எழுதத் துடிக்கும் இளைஞர்களின் வேடந்தாங்கல்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 5

‘தாய்’ வார இதழி ஆசிரியர் வலம்புரிஜான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் கிறுத்துவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அது அல்ல இங்கு பிரச்சனை. அவர் எப்போதும் எல்லா மதங்களையும் நேசித்தவர்.

ஒருமுறை குமரன் பதிப்பகம் வைரவன் அவர்கள் சந்திக்க வந்தார்கள். வைரவன் இப்போது பப்பாசி சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இப்பொழுது சென்னை புத்தக கண்காட்சி பணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கிறார். அவர் இன்று காலையில் தொலைபேசியில் என்னை அழைத்தார்.

வலம்புரி ஜான் நினைவிருக்கிறதா என்றார்.

உடனே “எப்படி சார் மறப்பேன். அவர்தான் எங்களுக்கெல்லாம் வாழ்க்கை தந்தவர்” என்று சொன்னேன்.

“ஆமாம், ஆமாம்… ஆனால், ஒரு குறிப்பிட்ட சம்பவம் நீங்கள் தான் ஏற்படுத்திக் கொடுத்தீர்கள்” என்றார்.

‘என்ன’ என்று புரியாமல் கேட்டேன்.

வலம்புரி ஜான் ஒரு புத்தகம் எழுதி எனக்குத் தர வேண்டும் என்று சொன்னார்.
நிச்சயமாக எழுதித் தரச் சொல்கிறேன். உங்களுக்காகத் தானே. நீங்கள் என்னுடைய முதல் நூல் ‘நிழல் தேடும் மலர்’ கவிதை நூலைப் போட்டவர் ஆயிற்றே என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

வைரவன் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தாய் அலுவலகத்திற்கு வந்தார். நான் ஆசிரியர் வலம்புரிஜான் அவர்களிடம் வைரவன் வந்திருக்கும் செய்தியைச் சொன்னேன்.

ஆசிரியர் அப்போது காஞ்சிப் பெரியவரை பற்றிய சிந்தனையோடு கையில் ஒரு நூலையும் வைத்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் நின்றபடி இருந்து வலம்புரிஜான் என்னை நிமிர்ந்து பார்த்தபோது மறுபடியும் நினைவு படுத்தினேன் “எனது நூலை வெளியிட்ட பதிப்பாளர் வைரவன் வந்திருக்கிறார்” என்று.
“ஓ அப்படியா வரச்சொல்லுங்கள்“ என்றார்.

உள்ளே அழைத்துக்கொண்டு போனேன். அமர வைத்தார். தேனீர் கொடுத்தார். சாப்பிட்டு முடித்ததும் “சொல்லுங்கள்” என்றார்.

“எனக்கு ஒரு நூல் எழுதித் தரவேண்டும் என்று வைரவன் மெதுவாகக் கேட்டார்.

கொஞ்சமும் தாமதிக்காமல் வலம்புரிஜான், “நான் காஞ்சிப் பெரியவர் பற்றி எழுதுகிறேன்” என்றார்.

வைரவன் என்னைப் பார்த்து திருதிருவென்று விழித்தார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனக்குப் புரிந்து விட்டது.

வைரவன் எதிர்பார்ப்பது வேறு. வலம்புரிஜான் சொல்வது வேறு. இரண்டிலும் ஒரு முரண் இருப்பதை அந்தச் சூழல் எனக்குப் புரிய வைத்தது.

“சார் ஒரு நிமிடம். இவரை அழைத்துக்கொண்டு போய் பேசிவிட்டு வருகிறேன்” என்று சொன்னேன்.

அவர் சரி என்று சொல்லிவிட்டு, ஒரு காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டார்.

நான் வெளியே சென்று வைரவன் அவர்களைப் பார்த்துக் கேட்டேன் “என்ன யோசனை” என்று.

அவர் தயங்கினார்.

“நீங்கள் நினைப்பது புரிகிறது. வலம்புரிஜான் ஒரு கிறுத்துவர். அவர் எழுதுகிறேன் என்று சொல்வது இந்து மதத்தின் மிக முக்கிய மகான். இது எப்படி சரியாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்” என்றேன்.

“ஆமாம். இவரிடம் ஒரு கவிதை நூல், இல்லையென்றால் கட்டுரைகள், அரசியல் நூலாக இருந்தாலும் பரவாயில்லை விற்று விடுவேன்“ என்றார்.

