நினைவில் துரு ஏறிய அந்த நாள்!

பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்:

“தாயில்லாமல் நானில்லை”

“அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை”

“அம்மா என்றால் அன்பு”

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே”

– இப்படி அம்மாவை நினைவூட்டும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போது, கேட்பவர்களின் மனதில் தங்களுடைய அம்மாவைப் பற்றிய நினைவுகள் இழையோடும். தாயின் பரிவான முகமும், இதமான சொற்களும் நினைவில் அலையடிக்கலாம்.

பரிதி பதிப்பகம் வெளியிட இருக்கிற என்னுடைய ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ என்ற நூலுக்காகப் பல பிரபலமானவர்களுக்காக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகளைத் தொகுத்த போது, என்னுடைய அம்மாவைப் பற்றிய பதிவையும் அதில் நிறைவாக இணைத்தேன்.

பெரு மழை நாளில் நிகழ்ந்த அம்மாவின் மரணத்தின் தாக்கத்தில் எழுதிய கட்டுரையை எழுதியபோது, கொந்தளித்து அடங்கியது மனம்.

பிரியத்தை விடக் கனமானது வேறென்ன இருக்கிறது?

இனி கட்டுரையை வாசியுங்கள்.

***

“உங்கம்மா இறந்துட்டாங்க…”

-நெருப்பை அள்ளி மனசில் கொட்டிய மாதிரி இருந்தது கேட்டபோது.

தமிழகம் முழுவதும் பெரு மழை பெய்து கொண்டிருந்த நாள் அது.

சென்னையில்  பிரபல ஊடகத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

காலை நேரத்தில் நானும், போட்டோ கிராபருமாக ஒரு பேட்டிக்காகச் சென்று விட்டு பதினொரு மணியளில் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது சிறு மின்னலைப் போலத் தாக்கியது அம்மாவின் மரணச் செய்தி.

கேட்ட கணத்தில் சட்டென்று கண்கள் ததும்பின.

மனசில் இளம் நடுக்கத்தை உணர்ந்தேன்.

”நீங்க வந்ததும் உங்களை ஜி.எம். வரச்சொன்னார்… போங்க”

பொது மேலாளரின் அறைக்குக் கனத்த மனதோடு போனேன்.

“நியூஸ் சொல்லியிருப்பாங்க.. மதுரையிலிருந்து உங்க தம்பி போன் பண்ணிச் சொல்லியிருக்கார்.. இன்னைக்கு இரவுக்குள் ‘பாடியை’ எடுக்கிறதாச் சொல்லிச் சீக்கிரம் உங்களை வரச் சொல்லியிருக்காங்க..” என்று சொல்லிக் கொண்டு போனவர்,

“உங்களுக்கு ஒரு நாள் லீவு கொடுத்திருக்கோம்.. போய்ட்டு உடனே வந்துருங்க” – நிதானமாக ஒரு இயந்திரம் மாதிரிச் சொன்னார் அந்த மேலாளர்.

செரித்துக் கொள்ள முடியவில்லை.

“சார்… நான் சென்னையிலிருத்து மதுரைக்குப் போய்ட்டு வரணும்… மழை நேரமா வேறே இருக்கு.. ஒரு நாள் லீவு தந்தா எப்படிப் போய்ட்டு வர முடியும்?”

“அதெல்லாம் முடியாது.. ஒரு நாள் தான்.. போய்ட்டுத் திரும்பிருங்க”

சொல்லி முடிந்ததும், அடுத்து அவர் நிதானமாகச் சொன்னது தான் பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

”சரி… கிளம்பறதுக்குள்ளே… இந்த மேகஸினோட ஒரு ஃபாரம் பார்த்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுறீங்களா?”

கேட்டதும் அடக்க முடியவில்லை.

”நீங்களும் மனுஷன் தானே.. உங்க வீட்டிலே இப்படி நடந்தா இப்படித்தான் நடந்துப்பீங்களா? இதைச் சொல்றதுக்குக் கேவலமா இல்லையா? ஒரு நாள் லீவு கொடுத்துட்டு, போறதுக்குள்ளே ஒரு ஃபாரத்தை முடிச்சுக் கொடுத்துட்டுப் போகச் சொல்லி எப்படிச் சொல்றீங்க?”

வெடித்தபோது இயல்பாக அவர் சொன்னார்,

“நானா இதைச் சொல்லலை சார்… சரி.. கிளம்பிப் போய்ட்டு நாளைக்கு வந்து சேருங்க.. வேற யாரு கிட்டேயும் நீங்க பேச வேண்டியதில்லை”

தொலைபேசியில் மதுரையில் இருந்த தம்பியைத் தொடர்பு கொண்டேன்.

“அம்மா காலை நேரத்தில் சட்டென்று இறந்து போயிருப்பதாகவும், சென்னையிலிருந்து நான் வரும் வரைக்கும் காத்திருப்போம். வந்ததும் எடுத்து விடுவோம்” என்று பதற்றத்துடன் சொல்லிவிட்டுச் சீக்கிரம் வரச் சொன்னான்.

