சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால்!

சட்டைக்காரி – நூல் விமர்சனம்

வடசென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘நீலம் பதிப்பகம்’ சார்பில் கரன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘சட்டைக்காரி’ என்ற நாவலுக்கு கலை விமர்சகர் இந்திரன் முன்னுரை எழுதியுள்ளார்.

அது சமகால தமிழ்ப் புனைவுலகின் சாத்தியங்களை அலசிப் பார்க்கும் சிறு திறனாய்வாக அமைந்திருக்கிறது.

தாய் வாசகர்களுக்காக அந்த முன்னுரை…

கரன் கார்க்கியைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஒரு கால்பந்தாட்ட வீரர் போல எனக்குத் தோன்றுவது வழக்கம். எழுதுகிற தீவிர மனநிலையில் எப்போதும் நரம்புகள் முறுக்கேற வலம் வரும் அவரிடம் அப்படி ஒரு சுறுசுறுப்பு உண்டு.

“தான் எழுத நினைப்பது கதைகளை அல்ல. அதையும் தாண்டிய வேறொன்றை” என்று அவர் அடிக்கடி சொல்லுவது போலவே இதுவரை அறுபடும் விலங்கு, கறுப்பு விதைகள், கறுப்பர் நகரம், வருகிறார்கள், ஒற்றைப் பல், மரப்பாலம் என ஆறு நாவல்களை வெளியிட்டிருக்கும் அவர், தனது ஏழாவதாக ‘சட்டைக்காரி’ எனும் இந்த நாவலை எழுதி இருக்கிறார்.

இந்நாவலில் சென்னை நகரத்தின் ஐம்பதுகளின் பி.என்.சி மில்லிலிருந்து தொடங்கி பேசின் பிரிட்ஜ் வரை இருக்கும் நிலப் பரப்புக்குள் நிகழும் ஒரு அபூர்வமான கதைக்களம்.

ஆங்கிலோ – இந்தியர்களின் பண்பாட்டு அடையாளச் சிக்கல்களையும், அந்நியமாதலையும், வறுமையையும், ஒழுக்கத் திரிபுகளையும், நாவலின் நகர்வில் ஒரு சிற்பம் போலச் செதுக்கிக் காட்டுகிறார் கரன் கார்க்கி.

ஆங்கிலோ – இந்தியர்கள் பற்றி தமிழ் இலக்கியப் புனைகதைப் பரப்பில் விட்டல்ராவுக்குப் பிறகு யாருமே எழுதவில்லை என்கிற மனக்குறையில் இருந்த எனக்கு ‘சட்டைக்காரி’ பெரும் ஆறுதலாக இருக்கிறது.

ஆங்கிலோ – இந்தியப் பெண் ஸ்லெட்டாவை நாவலில் முதல்முதல் கரன் கார்க்கி அறிமுகப்படுத்துவது இப்படித்தான்,

“ரோமானிய மூக்குக்காரியும், கண்ணுலகூட பசுமை படர்ந்து கல்லறைகளில் இருக்கும் பளிங்கு தேவதைகளின் சிற்பமுகச் சாயலும் கொண்டவள்”.

அவளை ஒரு இடுகாட்டுக் கல்லறையில் இருக்கும் பளிங்கு தேவதையின் சிற்ப முகச் சாயலோடு ஒப்பீட்டுப் பேசி பேரழகியான ஆங்கிலோ இந்தியப் பெண் ஒருத்தியின்மீது படர்ந்திருக்கும் சோக ரசாயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறார் கரன் கார்க்கி.

நாவலின் துரித நகர்வில் ஜெயமாமா, கருணா, மூசா ஆகிய மூன்று கால்பந்தாட்டக் காரர்களை அறிமுகப்படுத்துகிறார். மூசா ஒரு தலித்திற்கும் இஸ்லாமியருக்கும் பிறந்தவன்.

“புழுதி பறக்கும் வெளியில் அவர்கள் பெருங்கூச்சலுடன் பாய்கையில் அவர்கள் கால்களுக்கிடையில் பந்து உருள்கிறது. மூனு பேரும் பந்தாட்டத்துல கெத்து காட்றவங்க. அவங்க பகுல தூக்கினு ஓடுனா நாலா பக்கத்துலருந்தும் பிகில் பறக்கும்.… மாதா கோயிலு பிளேயர்ங்கதான் அப்பல்லா அப்பாடக்கரு.