நான் உடனே சொன்னேன்,

“வலம்புரிஜான் ஒரு வார்த்தைச் சித்தர். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் வலம்புரிஜானை போற்றுகிறவர்கள்.

அவர் காஞ்சிப் பெரியவரைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லுகிறார் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். நீங்கள் பேசாமல் ஒத்துக் கொள்ளுங்கள். வாசகர்களே பெருவாரியாக வரவேற்பார்கள்“ என்று சொல்லி ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

வலம்புரி ஜான் காகிதத்தில் எழுதி வைத்திருந்த ஒரு தலைப்பை எடுத்துக் காண்பித்து “இதுதான் புத்தகத்தின் தலைப்பு. புத்தக முகப்புப் பக்கத்தைத் தயார் செய்யுங்கள். ஒரு வாரத்தில் நான் எழுதித் தந்து விடுகிறேன்” என்று சொன்னார்.

அந்தத் தலைப்பு தான் “அந்தக இரவில் சந்தன மின்னல்“.

அந்த நூல் வெளிவந்த பிற்பாடு ஆன்மீகப் பகுதியிலிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. அதன்பின்பு தேவகோட்டைக்குச் சென்று ஆன்மீக உரையாற்றினர் என்பது வரலாறு.

வலம்புரிஜான் மீது மதம் கடந்த ஒரு பார்வையும் நேசமும் தமிழ் உலகத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது என்று சொல்லலாம்.

“ஏசுபிரான், நபிகள் நாயகம், முருகன், புத்தர், வள்ளலார் என யாவரும் அன்பொன்றே ஒருமைப்பாதை என வாழ்ந்தவர்கள். மதம் மனிதனுக்கு விளக்காக இருக்க வேண்டும்.
மதம் பிடித்து திரிவதற்காக அல்ல. இருளை விமர்சிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம்.” என்று மேடைதோறும் முழங்கியவர்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன்.

சோவியத் கலாச்சார மைய்யத்தில் 1982ல் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அந்த விழாவிற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், எஸ்.நல்லபெருமாள், எழுத்தாளர் மாலன், நெல்லை ராமகிருஷ்ணன் போன்ற மிகச் சிறந்தவர்கள் வந்து பங்கு பெற்ற நிகழ்வு.

அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசும்போது மிகவும் உயர்வாக சொன்னார் வலம்புரிஜான்.

இந்த நூலில் இருக்கிற கோபம் என்றுமே தமிழுக்கு உதவியாக இருக்கும் என்று உரக்க குரல் எழுப்பினார்.

கையில் அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவர் ஆற்றிய உரை இன்று கூட எனக்கு நினைவிருக்கிறது.

அவருக்குப் பிடித்துப் போனால் புதிய எழுத்தாளர்கள் என்று கூட பார்க்க மாட்டார். அவரை உச்சத்தில் கொண்டுபோய் ஏற்றி வைத்து அழகு பார்ப்பார்.

அப்படித்தான் அந்த நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் வெளியிட்ட புத்தகத்தின் பெயரை நீங்கள் இப்போது கேட்டாலும் ஆச்சரியப்படுவீர்கள். ”கதவைத் திற காற்று வரட்டும்”. அந்த நூலை எழுதியவர் சாட்சாத் நான் தான்.

பலபேர் இப்போதும் சொல்கிறார்கள். அதை நீங்கள் எழுதவில்லை. நித்யானந்தா எழுதிய நூல் தானே என்று எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.

நான் 1982 இல் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பு ‘கதவைத்திற காற்று வரட்டும்‘.
அது பிரபலமான ஒரு வார இதழில் நித்யானந்தா அவர்கள் தொடருக்காக இந்தத் தலைப்பு எடுத்தாளப்பட்டது.

பலர் கேட்டார்கள் ‘நீங்கள் ஏன் என்னுடையது என்று உரிமை கோரவில்லை‘ என்று.
நான் சிரித்துக் கொண்டேன். இப்போது கைலாசாவில் இருந்து உலகத்திற்கு பல செய்திகளைச் சொல்கிறார்.

நித்யானந்தா கேட்டாலும் இதைத்தான் சொல்வேன். நானும் திருவண்ணாமலைக்காரன் ஆயிற்றே.

சொற்களையும் சிந்தனையையும் யார் தனது மட்டுமே என்று சொல்லிவிட முடியும்?