செல்போன் அவ்வளவு புழக்கத்தில் வரவில்லை அப்போது.

வீட்டில் இருந்த தொலைபேசியில் அழைத்து மனைவியைக் குழந்தையுடன் தயாராக இருக்கச் சொன்னேன்.

கார் கிடைக்காத நிலையில், மதியம் மதுரைக்குச் செல்லும் ரயிலில் போக ஆயத்தமானேன்.

நண்பர் சின்னக்குத்தூசியிடம் மட்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவலைச் சொன்னேன்.

குரல் தடுமாறிய படி ஆறுதல் சொன்னவர், தெரிந்த பத்திரிகை ஆசிரியர் பெயரைச் சொல்லி “அவர் மூலமா காரை ஏற்பாடு செஞ்சு தரட்டுமா?” – கேட்டார்.

மறுத்துவிட்டு வீட்டுக்குப் போய் மனைவி, குழந்தையுடன் மதியம் மதுரைக்கு ரயிலில் ஏறினேன். மனதில் மிகுந்த இறுக்கம் கூடியிருந்தது.

கிருஷ்ணம்மாள்

அம்மாவின் நினைவுகள் அலையடித்துக் கலங்கடித்தன.

இலங்கையில் கொழும்புவில் பிறந்து, ‘கிருஷ்ணம்மாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு, நான்கு வயதில் தமிழகத்திற்கு வந்த குடும்பம் அம்மாவுடையது. வியாபாரியான அப்பாவைத் திருமணம் செய்து ஏழு குழந்தைகள்.

ஐந்தாவதாக நான்.

‘அஞ்சு பஞ்சாய்ப் பறக்கும்’ – அடிக்கடி சொல்வார் அம்மா.

அந்தச் சொல்லின் கனத்தைப் பின்னாட்களில் உணர்ந்திருக்கிறேன்.

அம்மா என்றதும் அவருடைய குழந்தைத் தனமான முகம் தான் மனசில் பதிந்திருந்தது. அபூர்வமான வெகுளித்தனம் நிரம்பிய மனம் கொண்ட அம்மா காட்டுகிற பிரியம் பேச்சில்  எப்போதும் சிக்கனமாகத் தான் வெளிப்படும். தொடுதல் மூலமே அம்மாவின் குளிர்ந்த அன்பு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

சிறு பிராயத்திலிருந்து எப்படி இத்தனை குழந்தைகளை இவ்வளவு பொறுமையுடன் அன்பாக வளர்த்தார்?

ஆச்சர்யமாக இருக்கும்.

நிலப்பிரபுத்துவ மனதின் சாயல் கொண்ட அப்பாவின் கடுமைக்கு நேர் எதிராக அவ்வளவு மென்மையான மனது அம்மாவுக்கு. பதினெட்டு வயசில் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ மொழிபெயர்ப்பு நாவலைப் படித்த அனுபவம் அம்மாவிடம் மேலும் நெருக்கமாக்கியிருந்தது.

அப்பாவின் சுடுசொல் தாங்காமல் சில சமயங்களில் தரையில் அமர்ந்து முழங்காலில் தலைபுதைத்து மெதுவாக அவர் விசும்பும் போது, சுற்றிலும் குழந்தைகள் நாங்கள் அமர்ந்து அம்மாவின் கைகளைக் கையறு நிலையில் பற்றிக் கொண்டிருப்போம்.

“உனக்கு இவன் நான் செல்ல மகன்” – மூத்த அக்கா அம்மாவிடம் பல சமயங்களில் என்னைப் பற்றிச் செல்லமாகக் கோபித்துக் கொள்ளும் போது, கூச்சமாக இருக்கும்.

மதுரைக்கு நான் சென்று விட்டு சென்னைக்குக் கிளம்பும்போது, மெல்லிய குரலில் எப்போதும் அவர் சொல்கிற “உடம்பைப் பத்திரமாப் பார்த்துக்கப்பா” வார்த்தையில் அன்பின் வாசனையடிக்கும். அவர் சமைத்துப் பரிமாறும்போதும் அன்பு அதில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

“அன்பை விட உயர்ந்தது எதுவும் இல்லை” என்பதை வாழும் வரை உணர்த்திக் கொண்டே இருந்தார் அம்மா. அன்பின் சிறகுகளால் எங்களை மூடியிருந்தார் அவர், வெளித்தெரியாத இன்னொரு கருவறை போல.

அம்மா, நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ சொல்லால் அல்ல, வாழ்ந்து மென்மையாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

அவரைக் கடைசியாகப் பார்த்த நினைவு வந்து போனது.

மதுரை வந்துவிட்டது.

அங்கும் மழை சிறு சாரலாகத் தூறிக் கொண்டிருந்தது.

