– ரயில்வேதுறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
யானை வேட்டை தொடர்பான வழக்குகளை, தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவுடன், சி.பி.ஐ.,யும் இணைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘கேரளா, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தான், யானைகள் அதிகம் உள்ளன. ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் செய்திகளும் அதிகம் வருகின்றன’ என்று வேதனை தெரிவித்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரயில்வே சார்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜராகி, ”யானைகள் கடக்கும் பகுதியில், வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் கடப்பதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தண்டவாளங்களுக்கு அடியில், ஏழு கோடி ரூபாய் செலவில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தியதால் 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, பெரும்பாலும் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் தான் இந்த விபத்துக்கள் நடப்பதாகக் கூறிய நீதிபதிகள், விலங்குகள் நடமாட்டத்தை அறிய ரயில் இன்ஜினில் தெர்மல் கேமராக்கள் பொருத்தலாம் எனவும், தண்டவாளங்களை ஒட்டி சூரிய மின்சக்தி வேலி அமைக்கலாம்’ எனவும் யோசனை தெரிவித்தனர்.
வனத்துறையும், ரயில்வே துறையும் ஆலோசித்து, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.