அவங்களுக்கே ஆட்டங்காட்டுற கித்தாப்புக்காரனுங்க இந்த மூனு கில்லாடிங்களும். புட்பால் மேட்ச், டாவ் , சப்பி, சாராயம், ஜிஜ்ஜரு என்று வாழும்” மூன்று கால் பந்து ஆட்டக்காரர்களையும் அவர் மதறாஸ் தமிழில் (சரளமான கெட்ட வார்த்தைகளோடு) பேசிக்கொண்டு போகிறபோது… கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், தஞ்சைத் தமிழ் போல மதறாஸ் பாஷையும் கதை சொல்ல உகந்த ஒரு இலக்கியக் கருவியாக உயர்வடைகிறது.

2018-ல் நான் ‘சென்னைத் தமிழ்’ பற்றி கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கவிஞர் சிற்பியின் வழிகாட்டலில் ஒரு  கருத்தரங்கத்தை  நடத்தினேன்.

அக்கருத்தரங்கில் கரன் கார்க்கியையும் ஒரு கட்டுரை வாசிக்கச் சொன்னேன். அந்தக் கட்டுரையில்தான் தெரிந்தது கரன் கார்க்கி சென்னைத் தமிழைப் பயன்படுத்தி புனைவுகளை உருவாக்கியவர்களின் இடையே தனித்து நிற்பதின் ரகசியம் என்னவென்று.

புதுமைப்பித்தன், விந்தன், ஜெகச்சிற்பியன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோர் சென்னைத் தமிழில் சொன்ன கதைகளில் சாதிக்கப்படாத ஒன்றை கரன் கார்க்கி சாதிக்கிறார்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் ”மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலை“ என்று சென்னை மயிலாப்பூரைப் பாடியபோது இருந்த தமிழ், கரன் காரக்கியின் நாவலில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளுடன் கலந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆகியோரின் வருகையில் புதிய வார்த்தைகளோடு வீரியம் பெற்று மதறாஸ் பாஷையாக உருவாகி நிற்கிறது.

கரன் கார்க்கி மதறாஸ் பாஷையில் தன் கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது சென்னையின் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களோடு பழைய சென்னை நகரம் தானும் ஒரு கதாபாத்திரமாக உயர்ந்து நிற்கிறது.

தொல்காப்பியர் திணைக்கோட்பாட்டில் நிலம், பொழுது ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கரன் கார்க்கி தன் நாவல்களில் கொடுக்கிறார்.

சுருக்கமாகச் சொல்வதெனில் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக ‘சட்டைக்காரி’ எனும் கரன் கார்க்கியின் நாவல் வடிவம் கொண்டிருக்கிறது.

இந்நாவல் நாம் எதையெல்லாம் வெறுக்கிறோமோ அதையெல்லாம் நேசிக்கும் கலையை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

அடித்தள ஏழை ஆங்கிலோ – இந்தியர்களின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த நாவலில் ஸ்லெட்டா எனும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும், இயேசு என்கிற பெயர் கொண்ட ஒரு ரிக்‌ஷாக்காரருக்கும் நிகழும் காதலையும், ஒரு இஸ்லாமியருக்கும் ஒரு தலித்துக்கும் பிறந்தவனான மூசா எனும் கால்பந்தாட்டக்காரனுக்கும் பிறக்கும் காதலையும் இவர் பேசுகிறபோது சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால் கட்டப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்முடனேயே இருந்தும் நம் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து வரும் வடசென்னைவாசிகள் எனும் நிழல் மனிதர்களின் ஆத்மாவைப் பேசும் அபூர்வ நாவல் இது. இதனால் தமிழில் வெளிவந்த நாவல்களில் இது ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

சட்டைக்காரி: கரன் கார்க்கி

வெளியீடு: நீலம் பதிப்பகம்

விலை

-பா.மகிழ்மதி

Comments (0)
Add Comment