைஞரின் பல வண்ண புகைப் படங்களாலும், அவரது குடும்பம், உறவினர்கள், உடன்பிறப்புகள், அரசியல் தலைவர்கள் புகைப்படங்களாலும், அழகாக வடிவமைக்கப்பட்டு, நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பரிசுப் படைப்பாக உள்ளது. மணாவின் முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை..
மணாவுக்கு சிறப்பான வாழ்த்துகள்!

இனி – நூலிலிருந்து சில அரிய தகவல்கள்:

★ கலைஞரின் கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில், மணா எடுத்த பேட்டி . கடவுள் மறுப்பு, மத நம்பிக்கை, நாத்திகம் போன்ற பல கேள்விகளுக்கு கலைஞர் தயங்காமல் பதிலளிக்கிறார்!

★ மணாவின் கேள்வி:
திமுகவின் துவக்க காலத்தில் மேடைகளிலும், எழுத்துகளிலும் வெளிப்பட்ட நாத்திகம், அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற தாரக மந்திரத்தின் கீழ் புதைந்து போய் விட்டதா?

★ கலைஞரின் பதில்:
ஒரு கல்லில் சிலை செய்தால், அந்த கல் புதைந்து போய் விட்டதாகவோ அல்லது உடைந்து போய்விட்டதாகவோ சொல்ல முடியுமா?.

பகுத்தறிவாளரின் பதில் இப்படித் தானே இருக்கும்!

★ 70 ஆண்டுகளுக்கு முன்பாக 1952 ம் ஆண்டு வெளியான திரை ஓவியம் – பராசக்தி. கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவானது. வி.சி.கணேசனை அறிமுகம் செய்து சிவாஜி கணேசனாக நிரூபித்த திரைப்படம். வசனங்களுக்காக வசூலை குவித்த படம். கலைஞரின் வசனமட்டுமின்றி அவரது பாடலும் கவனத்தை ஈர்த்தது.

★ கலைஞர் எழுதிய கா… கா.. பாடல் மிகவும் பிரபலமானது! அந்த பாடலிலேயே – கலைஞர் ஒரு மனித நேயர் என்பதை உணர முடியும்.
பாடல் வரிகளில் –
‘எச்சிலைத் தன்னிலே | எரியும் சோத்துக்கு | பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே | இளைத்தவன் வலுத்தவன் | இனச் சண்டை பணச் சண்டை | எத்தனையோ இந்த நாட்டிலே | என கடைநிலை மனிதரை எண்ணி எழுதியிருப்பார்!
கலைஞர் என்னும் மனிதரை இதில் காணமுடிகிறது!

★ பராசக்தி படத் தயாரிப்பாளர் ஏவி.எம். செட்டியார், ஏதோ ஒரு காரணத்திற்காக, பாவலர் பாலசுந்தரத்தின் பெயரை – மூலக் கதாசிரியர் என போட மறுத்துவிட்டாராம்! இதை அறிந்த கலைஞர், அவரோடு போராடி, பாலசுந்தரத்தின் பெயரை போடாவிட்டால் தன்னுடைய பெயரையும் போட வேண்டாம் என வாதாடி, கடைசியில், மூலக்கதை – பாவலர் பாலசுந்தரம் என போட வைத்தாராம் கலைஞர்!
கலைஞர் தன்னை ஒரு நியாயமான மனிதர் என உணர வைத்த தருணம்!

★ சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்காக நடிகர் சிவகுமார், கலைஞரை சிறப்பு பேட்டி எடுத்து வழங்கியதை முழுவதுமாக நூலில் காண முடிகிறது.. நிறைய படங்களும் நிறைய தகவல்களையும் கொண்டதாக உள்ளது.. கலைஞரின் இளமைப் பருவம், திரைப்பட அனுபவங்கள், பெரியார், அண்ணா பற்றிய கருத்துகள், கலைஞரின் பதில்களில் அறிய முடிகிறது.

★ சிவகுமாரின் கேள்வி :
பதவி, பணம், புகழ் மூன்றையும் என்றும் குறையாத வண்ணம் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமா?

★ கலைஞரின் பதில்:
அது முடியாது! நிச்சயமாக முடியாது! அதற்கு நாம் அடிமையாகாமல் இருக்கலாம்!

★ சிவகுமாரின் கேள்வி :
மனிதனுக்கு நிலையான புகழ் தரக்கூடியது எது?

★ கலைஞரின் பதில் :
மனிதனுக்கு நிலையான புகழ் தரக்கூடியது அவனது தியாகச் செயல்கள் தான்!

★ குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக (26.07.2001) கலைஞரை மணா எடுத்த பிரபலமான பேட்டியிலிருந்து:

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கலைஞரை நள்ளிரவில் (30.06.2001) வலுக்கட்டாயமாக கைது செய்து, சிறையிலடைத்து, பல போராட்டங்களுக்குப் பின்னே விடுதலையாகி வந்த பின்பு எடுத்த பேட்டி!

