எல்லோரும் நம்மை விரும்புவது நல்லதா?

நூல் வாசிப்பு : 

*

வெ.இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூலுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் முன்பு எழுதிய விமர்சனத்தில் இருந்து ஒரு பகுதி:

“அளவிலும், உள்ளடக்கத்திலும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு நியாயம் செய்யும் அடர்த்தியிலும் பெரிய அளவில் 600 பக்கங்களுக்கு மேலாக வெளிவந்திருக்கிறது ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற பெயரில் வெளிவந்துள்ள வெ.இறையன்புவின் ஆய்வு நூல்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பித்துள்ள இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ஏராளமான புகைப்படங்கள், ஓவியங்கள், நூலின் உள்ளடக்கத்தோடு ஒன்றச் செய்கின்றன.

கன்பூசியஸின் கருத்து:

சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸின் கருத்து ஒன்றைச் சொல்லித் தலைமைப் பண்பைத் திசை காட்டுகிறார் இறையன்பு.

சீடன் : நகரத்தில் உங்களை வெறுத்தால்?

கன்பூசியஸ் : எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல.

சீடன் :  உங்களை எல்லோரும் விரும்பினால்?

கன்பூஷியஸ் : எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல.

சீடன் :  அப்படி என்றால்?

கன்பூஷியஸ் :  நல்லவர்கள் நம்மை நேசிக்க வேண்டும். கெட்டவர்கள் வெறுக்க வேண்டும். அதுவே சரியான வாழ்க்கை முறை.

ஆரம்பத்தில் அடக்கு :

முள் மரம் இளமையாக இருக்கும் போதே, அதை வெட்டி எறிய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை ஒரு கதையின் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர்.

“முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம்.

1918 செப்டம்பர் 28.

டான்டே என்கிற பிரிட்டிஷ் வீரன் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தான்.

ஒரு பதுங்கு குழியில் கார்பரல் ஒருவன் குற்றுயிருடன் ரத்தம் வழியக் கிடந்தான்.

அன்று பல பேரைச் சுட்டுக் கொன்ற அவனுக்கு, அந்தக் கார்பரனைச் சுட்டுத்தள்ள 2 நிமிடங்களே போதும். ஏனோ அவன் அதைச் செய்யவில்லை.

1940 ஆம் ஆண்டு ஒரு தொழிற்சாலைக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார் டான்டே.

நாஜிப்படையினர் குண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த அழிவைக்கண்டு கண்ணீர் வடித்தார் டான்டே.

அந்தக் கார்பரல் பிற்காலத்தில் என்ன ஆகப்போகிறான் என்பது அப்போதே தெரிந்திருந்தால், அவனை அன்றே கொன்றிருப்பேன் என்று நினைத்துக் கொண்டார்.

ஏனெனில் டான்டே பரிதாபப்பட்டு விட்டுவிட்ட அந்த கார்பரல் தான் ஹிட்லர்.

Comments (0)
Add Comment