அது பரந்தவெளிக்குச் சொந்தமானது. பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வளவு தான். நேற்று யாருடையதோ.. இன்று நம்முடையது.. நாளை வேறு யாருடையதோ ஆகப்போகிறது.. என்றுதான் எனக்கு இப்போது சொல்லத் தோன்றுகிறது.

இப்போது எல்லோரும் பாரதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். அதேபோல் ‘உரத்த சிந்தனை’ அமைப்பின் மூலம் ‘பாரதி உலா’ என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரதி சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கிறார் உதயம் ராம். என்னைப் பல இடங்களில் பேச அழைத்துச் செல்கிறார்.

ஆனால், வலம்புரிஜான் எண்பதுகளிலேயே தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரதியார் விழா நடத்த ஆயத்தமாகி எல்லா வேலைகளையும் செய்தார்.

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார்.

கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியின் துணையோடு பிரம்மாண்டமான ஒரு பாரதி விழாவை நடத்தி சொற்பொழிவை நிகழ்த்தினார்.

பாரதியின் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கவிதையை பிரம்மித்து பேசிக் கொண்டே இருந்தார்.

அதோடு நிற்காமல் ‘பாரதி ஒரு பார்வை‘ என்று ஒரு அருமையான புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

அந்த நூலில் அவர் சொல்ல வந்த கருத்து இதுதான். ஏழு வயதில் கவிதை எழுதத் தொடங்கினார் பாரதி. 14 வயதில் திருமணம் செய்து கொண்ட பிறகு, எட்டு ஆண்டுகள் அவன் பேனாவைத் தொடவில்லை. இருபத்தி நான்கு வயதில் அரசியல் பற்றிய கவிதைகளை எழுதத் துவங்கி 39 வயதில் இறந்து விடுகிறான்.

இடைப்பட்ட காலத்தில் அவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று ஏராளம். எப்படி இந்த குறுகிய வயதில் அவரால் எழுத முடிந்தது.

தன்னுடைய குடும்பத்தை மறந்துவிட்டு சமூகத்தின் மேல் இவ்வளவு ஈடுபாடு கொண்ட ஒரு கவிஞன் உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது என்று மெய்மறந்து அவர் பேசியும் எழுதியும் இருந்தார்.

இதுபோன்று ஒரு பாரதியைப் பற்றிய நூல் வேறு ஏதும் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது அப்படிப்பட்ட மிகச்சிறந்த நூல்களை உருவாக்கினார் வலம்புரிஜான்.

நான் அவரை வியந்து பார்ப்பதற்கு ஒரு சம்பவம் இருந்தது.

மாவட்டம் தோறும் நடக்கும் பாரதி விழா போல் கடலூரிலும் ஒரு பெரிய பிரமாண்டமான பாரதி விழா நடைபெற ,ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வலம்புரிஜான் என்றால் கூட்டம் சேரும் வீரிய பேச்சுக்கள், சிந்தனைச் சொற்கள், புதிய சொற்கள் தானாக வந்து விழும். அதனால் தான் அவரை வார்த்தை சித்தர் வலம்புரிஜான் என்று சொல்வார்கள்.

அதுவும் கடலூர் ஜெயகாந்தன் பிறந்த ஊர். படித்தவர்களும் பாமரர்களும் இரண்டறக் கலந்து கேட்கக் கூடிய மக்கள் நிறைந்த ஊர்.

பெரிய எதிர்பார்ப்போடு ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.

அந்த விழாவிற்கு திடீரென வலம்புரிஜான் அவர்கள் வர முடியவில்லை. எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் வரவில்லை என்றதும் விழாவையும் நிறுத்த முடியாத ஒரு சூழல்.

அலுவலர் குமார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்த என்னை ஆசிரியர் உங்களை அறைக்கு வரச் சொன்னார் என்றார். நான் புரியாமல் சென்று நின்றேன்.

“ராசி கடலூரில் பாரதி விழா இருக்கிறது. நான் செல்ல இயலவில்லை. என் இடத்திலிருந்து நீ உரையாற்றி, விழாவுக்கு சிறப்பு சேர்த்து விட்டு வா“ என்றார். நான் அதிர்ந்து விட்டேன்.

நான் தயங்கிபடி, “அது எப்படி சரியாக இருக்கும். வேறு அறிஞர்களை யாராவது அனுப்பினால் சிறப்பாக இருக்கும்” என்றேன்.

