அனுமதியில்லாமல் புத்தகங்களைப் பதிப்பிப்பதும், மின்னூலாக்குவதும் என்ன அறம்?

“எழுத்துக்களை ஓரளவுக்காவது போற்றுகிறவர்கள் அதை எழுதுகிற எழுத்தாளனுக்கு என்ன மதிப்புக் கொடுக்கிறார்கள்? குறைந்தபட்சம் அதற்கான ஊதியத்தையாவது ஒழுங்காகக் கொடுக்கிறார்களா?”

இந்தக் கேள்விக்கே அதிக வயதாகிவிட்டது.

அந்த அளவுக்கு பாரதி காலத்திலிருந்து இந்தக் கேள்வியை உயிர்ப்போடு வைத்திருக்கிறோம்.

எழுத்தாளர்களில் எழுத்தை நம்பி வாழ்ந்தவர்களில் சிலரே பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறார்கள். திரைத்துறைக்கு நகர்ந்தவர்களும் தப்பித்து உரிய தொகையைப் பெற்றிருக்கிறார்கள்.

எழுதுகிறவனுக்கு முறையான ராயல்டி தொகையைத் தரும் பதிப்பகங்களின் எண்ணிக்கையும் தமிழகச் சூழலில் குறைவு.

எழுத்தாளனிடம் ராயல்டி தொடர்பான முறையான ஒப்பந்தத்தைப் போடாமல், எழுத்தாளர் போய் ஏதாவது காரணத்தைச் சொல்லிக் கெஞ்சாத குறையாகக் கேட்டால் ஏதாவது தருகிற அளவுக்குத் தான் கீழிறங்கிக் கிடக்கிறது இங்கு எழுத்தாளனின் வாழ்க்கை.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எழுத்துலகில் இயங்கிவருகிற நான் இதுவரை எழுதியிருப்பது சுமார் நாற்பது புத்தகங்கள். ஒன்றைத் தவிர எல்லாமே ‘நான்-ஃபிக்சன்’ வகையைச் சார்ந்தவை.

இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்தும், முறையான ஒப்பந்தம் போடப்பட்டு, வெளிவந்து, ராயல்டியையும் கொடுத்த பதிப்பகங்கள் குறைவு. புத்தகங்கள் விற்றாலும், ராயல்டி தராமல் பெருந்தன்மை காட்டியவர்கள் இருக்கிறார்கள். எழுதியவனைக் கேவலமாக அவமானப்படுத்திய தருணங்கள் நடந்திருக்கின்றன.

அண்மையில் என்னுடைய பிரபலமான நூலை என்னுடைய அனுமதியைப் பெறாமலேயே, மின்னூலில் ஏற்றியிருக்கிறது ஒரு நிறுவனம்.

நான்கு மாதங்களுக்கு மேல் உழைத்து உருவாக்கிய நூலை உருவாக்கியவனிடம் எந்தத் தகவலைக் கூடத் தெரிவிக்காமல், அந்த நூலை மின்னூலாக்கிப் பொதுவெளியில் வெளியிட முடிகிறது என்றால் இது மூளைத் திருட்டு இல்லையா?

யாரோ குழந்தை பெற்றிருக்க, அதைக் கூசாமல் தூக்கிச் செல்கிறவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

கலகக் குரலை எழுப்பிய ஒரு கலைஞனைப் பற்றிய நூல் தொடர்பாகவே கலகக்குரலை எழுப்ப வேண்டியிருக்கிறது.

சொந்த உழைப்பில் எழுதியவற்றை ஒருவர் நூலாக்கட்டும். மின்னூலாக்கட்டும், அடுத்தவர்களுடைய உழைப்பைத் திருடி அல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தன்னுடைய புத்தகத்தை ஒருவர் பதிப்பித்து ராயல்டி தராத நிலையில், தபால் கார்டில் அந்த முதிய எழுத்தாளர் கொதிப்போடு இப்படி எழுதியிருந்தார்.

“என்னுடைய எழுத்தை இப்படியெல்லாம் விற்று, நீ எல்லாம் பிழைப்பு நடத்த வேண்டுமா?”

அதே குரலை எழுத்தாளனிடமிருந்து வரவழைக்கிற விதத்தில் தான் இருக்கிறது தற்போதைய யதார்த்தம். புத்தகங்களின் விற்பனை கூடியிருப்பதாகப் புள்ளிவிபரம் சொல்லப்படுகிற நிகழ்காலத்திலும் இது தான் இங்கு இயல்பாக நடக்கிறது.

இதிலும் மனம் உவந்து எழுதியவர்களுக்கு அவர்கள் மன்றாடியோ,கெஞ்சியோ கேட்பாமல் பொறுப்பாகத் தருகிற சில பதிப்பகங்களும் இங்கு இருக்கின்றன. இது பொதுத் தன்மையாக மாற வேண்டும் என்பதே எழுத்தாளர்களின் விருப்பம்.

என்னுடைய புத்தகங்களில் சிலவற்றை மட்டும் சில பதிப்பகங்களுக்கு முறையான ஒப்பந்தத்தின் பேரில் கொடுத்திருக்கிறேன்.

மற்ற நூல்களை வெளியிட்டவர்கள் இனிமேல் ஒப்பந்தம் இல்லாமல் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மீறி, நூலாகவும், மின்னூலாகவும் வெளியிடுகிறவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அறம் பற்றியும், வாசிப்பின் அவசியம் குறித்தும் பொதுவெளியில் வலியுறுத்துபவர்களுக்கு முதலில், எழுதுகிறவர்களின் உரிமை பற்றியும் உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்கட்டும்!

– மீள் பதிவு

Comments (0)
Add Comment