நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 158 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவும் நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு ஜனவரி 26-ம் தேதியுடன் முடிகிறது. இதனால் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 24-ம் தேதி நடக்கவுள்ளது.
அப்போது எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கின் முடிவை அறிந்து தேர்தல் அறிவிப்பை வெளியிட ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எனவே இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.