அவர் என்னை உற்றுப் பார்த்து, “சரியாக இருக்கும். நீ சென்று பேசி விட்டு வா“ என்றார்.

அவருடைய வார்த்தையை மனதில் தாங்கி நான் கடலூரில் 40 நிமிடம் பாரதியைப் பற்றி உரையாற்றினேன். அவர் என்மேல் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றினேன் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னுடன் பணி செய்யும் ஒருவரை உயர்த்திப் பார்க்கிற குணம் என்பது பலருக்கு கிடையாது. ஆனால், வார்த்தைச் சித்தருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கும் இந்த குணம் தான் அவரை இன்று வரை பேச வைத்துக்கொண்டிருக்கிறது.

அவரைச் சுற்றி எப்போதும் நான்கைந்து கவிஞர்கள் இருப்பார்கள் அல்லது நான்கைந்து புத்தகங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதுதான் வரும்போது என்னுடைய அடையாளம்

வலம்புரி ஜான் அவர்கள் தாய் வார இதழ் வெளியில் கிடைப்பதற்கு முன்பாக அச்சிடும் முதல் சில பிரதிகளை உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஆர்.எம்.வீரப்பன், பொன்னையன், கிருஷ்ணசாமி, செல்வி ஜெயலலிதா போன்றவர்களுக்கு அனுப்பி விடுவார். அவர்கள் முதலில் பார்த்து விடுவார்கள் இதுதான் வழக்கம்.

எவ்வளவு வேலை இருந்தாலும் புரட்சித் தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த போதும் கூட இதழைப் படித்துவிட்டு அதில் சிறப்பாக எழுதுகிற பலரை பெயர் சொல்லி பாராட்டி இருப்பதை பல முறை வலம்புரிஜான் பகிர்ந்து கொள்வார்.

பல பேருக்கு மகிழ்வான செய்தி. ஆனால் ஒருவருக்கு திடுக்கிடும் செய்தியாக மாறிவிட்டது அவர்தான் நக்கீரன் கோபால்.

இப்போது மிகப் பிரபலமாக இருக்கிற நக்கீரன் கோபால் அவர்கள் தாய் வார இதழில் எங்களோடு பணியாற்றியது ஒரு மகிழ்வான செய்தி. அல்லது இப்படியும் சொல்லலாம். நக்கீரன் கோபால் பணியாற்றிய போது நாங்களும் உடன் பணி செய்தோம். இளைஞர்களின் வேடந்தாங்கலான தாய் அலுவலகம் அவரை வார்த்தெடுத்தது எனலாம்.

கோபால் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றினார். அவருடன் மோகன்தாஸ், பவித்ரா போன்றவர்களும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் என்னுடைய பேட்டிக் கட்டுரை வருகிறபோது அவருடன் கூடவே இருந்து கொண்டு எனக்கு சரியாக செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.
அப்படி ஒரு நாள் திடீரென்று வலம்புரிஜான் அவர்கள் நக்கீரன் கோபாலை அழைத்தார்.

ஆசிரியர் தன்னுடைய அறைக்குள்ளே ஒருவரை அழைக்கிறார் என்றால் அது நிச்சயமாக முக்கியமான காரணமாகத்தான் இருக்கும். அப்படித்தான் அப்போது செயல்பாடுகள் இருந்தன.

நக்கீரன் கோபால் என்ன என்று தெரியாமல் உள்ளே போனதும் உட்கார் என்று சொன்னார்.

உடனே ஒரு போன் கால் வந்தது.

வந்த போனை வலம்புரி ஜான் அவர்கள் கோபாலிடம் தந்து “…பேசுவார்கள். நீங்கள் சாரி கேட்டு விட்டுங்கள்” என்று சொன்னார்.

இவருக்கு ஒன்றும் புரியவில்லை. போனை வாங்கி, பேசுவதைக் கேட்டார்.
“நீங்கள்தான் அந்த கட்டுரைப் பக்கத்தை தயார் செய்தீர்களா?“ என்று கேட்டிருக்கிறார் எதிர்முனையில் பேசியவர்.

ஆமாம் என்று மகிழ்ச்சியாக சொன்னார் கோபால்.

ஆனால், மறுமுனையில் இருந்து வந்த தகவல் வேறு. கோபம் கோபமாக வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக நக்கீரன் கோபாலிடம் ஒரு பழக்கம் உண்டு. தனக்கு சரி என்று பட்டால் அதை நேரடியாகவும் தைரியமாகவும் பேசுபவர். பயந்து ஒளிபவர் அல்ல.