ஆட்டோ பிடித்து நேரே வீடு. நெருங்கியதும் அழுகைகள் மேலும் கூடின. அக்கா என்னைப் பார்த்ததும் கட்டிக் கொண்டு பெருங்குரல் எடுத்து அழுதார்.

மணா

நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். சாந்தமும், அமைதியும் அந்த முகத்தை விட்டு இன்னும் அகலவில்லை. மெல்லிய மஞ்சள் முகத்தில் பரவியிருந்தது. மரணத்தில் விளிம்பில் அவர் என்ன நினைத்திருப்பார்?

அழக்கூடத் திராணியற்றுப் போயிருந்தேன்.

அம்மாவின் கால்களை நடுக்கத்துடன் கைகளால் பற்றிக் கொண்டபோது, பச்சை நரப்போடிய கால்களின் கீழ் பாதங்களில் பித்த வெடிப்புகள் தெரிந்தன. எங்களுக்காக எவ்வளவு உழைத்திருப்பார் அம்மா?

அவருடைய காலடியில் அமர்ந்திருந்த அந்தக் கணத்தில் அம்மாவின் நிறைவான அன்புக்கு முன்னால், என்னுடைய எழுத்து, அதன் மூலமாகக் கிடைத்த பிரபலம் எல்லாமே சிறு தூசியைப் போலப் பட்டது.

சுற்றியுள்ள மனங்களில் அன்பை இப்படி நிரப்பி வாழ முடியுமா?

“சரி.. சரி.. நேரமாயிருச்சு.. தூக்கணும்..” – மயானச் சடங்குகளுக்காகாக் காத்திருந்தவர்கள் அனத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அம்மாவைக் கடைசியாகக் குளிப்பாட்டினார்கள். கொஞ்ச நேரத்தில் தத்தனேரி சுடுகாட்டிற்கு அம்மாவின் சடலம் பயணப்பட்டபோது, குமைந்த மனதோடு பின்னால் போனேன்.

“லேட்டாயிருச்சுங்க.. வாங்க.. சீக்கிரம் காரியதை முடிங்க” – மயானத்திற்கு போனதும் சொன்னார்கள் அங்கிருந்த ஊழியர்கள்.

அடக்கத்திற்கு முன்னால் தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அம்மாவின் வாயில் வாக்கரிசி போடச் சொன்னார்கள். மஞ்சளான அரிசியைப் போட்டபோது, தெரிந்த அம்மாவின் முகம் நினைவில் இப்போதும் அடர்த்தியான மச்சத்தைப் போல ஓட்டிக் கொண்டிருக்கிறது.

“ஏம்ப்பா.. மெட்ராசிலிருந்து சாவுக்கு வந்துட்டு இப்படி ரெண்டு மணி நேரத்திலே கிளம்பிப் போறீயே.. நாளைக்குப் பால் ஊத்தக்கூட இருக்க மாட்டீயா?” – உறவினர்கள் சத்தம் போட்ட நிலையில், மனைவி, குழந்தையை விட்டுவிட்டு, பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ பிடித்துப் போய், சென்னைப் பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்ததும் மனசு திமிறியது. அம்மா எனக்குள் உருவாக்கிவிட்டுப் போன வெற்றிடம் கனத்தது.

வெளியே மழை வலுக்க ஆரம்பித்திருந்தது.

அம்மாவின் சாயலை உடம்பிலும், வெகுளியான அவருடைய இயல்பை மனதிலும் ஏந்தியிருக்கிற என்னால் அவருடைய மரண நாளில் கூட முழுமையாக இருக்க முடியாத கொடுமையை நினைத்தபோது, முதல் முறையாகப் பத்திரிகைத் தொழிலைத் தேர்ந்தெடுத்தற்காக நொந்து போனேன்.

இப்படியொரு கணத்திற்காகவா இயந்திரம் மாதிரி ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிறோம்?  “என்ன ஒரு பிழைப்பு வாழ்கிறோம்?” என்கிற கேள்விகள் உள்ளுக்குள் கடித்தபடி ஊடுருவும் பூரானைப் போல வலியோடு ஓடின.

மனதைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

”அம்மா.. என்னில் நிறைந்திருக்கிற உங்களுக்கு நான் எப்படி அஞ்சலி செலுத்த முடியும், உங்களைப் பிரதி எடுத்து வாழ்வதைத் தவிர?”

பேருந்து நகர ஆரம்பித்து விட்டது.

என்னுள் எங்கோ ஊற்றுக்கண் உடைந்து விட்டிருந்தது.

ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்த எனக்குள் நிறைந்து அமர்ந்திருந்தார் அம்மா.

கண்கள் தானாக இளம்சூட்டோடு பார்வை மறைத்து நீர்மயமாக நிரம்பிக் கொண்டிருந்தன.

தனித்து மௌனமாக மெதுவாக நான் அழுவதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சக பயணிகள்.

இப்போது நினைத்தாலும், நினைவில் துரு ஏறியதைப் போலக் கனத்திருக்கிறது அந்த ஒரு நாள்.

*

Comments (0)
Add Comment