★ ஜெயலலிதா தன் மீது கொண்ட அளவில்லா காட்டத்தை விவரித்த கலைஞர், “நான் திமுக ஆட்சியில், அவசரப்பட்டு அந்தம்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

ஒரு கட்டத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியே, வழக்கின் தன்மை குறித்து கேள்வி எழுப்பிய பிறகே, ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டது. இன்னும் சொன்னால், ஜெயலலிதா அடைக்கப்படும் போது அவரது வக்கீல், முதல் வகுப்பு கேட்க மறந்து விட்டார்! மாஜிஸ்ட்ரேட்டும் கவனிக்கவில்லை!

★ அதனால் ஜெயலலிதாவுக்கு ஜெயிலில், கட்டில், ஃபேன் இல்லாத அறை கொடுக்கப்பட்டது. உடனே, நான் ஜெயிலருக்கு போன் பண்ணி, அவருடன் பேசி விசாரித்து, அவரது அறைக்கு ஒரு கட்டில், டேபிள் ஃபேன் கொடுக்க சொன்னேன்! திரும்பவும் ஜெயிலருக்கு போன் செய்து, அவைகள் கொடுக்கப்பட்டு விட்டதா? என்று அறிந்த பிறகு தான், நான் தூங்கப் போனேன்! என்னுடைய வழி இப்படி! அவர்களுடைய வழி அப்படி!”… என விவரித்தார்.

எதிரியையும் மனிதராக கருதிய கலைஞரின் மனித நேயத்திற்கு இது சாட்சி!

★ சுப.வீ எழுதியுள்ள, ‘கலைஞரிடம் கற்றுக் கொண்டேன்’ என்ற கட்டுரையில் கண்ட சிறப்பு தகவல் இது. டெசோ சார்பில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கலைஞரின் சாதுர்யமான பதிலை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுப.வீ இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“அப்போது ஒரு பெண் ஊடகவியலாளர், ‘விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கிறாரா?’ என கேட்டார்.

அந்த கேள்விக்கான பதிலை எல்லோரும் கலைஞரிடமிருந்து ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்! தலைவரின் பதில் எதுவோ என நானும் காத்திருந்தேன். கலைஞர் பத்திரிக்கை நண்பர்களைப் பார்த்து இரண்டே சொற்களில், ‘போராளிகள் சாவதில்லை’ எனக் கூறினார் “… என்று ஆச்சர்யத்தோடு முடிக்கிறார் சுப.வீ.

அது பலரின் கேள்விகளுக்கு –
விடை சொன்னது!
அது பலரின் சந்தேகங்களுக்கு –
விடை கொடுத்தது!!

★ தொலைக்காட்சிக்காக ராமானுஜரின் வாழ்க்கை தொடரை, பழுத்த நாத்திகரான கலைஞர் எழுதுவது பெரிய பரப்பரப்பாக பேசப்பட்டது. அந்த வேளையில் ஊடகவியலாளர் பிரியன, கலைஞரை பேட்டி எடுத்தார்.

★ பிரியனின் கேள்வி:
நாத்திக பிரச்சாரத்திற்காக நீங்கள் பல திரைப்படங்களில் கதை, வசனம் எழுதி இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் எழுதப்போகும் இராமனுஜர் தொடரால் பாதிக்கப்பட்டு யாரேனும், ஒரு நாத்திகர் ஆத்திகராக மாறி விட்டால்?

★ கலைஞரின் பதில்:
என்னுடைய கதை வசனங்களை, என்னுடைய பேச்சை, எனது கருத்துக்களை கேட்டு, ஆத்திகர்கள் நாத்திகர்களாக வரலாறு தான் உண்டு! அதைப்போலவே இந்த தொடரைப் பார்க்கும் ஆத்திகர்கள், நாத்திகர்களாக வாய்ப்பு உண்டே தவிர, நாத்திகர்கள் யாரும் ஆத்திகர்களாக மாட்டார்கள்!

★ பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியிலும், அண்ணாவின் காஞ்சி கல்லூரியிலும் பயின்ற மாணவர் – சுயமரியாதை, பகுத்தறிவு கொண்ட மனிதனாகத்தான் இருப்பாரென்பதற்கு – கலைஞர் என்றென்றும் ஒரு முன்னுதாரணம்!

★ இந்த நூலைப் படித்து முடிக்கும் போது, நம்மை இவ்வாறு நினைத்துப் பார்க்க செய்கிறது –

கலைஞர் என்னும் மனிதர்
நம்மோடு வாழ்ந்தார்!
நம்மோடு வாழ்கிறார்!

கலைஞர் என்னும் மனிதர்
ஆசிரியர் – மணா
பரிதி பதிப்பகம்
பக்கங்கள் 352
விலை ரூ 500/

-பொ.நாகராஜன்

07.02.2022  12 : 30 P.M

Comments (0)
Add Comment