அப்போதும் அப்படித்தான். அந்த போனுக்கு அவர் மசியவில்லை; பயப்படவில்லை; சாரி கேட்கவில்லை.

ஆனால் இடையே போனை வாங்கி வலம்புரிஜான் சமாதானப்படுத்தி வைத்துவிட்டார்.

மேசையில் இருந்த தாய் பத்திரிகையை கோபால் முன் தூக்கிப்போட்டு இதை நீங்கள் தானே லே-அவுட் செய்தீர்கள் என்றார்.

ஆமாம் என்று அவரும் பதில் சொன்னார்.

இந்த தொடர் யாருடையது தெரியுமா? செல்வி ஜெயலலிதா எழுதும் தொடர். நீங்கள் அதில் கவனக்குறைவாக ஒரு பிழை செய்து விட்டீர்கள். அதை நீங்கள் செய்திருக்கக் கூடாது என்றார்.

கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நான் என்ன செய்தேன்? ‘நெஞ்சிலே ஒரு கணம்‘ என்று தொடர்புடைய தலைப்புக்குக் கீழே ஜெயலலிதா என சரியாகத் தானே போட்டிருக்கிறேன். என்ன குறை?” என்று சொன்னதும்,

“மறுபடியும் என்ன பேசுகிறீர்கள் நீங்கள். செல்வி என்று போட்டிருக்க வேண்டும் அல்லவா? இது பிழை தானே” என்று கேட்டார் வலம்புரிஜான்.

இந்தப் பிரச்சனைக்கு தான் இவ்வளவு வசவு போனில் கிடைத்ததா. முதலிலேயே நீங்கள் சொல்லியிருந்தால் நான் போட்டிருப்பேன். அவர் பெயர் அதுதானே என்பதால் நான் அப்படி செய்தேன் என்று சொல்லிவிட்டு கோபால் கிடுகிடு என்று சென்றுவிட்டார்.

இதற்கு முன் குமுதம் வார இதழில் எழுதிய தொடர். அதை பாதியில் நிறுத்திவிட்டு ‘தாய்’ வார இதழில் தொடர்ந்து எழுதினார். அதற்குப் பெயர்தான் ‘நெஞ்சில் ஒரு கனல்’ என்கிற அவரது தொடர்.
அந்தத் தொடரின் மூலமாக வாசகர்கள் அதிகமாக சேர்ந்தார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமான செய்தி.

சில சமயம் அரசியல் சூழல்களில் சிரமப்படுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வுதான் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நிகழ்ந்தது.

எவர் மேலும் குற்றம் இல்லை என்றாலும் அரசியல் பார்வை குறித்த சில சம்பவங்கள் இப்படியாக ஒரு சூழலை உருவாக்கி விடும் என்பதை பின்னால் வலம்புரிஜான் அவர்கள் எடுத்துச் சொன்னபோது புரிந்தது.

எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடன் பணியாற்றுகிறவர்களை எப்படியும் விட்டுக் கொடுத்து பேச மாட்டார்.

இந்தச் சம்பவத்தை சமீபத்தில் மாணவர் நகலகம் சௌரிராஜன் அவர்களோடு நக்கீரன் அலுவலகத்துக்கு சென்றபோது சொல்லிச் சொல்லி கோபால் நெகிழ்ந்தார்.

படைப்பாளிகள் எழுதுவதை வலம்புரிஜான் அதிகம் திருத்துவது இல்லை.

தலைப்பை அவர் தான் முடிவு செய்வார் என்பதால் அந்த தலைப்பு படிப்பவரை கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற மனநிலையில் கவித்துவமாக எழுதிக் கொடுங்கள் என்பார்.

கோபால் அவர்களும் நானும் இரவு முழுதும் பணியாற்றிய நேரங்களும் உண்டு. ஆனால் அதை கவனத்தில் வைத்துக் கொண்டு உரிய நேரத்தில் பாராட்டுவது வலம்புரிஜான் பழக்கம்.

இப்படி அலுவலகத்தில் பணியாற்றிய யாரைக் கேட்டாலும் அவரைப் பற்றி ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு நல்ல உள்ளம் அவருடையது.

சரி, வலம்புரிஜான் மூலம் எனக்கு ஒரு எழுத்தாளர் கொடுத்த நெருக்கடியை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

(தொடரும்…)

29.12.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment